சொந்த வீடு

சட்டச் சிக்கல்: அப்பா சொத்தில் மகள்களுக்குப் பங்கு உண்டா?

வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன்

எனது அப்பா பெயரில் 2.66 ஏக்கர் நிலம் உள்ளது. எனக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காக்களும் உள்ளார்கள். நாங்கள் முஸ்லிம். அந்தச் சொத்துக்கு எனது 2 அக்காக்களுக்கும் பங்கு உண்டா?

- முகைதீன் அப்துல் காதர்

உங்கள் அக்காக்கள் இருவருக்கும் அந்த சொத்தில் பங்கு உண்டு. அவர்கள் இருவருக்கும் சேர்த்து மொத்தத்தில் மூன்றில் ஒரு பாகம் உரிமையுள்ளது. மீதி இருக்கும் மூன்றில் இரண்டு பாகச் சொத்தில் உங்களுக்கும் உங்கள் அண்ணனுக்கும் சம உரிமை உள்ளது.

என்னுடைய பாட்டி பெயரில் ஒரு சொத்து இருக்கிறது. என் பாட்டி இறந்துவிட்டார். அவருக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள். அவர்களுள் நால்வர் இறந்துவிட்டனர். இப்போது இடத்தை நாங்கள் விற்க முடியுமா?

- நாகராஜன், கோயம்புத்தூர்

உங்கள் கேள்வியில் போதுமான தகவல்கள் இல்லை. இறந்தவர்கள் யார் யார், அவர்களில் யார் யாருக்கு திருமணம் ஆனது, அவர்களில் யார் யாருக்கு எத்தனை பிள்ளைகள் உள்ளனர், தாத்தா உயிருடன் உள்ளாரா, நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் ஆகிய தகவல்கள் கொடுத்தால் மட்டுமே உங்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியும்.

என்னுடைய தந்தைக்கு மனைவிமார் இருவர். முதல் மனைவிக்கு ஒரு மகன். இரண்டாவது மனைவிக்கு இரு மகன்கள். முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்துவிட்டார். இப்போது என் தந்தை தன் சொந்த சம்பாத்தியத்தில் இரு வீடுகளும் ஒரு கடையும் வாங்கியுள்ளார். என் தந்தையின் முதல் மனைவியின் மகன் இந்தச் சொத்தில் உரிமைகோர வாய்ப்பிருக்கிறதா?

- கார்த்தி ராஜ்

உங்கள் தந்தை உயிருடன் இருக்கிறாரா என்பதை நீங்கள் தெரிவிக்கவில்லை. உங்கள் தந்தை உயிருடன் இருக்கும் பட்சத்தில் அவர் உயிரோடு இருக்கும் வரை அந்தச் சொத்தில் யாருமே உரிமை கோர முடியாது. ஆனால் உங்கள் தந்தை காலமாகியிருந்தால் உங்கள் தந்தையின் முதல் மனைவியின் மகன் அந்தச் சொத்தில் உரிமை கோரச் சட்டத்தில் இடமுண்டு.

வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்குகேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார்.கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: sonthaveedu@thehindutamil.co.in

தபாலில் அனுப்ப: சொந்த வீடு, தி இந்து (தமிழ்), கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை - 600002

SCROLL FOR NEXT