சொந்த வீடு

பறக்கும் சாம்பலில் கட்டுமானக் கற்கள்

செய்திப்பிரிவு

இன்றைக்கு ஆற்று மணலுக்குத் தட்டுப்பாடு உள்ளதுபோல் செங்கற்களுக்கும் தட்டுப்பாடுதான். தமிழ்நாடு முழுவதும் செங்கற்கள் தயாரிக்கப்படுவதில்லை. சில இடங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. அதனால் ஒரு பகுதியில் தயாரிக்கப்படும் செங்கல்லை மற்றொரு பகுதியில் கொண்டு சென்று விற்கும்போது இயல்பாகவே விலை கூடுதல் ஆகிவிடும். மேலும் செங்கல் தயாரிப்புக்கான மண்ணை எடுப்பதால் இயற்கை வளம் பாதிக்கப்படும். செங்கலை உண்டாக்க உலை இடுவதற்கும் விறகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் இயற்கை வளம் பாதிக்கப்படும். இந்தச் சூழலில்தான் மாற்றுக் கட்டுமானக் கற்கள் புழக்கத்துக்கு வந்தன.

அவற்றுள் ஒன்றுதான் ப்ளே-ஆஷ் கற்கள். இது மரபான செங்கல்லைக் காட்டிலும் சிறந்தது; நீடித்து உழைக்கக்கூடியது. ஆனால் இந்தக் கற்களைக் குறித்த விழிப்புணர்வு இன்னும் மக்கள் மத்தியில் வரவில்லை. சுற்றுச் சுவர் கட்டுவதற்கு மட்டுமே இந்தவகைக் கற்கள் பயன்படுகின்றன. இவற்றை வீடு கட்டப் பயன்படுத்தும்போது சிமெண்ட் பயன்பாடும் குறைய வாய்ப்பிருக்கிறது. ப்ளே-ஆஷ் கற்கள், ஹல்லோ ப்ளாக் கற்கள் தயாரிப்பு முறைப்படிதான் தயாரிக்க்ப்படுகின்றன.

இதன் முக்கியமான மூலப் பொருள் நிலக்கரிச் சாம்பல். அதாவது தொழிற்சாலைகளில் பறக்கும் நிலக்கரிச் சாம்பல். அதனால் ப்ளே-ஆஷ் கற்கள் என்ற பெயர் இதற்கு வருகிறது. நிலக்கரிச் சாம்பலுடன் மணல், சுண்ணாம்புக் கல், ஜிப்சம் ஆகியவற்றையும் சேர்க்கிறார்கள். இந்தக் கலவைகளுடன் தண்ணீரும் சேர்க்கப்படுகிறது. இது மரபான செங்கல்லுடன் ஒப்பிடும்போது எடை குறைவு. மேலே சிமெண்ட் பூச வேண்டிய அவசியம் இல்லை.

SCROLL FOR NEXT