சொந்த வீடு

தூரம் அதிகமில்லை...

யுகன்

சென்னை மாநகர எல்லைக்குள் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக்கூட வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்ததால்தான், புறநகர்களை நோக்கி மக்கள் மனை வாங்கி வீடு கட்டிக் கொள்ளலாம் என்னும் நிலைக்குச் செல்ல நேர்ந்தது. இப்படித்தான் ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூர் வரை ரயில் நிலையங்களுக்கு அருகில் இருக்கும் ஊர்களில் இடங்கள் அதிகம் விற்பனை ஆகிவருகின்றன. வீடுகளும் பெருமளவில் கட்டப்பட்டன. அதேபோல, அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர், நந்தியம்பாக்கம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி வரை மனைகள் வாங்கி வீடுகள் கட்டும் போக்கு அதிகரித்து வருகின்றன.

பிரதான நகரத்தின் முக்கிய இடங்களில் கட்டி 15 ஆண்டுகளான அடுக்குமாடிக் குடியிருப்புகளின் (இரண்டு அறைகள் கார் நிறுத்தும் வசதியுள்ள) மிக அதிகமாக விற்கப்படுகிறது. ஆனால் அதேநேரத்தில், அதிநவீன அடுக்குமாடிக் குடியிருப்புகளில் காணப்படும் நடைப்பயிற்சிக்கான வசதிகள், நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம், சிறு அரங்கம், சமையல் எரிவாயுவை வீட்டுக்குள்ளேயே குழாயின் மூலமாகக் கொண்டுவரும் வசதி போன்றவை இல்லாமல் இருக்கும். இந்த நிலைமை நகர விரிவாக்கத்தின் காரணமாக மாற ஆரம்பித்தது. புறநகர் பகுதிகளில் மனை வாங்கும் போக்கு மாறி, அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பெருக்கம் அதிகரித்தது இந்தத் தருணத்தில்தான்.

நகரத்துக்குச் சற்று வெளியே இருந்தாலும் பரவாயில்லை, மேற்கூறிய எல்லா வசதிகளும் அந்தக் குடியிருப்பில் கிடைக்கிறது எனும்போது, தூரத்தைக் கணக்கில் எடுக்காமல் மக்கள் பெரிதும் அந்தக் குடியிருப்புகளிலேயே வீடுகளை வாங்குவதற்குத் தயாராகும் போக்கு இன்றைக்கு அதிகரித்து வருகிறது.

இதற்கு முக்கியமான இன்னொரு காரணம், விலை. பிரதான நகரத்திலிருந்து 25, 30 கி.மீ. தொலைவில் அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்திருந்தாலும், அந்த வசதிகளுடன் நகரத்தில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்குவதற்கு அங்கு முதலீடு செய்வதைப் போல் மூன்று மடங்கு தொகையைக் கொடுக்க வேண்டும் என்னும் நிலை இருக்கிறது. இதன் காரணமாகவும் நகரத்துக்கு வெளியே தொலைவைக் காரணம் காட்டாமல் பலர் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை வாங்குவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

புறநகரில் புதிதாக வாங்கியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் உடனடியாக குடியேறாவிட்டாலும், அதை வாடகைக்கு விடுவதன் மூலம் மாதம் ஒரு வருமானம் வருமே என்று நினைப்பவர்களும் பெரிதும் வாங்குகின்றனர்.

பொதுவாகவே அடுக்குமாடி குடியிருப்புகளின் மறுவிற்பனையில் பாதிப்பு இல்லை என்பதும் ஒரு முக்கியமான காரணம் என்கிறார் கே.கே.நகர் பகுதியிலிருக்கும் கட்டுமானப் பொறியாளர் ஒருவர்.

மேலும், அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவதாக இருந்தால் தரமான கட்டுநரிடமிருந்து வாங்குவது நல்லது. அப்போதுதான் சரியான நேரத்தில் வீடு கைக்குக் கிடைக்கும்.

SCROLL FOR NEXT