சொந்த வீடு

புதிய அரசு என்ன செய்யப் போகிறது?

கே.சுகுமாரன்

நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் நாட்டின் பல துறைகளில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள திட்டங்களைப் புதிய அரசு எவ்வாறு நிறைவேற்றப் போகிறது என்பது சமூகத்தில் பல நிலைகளில் உள்ளவர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அதுபோல நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) முக்கியப் பங்கு வகிக்கும் ரியல் எஸ்டேட் துறையிலும் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

நம்முடைய எதிர்பார்ப்புகளைப் பட்டியலிடுவதற்கு முன்பு பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் அளித்த வாக்குறுதிகளை ஆராய்வோம். தேசியக் கட்சிகள் எல்லாம் தங்கள் தேர்தல் அறிக்கைகளில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்தன. உதாரணமாகச் சமூகத்தில் பலவீனமான மக்களைக் கவரும் விதத்தில் எல்லோருக்கும் கல்வி, சிறுபான்மையினருக்கும் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளுக்கே முக்கியத்துவம் கிடைத்தன.

ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் உட்கட்டமைப்பு வசதி, வீடு ஒதுக்கீடு, மலிவான கடன் போன்ற திரும்பத் திரும்ப தேர்தல் பிரச்சாரங்களில் சொல்லப்படும் விஷயங்கள் இம்முறையும் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் அந்தத் தொகுதியில் உள்ள சில சாலை வசதியின்மை, குடிநீர்ப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளைப் பற்றிப் பேசினார்கள்.

சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களைப் பொறுத்தவரை எல்லாக் கட்சிகளும் பேசியது, நகரங்களில் உள்ள வீட்டுப் பற்றாக்குறை பற்றிதான். இந்தப் பின்னணியில் ரியல் எஸ்டேட் துறைகளில் என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

ரியல் எஸ்டேட் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் பங்களிக்கிறது. அதனால் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி தொடர்வதற்கு எந்த அரசும் ஆதரவு அளிக்கும். குறைந்தபட்சம் அந்தத் துறை புதிய உத்வேகத்தை எட்டும் வரையிலாவது இந்த ஆதரவு தொடரும். அதாவது இப்போதிருக்கும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள வரிச் சலுகைகள் மேலும் தொடரும்.

நிலம் கையகப்படுத்துதல் மசோதா சட்டமாகும் பட்சத்தில் நிலவுடைமையாளருக்கும் நிலத்தைப் பயன்படுத்து பவருக்கும் இடையில் யதார்த்தமான சமநிலை அமையும். புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றால் நமது வீட்டுக் கட்டுமான முறைகளில் புதிய முறைகள் கொண்டுவருவது அவசியமாகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய கட்டுமான முறைகளுக்கு அரசு பொருளாதர வசதிகளைச் செய்து தர வேண்டியதும் இப்போதைய அத்தியாவசியம். மெட்ரோ நகரங்களில் நிலப் பயன்பாடு குறித்துப் புதிய விதிகள் வகுக்கப்படலாம்.

ரியல் எஸ்டேட் துறைக்குத் தொழில் துறை அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கை நிறைவேறும் வாய்ப்பும் உள்ளது. சேவை வரி, பத்திரப் பதிவுக் கட்டணம், முத்திரைத் தாள் விலை ஆகியவை குறைக்கப்படலாம்.

எதிர்பார்ப்புகள் வானளாவியவை. அதுபோல பதவியேற்றுள்ள புதிய அரசின் முன்னே உள்ள சவால்களும் வானளாவியவை.

© தி இந்து (ஆங்கிலம்)

சுருக்கமான மொழிபெயர்ப்பு: ஆர். ஜெய்குமார்

SCROLL FOR NEXT