பிடிக்காத வேலையை வேறு வழியின்றிச் செய்வதில் அர்த்தமில்லை என ஜென்னாவும் அவருடைய காதலன் குலாமும் உணர்ந்த தருணம் அது. ஜென்னா ஸ்பெசார்டின் ஒரு எழுத்தாளர். குலாம் டுடிஹ் ஒளிப்படக் கலைஞர். இருவருக்கும் சாகசம் நிறைந்த பயணம் மிகவும் பிடிக்கும். பிறகு என்ன, வேலையை ராஜினாமா செய்துவிட்டு இருவரும் பயண இதழியலை உருவாக்கலாம் என இரண்டு வருடங்களுக்கு முன்பு முடிவெடுத்தனர்.
லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் அவர்களுக்குச் சொந்தமான வீட்டை விற்றுவிட்டுக் கிடைத்த சொற்ப பணத்தில் நடமாடும் மர வீட்டைக் கட்ட ஆரம்பித்தனர். வடக்கு அமெரிக்கா முழுவதும் சுற்றி, பயண அனுபவங்களை கேமரா குவியாடியில் குலாம் பதிவு செய்ய, அற்புதக் கணங்களை ஜென்னா தன் பேனாவில் நிரப்பிவருகிறார்.
ஐந்து மாதங்களில் இந்தக் காதல் ஜோடி வட அமெரிக்காவில் 10 ஆயிரம் மைல்களைக் கடந்து 25 மாநிலங்கள் வழியே பயணித்துள்ளது. கூடவே அவர்களுடைய செல்ல நாய் குட்டியையும் அழைத்துச் செல்கிறார்கள். யு டியூப் சேனலிலும், “டைனி ஹவுஸ் ஜயண்ட் ஜர்னி” (Tiny House Giant Journey) எனும் வலைப்பூவிலும் அவர்களுடைய பயண அனுபவங்களைத் தொடர்ந்து பதிவுசெய்து வருகிறார்கள்.
இதில் மிகச் சுவாரசியமான பகுதி, ஜென்னா-குலாமின் வீடுதான். தங்களுடைய காரில் கட்டி இழுத்துச் செல்லக்கூடிய வீட்டைக் கட்ட வேண்டும் என முடிவெடுத்தபோது “கட்டுமானம் என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது” என்கிறார் ஜென்னா. “நாங்கள் சாதாரண வீடு கட்டவில்லை. வீடு எனும் வடிவத்துக்கே சவால்விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் தொடங்கினோம். பல குளறுபடிகள் செய்து கடைசியாக எங்களுடைய சக்கரத்தின் மேல் ஓடும் குட்டி வீட்டை உருவாக்கினோம்” எனத் தனது வலைப்பூ பக்கத்தில் பூரிப்புடன் எழுதியிருக்கிறார் ஜென்னா.
பல விதமான சிறிய அளவிலான வீடுகள், மர வீடுகள், சிறிய வகை படகுகளின் வடிவங்களை ஆராய்ந்து பின்னரே சகல வசதிகளும் கொண்ட “டைனி ஹவுஸ் ஜயண்ட் ஜர்னி” எனும் இந்தக் குட்டி வீடு கட்டப்பட்டுள்ளது.
தங்கள் பயண ஒளிப்படங்களையும், குட்டி வீட்டில் செய்யும் புதிய மாற்றங்களையும் தொடர்ந்து >http://tinyhousegiantjourney.com/ -ல் ஜென்னா-குலாம் பதிவிட்டு வருகிறார்கள்.