கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் முக்கியமான கட்டிடவியல் வல்லுனரான சார்லஸ் கொரிய மறைந்தார். இது ஈடுசெய்ய முடியாத இழப்பு. இந்தியாவின் முன்னணி பத்திரிகைகள் அவருக்குப் புகழஞ்சலி செய்தன. சார்லஸ் கொரிய இறப்பதற்கு நான்கு நாட்கள் முன்னர் மறைந்துபோன சிற்பக்கலைஞர் நேக் சந்தின் மரணமும் இந்தியா நினைவுகூர வேண்டிய மரணமாகும்.
குப்பை என்று தூர எறியப்பட்ட பொருட்களிலிருந்து தனது சிற்பங்களை உருவாக்கியவர் நேக் சந்த். உடைந்த பாத்திரங்கள், மிதிவண்டிச் சட்டகங்கள், குப்பிகள், கண்ணாடி வளையல்கள், சிப்பிகள், நொறுக்கப்பட்ட குளியலறைப் பீங்கான்கள் ஆகிய வற்றை வைத்து அவர் தனது விந்தைத் தோட்டத்தை உருவாக் கினார். சண்டிகரில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கிய சிற்பங்களும் கட்டிடவியலும் சேர்ந்த ‘ராக் கார்டன்’ 2000 சிற்பங்களைக் கொண்டது.
ராணிகள், அரச சபையினர், யாசகர்கள், அமைச்சர்கள், பள்ளிக் குழந்தைகள், நாடோடிகள், நடன மங்கைகள், குரங்குகள், யானைகள், ஒட்டகங்கள் என இந்தப் பூமியின் சகலத் தரப்பினரும் நிறைந்த தோட்டம் நேக் சந்தினுடையது. சிறிதும் பெரிதுமான வளைவுகள் விதானங்கள், நீர்விழ்ச்சிகளும் இத்தோட்டத்தில் உண்டு.
இந்தப் பாறைத் தோட்டத்தை, நகரத்துக்கு மத்தியில் மிகவும் ரகசிய மாகவே உருவாக்கத் தொடங்கினார் சந்த். 1952-ல் சண்டிகர், சுதந்திர இந்தியாவின் முதல் நவீன நகரமாக உருவாக்கப்பட்டபோது, சாலை ஆய்வாளராகப் பணியாற்றியவர் நேக் சந்த். சண்டிகர் போன்ற மாபெரும் நகரத்தை உருவாக்கும் முகமாக சண்டிகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் கட்டிடக் கழிவுகள் அனைத்தும் கொட்டப்பட்டதைப் பார்த்து வருத்தமடைந்தார்.
அந்தக் கழிவுகளையும் சிறிதும் பெரிதுமாகத் தான் சேகரித்த பாறைக்கற்களையும் சேர்த்து நகரத்தின் நடுவிலேயே யாரும் புழங்காமல் இருந்த சிறு வனத்தில் கட்டத் தொடங்கினார். சண்டிகர் நகராட்சி அதிகாரிகள் 15 ஆண்டுகள் கழித்தே இந்த ரகசியத் தோட்டத்தைக் கண்டறிந்தனர்.
ஒருகட்டத்தில் அவர் கட்டிய தோட்டமே தகர்க்கப்படும் சூழல் வந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1976-ல் அரசின் அனுமதியுடன் திறக்கப்பட்டது. சாலை ஆய்வாளர் பதவியிலிருந்து நேக் சந்த் அதிகாரபூர்வமாக விடுவிக்கப்பட்டு ஊழியர்கள் 50 பேர்களுடன் அந்த ராக் கார்டன் தோட்டத்தின் பொறுப்பாளர் ஆனார் நேக் சந்த்.