சொந்த வீடு

நாளைய நகரம்: உதயமாகுமா ஒரு புதிய கோவை- கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி

ஜெய்

தமிழகத்தில் சென்னையை அடுத்த இரண்டாவது பெரிய தொழில் நகரம் கோயம்புத்தூர். பஞ்சாலைகள், இயந்திரவியல் தயாரிப்பு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் கொண்ட தொழில் வளம் மிக்க ஊர். இங்கு கிடைக்கும் சிறப்பான கல்விக்காகவும், மருத்துவ வசதிக்காகவும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் இந்த ஊருக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

இதுமட்டுமல்ல தமிழக விவசாயத்தின் தலைநகர் என்றும் கோயம்புத்தூரைச் சொல்லலாம். மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் உள்ளதால் ஆண்டு முழுவதும் இங்கு இதமான சீதோஷ்ணநிலை நிலவும் ஊர். இந்தக் காரணங்களால்தான் ரியல் எஸ்டேட் கொடி கட்டிப் பறக்கும் முக்கியமான ஊராகவும் கோயம்புத்தூர் இருக்கிறது.

கோவை ரியல் எஸ்டேட்

இந்திய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தபோதிலும் கோவை ரியல் எஸ்டேட் ஓரளவு தாக்குப் பிடித்து இருந்தது. சென்னைக்கு அடுத்த பெரும் நகரமாக இருந்தாலும் கோவை இரண்டாம் நிலை நகராகவே இன்னும் இருந்துவருகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு தேசிய அளவில் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் நடத்திய ஆய்வில் கோவை, கொச்சி போன்ற நகரங்கள்தான் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு உகந்த நகரங்கள் எனப் பரிந்துரைத்தனர்.

சாய்பாபா காலனி, ராம் நகர் போன்ற கோவையின் மையப் பகுதிகளில் வீடு வாங்குவதற்கான வாய்ப்பு குறைவாகத்தான் உள்ளது. இந்தப் பகுதிகளில் தனி வீடுகள்தான் அதிகமாக உள்ளன. அவை அல்லாமல் உயர்தர அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் உள்ளன. அதனால் நடுத்தர மக்கள் அவினாசி சாலைப் பகுதிகள், மருதமலை சாலைப் பகுதிகள் போன்ற கோவை புறநகர்ப் பகுதிகளை நாடுகிறார்கள். இதில் சத்தியமங்களம் சாலையில் உள்ள சரவணம்பட்டிப் பகுதி மென்பொருள் நிறுவனப் பணியாளர்களின் புகலிடமாக மாறியுள்ளது என்கிறார் கோவைப் பொறியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆத்தப்பன் பழநி.

அதனால் அந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில் ஓரளவு சீராக உள்ளது. மருதமலை சாலையில் உள்ள வடவள்ளி பகுதிகளிலும் மக்கள் வீடுகள் வாங்க விரும்புகின்றனர். வடவள்ளி தாண்டி பாரதியார் பல்கலைக்கழகம் செல்லும் சாலையிலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றன. திருச்சி சாலையில் பெரிய வீட்டுக்குக் குடியிருப்புத் திட்டம் ஒன்று எழும்பிவருவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் திருச்சி சாலையை விட அவினாசி சாலையில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் அத்துறையைச் சார்ந்த செந்தில்குமார்.

எப்படி இருக்கிறது தொழில்?

“நிலையில்லாத கட்டுமானப் பொருள்களின் விலை இவை எல்லாமும் கோவை ரியல் எஸ்டேட் தொழிலையும் கட்டுமானத் தொழிலையும் வெகுவாகப் பாதித்துள்ளது” என்கிறார் கோவைப் பொறியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆத்தப்பன் பழநி. இதுமட்டுமல்லாது அரசு வழிகாட்டி மதிப்பை உயர்த்தியதும் இதன் காரணங்களுள் ஒன்றாகவும் சொல்லப்படுகிறது.

“வாடிக்கையாளார்களுடன் ஒப்பந்தம் போடும்போது உள்ள கட்டுமானப் பொருள்களின் விலை, ஒப்பந்த காலம் முடிவடைவதற்குள் கட்டுமானப் பொருள்களின் விலையை ஏற்றிவிடுகிறார்கள். இதனால் ஏற்படும் நஷ்டத்தை கட்டுநர்கள் ஏற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது” என்கிறார் கோயம்புத்தூர் கட்டுமானர்கள், ஒப்பந்தக்காரர்கள் சங்கச் செயலாளர் சப்தரிஷி.

கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க ஓர் ஒழுங்குமுறையை அரசு கொண்டுவருவதன் மூலம் இந்த விலையேற்றதைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் கட்டுமானத் தொழில் நிபுணர்கள்.

SCROLL FOR NEXT