நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நுகர்வுக் கலாச்சாரத்தால் மக்களின் தேவைக்கேற்ப எல்லா ரகத்திலும் எல்லாவிதமான விலையிலும் பொருட்கள் கிடைக்கின்றன. அதனால் அத்தியாவசியம் அநாவசியம் என்ற பாகுபாடு இல்லாமல் கைக்குக் கிடைக்கிற அனைத்தையும் வாங்கிக் குவிக்கிறார்கள். அவற்றை வைப்பதற்காகவே பெரிய வீடாகத் தேடுகிறார்கள்.
சிறிய வீடு என்பது சிக்கனத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது. எளிமை என்ற சொல்லும் அர்த்தமிழந்துவருகிறது. நான்கு பேர் கொண்ட குடும்பம் கட்டாயம் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டில்தான் வாழ முடியும் என்று புதுப்புது வரையறைகளை வகுத்துவைத்திருக்கிறார்கள். பெரிய வீடு என்பது கௌரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனால் இதுபோன்ற கற்பிதங்களையெல்லாம் தகர்த்தெறிந்து, ‘எளிமையே நிறைவு’ என்பதை நிரூபித்துவருகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த டீ வில்லியம்ஸ். 52 வயதாகும் இவருக்கு, 84 சதுர அடி கொண்ட வீடே சொர்க்கம். கடந்த பதினோரு ஆண்டுகளாக அந்த வீட்டில்தான் அவர் வசித்துவருகிறார்.
மற்றவர்களைப் போல மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டில் சொகுசாக வாழ்ந்தவர்தான் டீ வில்லியம்ஸ். நாற்பது வயதில் அவரைத் தாக்கிய இதயத் தசை நோய்தான் வாழ்க்கை மீதான வில்லியம்ஸின் பார்வையை மாற்றியது.
இதயத் தசை நோய் வந்தவர்களின் ஆயுள் அதிகபட்சம் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகளே என்பதும் அவருக்கு அதிர்ச்சியளித்தது. அதுவரை அவர் அத்தியாவசியம் என நினைத்தவை எல்லாமே எத்தனை அபத்தம் என்பதும் புரிந்தது. தனியொரு மனுஷிக்கு இத்தனை பெரிய வீடு தேவையா என்ற கேள்வி, அதுவரை வாழ்ந்து வந்த சொகுசு வீட்டில் இருந்து அவரை வெளியேற்றவைத்தது.
பெரிய வீட்டில் வசிப்பதால் பொருள், காலம், நீர் போன்ற அத்தியாவசிய இயற்கை வளம், சுற்றுச்சூழல் என அனைத்துமே அளவுக்கு மீறிப் பயன்படுத்தப்படுவதையும் விரயமாக்கப்படுவதையும் உணர்ந்தார்.
ஒரு முறை மருத்துவமனையில் மருத்துவருக்காகக் காத்திருந்தபோது அங்கேயிருந்த ஒரு பத்திரிகையில் ஒருவர் மிகச் சிறிய வீடு கட்டியிருந்த செய்தியைப் படித்தார். உடனே அவரைச் சந்தித்து வீடு கட்டுவதற்கான வரைபடத்தைத் தயாரித்தார். வாஷிங்டன்னில் இருக்கும் தன் நெருங்கிய நண்பர்களின் வீட்டுக்குப் பின்புறத்தில் டிரெய்லர் ஒன்றின் மீது மிகச் சிறிய வீடு கட்டத் தீர்மானித்தார்.
மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை வைத்து அந்த டிரெய்லர் மீது 84 சதுர அடியில் ஒரு வீட்டை உருவாக்கினார். விரிக்கப்பட்ட சிறிய கம்பளம், ஒரு ஓரமாகப் பர்னர் அடுப்பு, மூலையில் கம்போஸ்ட்டிங் டாய்லெட் (கழிவுரமாக்கும் கழிப்பறை) இவைதான் அவரது வீட்டின் வரவேற்பறை, விருந்தினர் அறை, படிக்கும் அறை எல்லாமே. அதற்கு மேலே அந்தரத்தில் படுக்கை. இரவில் நிலவின் ஒளி, பகலில் சூரிய சக்தி மின்சாரம்.
அடுத்தவருக்கும் இடம் தேவை
டீ வில்லியம்ஸின் இந்த வீட்டில் எங்கேயும் தண்ணீர்க் குழாய் கிடையாது. எலெக்ட்ரிக் அடுப்பும் இல்லை. குளிப்பதற்கு, தன் தோழி வீட்டுக் குளியலறையைக் குறைந்த வாடகைக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்.
“நம் வீட்டில் தண்ணீர் இல்லையே என்று கவலைப்படுகிற நாம், தண்ணீருக்காகப் போராடும் மனிதர்களை மறந்துவிடுகிறோம். ஓரிடத்தில் இருக்கிற தண்ணீரை என் வசதிக்காக உறிஞ்சுகிற நானும் அதைத்தானே செய்கிறேன்?” என்று கேட்கும் வில்லியம்ஸ், தண்ணீரின் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும் என்கிறார்.
தன் சின்னஞ்சிறு வீட்டை விட்டு வில்லியம்ஸ் வெளியே காலை வைக்கிற இடம், தோழிக்கும் அவருக்கும் பொதுவான இடம். அந்த இடமே நண்பர்கள் கூடிப் பேசும் இடமாகவும், தன் தோழியின் குழந்தைகளுடன் விளையாடி மகிழும் இடமாகவும் இருக்கிறது.
“மற்றவர்களுடன் ஒரு இடத்தைப் பகிர்ந்துகொள்வது எத்தனை அர்த்தமுள்ளதாக இருக்கிறது. என்னுடைய தோட்டம், நம்முடைய தோட்டம் என்பதே எத்தனை வித்தியாசமாக இருக்கிறது!” என்று சிலாகிக்கிறார் டீ வில்லியம்ஸ்.
தன்னைப் போலவே சொந்த முயற்சியில் சிறு வீடு கட்ட நினைக்கிறவர்களுக்காக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இவரைப் போலவே சிறிய வீட்டில் வாழும் ஆர்வம் பலரிடம் அதிகரித்திருப்பதாகவும் சொல்கிறார்.
“நம் தேவைகளைக் குறைத்துக் கொள்ளும்போது மற்றவர்களுக்கும் இங்கே வாழ இடம் கிடைக்கும்” என்கிறார் வில்லியம்ஸ்.