சொந்த வீடு

ரியல் எஸ்டேட்: வளர்ச்சியை நிர்ணயிப்பது எது?

ஆர்.எஸ்.யோகேஷ்

சென்னைப் புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறையின் முன்னேற்றம் பிரம்மாண்டமானதாக இருந்தாலும், அதற்கு இணையாகத் தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும் நிலங்கள் விற்பனையாகின்றன. சென்னை புறநகர்ப் பகுதிகளில், நிலம் வாங்க முடியாதவர்கள், எந்தெந்த இடங்களில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் லாபம் பார்க்க முடியும் என்ற கேள்வி, பலரது மனதிலும் எழுந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக ரியல் எஸ்டேட் துறையில் மிக வேகமான முன்னேற்றம் கண்டு வருவது கோவை மாநகரம் என்பதுதான் கட்டுமானத் துறையைச் சேர்ந்த பலரது கருத்து. கோவை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் புதிது புதிதாக வீடுகள் கட்டப்பட்ட போதிலும், இங்கு முதலீட்டுக்கான இலக்குகள் அதிகம் இருப்பதாக ரியல் எஸ்டேட் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கோவை - அவிநாசி சாலையும், அதனை ஒட்டிய பகுதிகளும் கடந்த 10 ஆண்டுகளில் பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டியிருக்கின்றன. பஞ்சாலைகள் மட்டுமே இப்பகுதிகளில் இருந்த காலம் மாறி, தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களும் இங்கு முதலீடு செய்துள்ளன. இதன் காரணமாக நிலத்தில் முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். புதிதாகக் கட்டப்படும் ஃப்ளாட்களும், கட்டுமானப் பணி நிறைவடைவதற்கு முன்பாகவே, விற்பனையாகி விடுகின்றன.

அவிநாசி பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் அங்கு எழுந்துள்ளது. இதனால், அப்பகுதியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் வளர்ச்சி அடைவது மட்டுமின்றி, நிலத்தின் மதிப்பும் பன்மடங்கு உயர்ந்து விடும் என்று ரியல் எஸ்டேட் துறையினர் நம்புகின்றனர். நிலத்தின் மதிப்பு வாங்கக் கூடிய அளவில் குறைவாக இருப்பதால், தனி வீடுகள் கட்டித் தருவதில் கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறுகிறார் கோவையைச் சேர்ந்த முன்னணிக் கட்டுமான நிறுவன அதிகாரி தியாகராஜன். எனவே, கோவை - அவிநாசி சாலையை ஒட்டிய பகுதிகளில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் நிச்சயம் பலன் தரும் என்றும் அவர் நம்புகிறார்.

கோவைக்கு அடுத்தபடியாக, ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களால் அதிகம் விரும்பப்படுவது திருச்சி மாநகரம். திருச்சி-கரூர் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக, அடுத்த சில ஆண்டுகளில் இங்கு நிலத்தின் மதிப்பு வெகுவாக உயரும் எனக் கூறுகிறார் திருச்சியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் காசிநாதன். நாவல்பட்டு, காட்டூர் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான சாலை, ஆறு வழி நெடுஞ்சாலையாக மாற்றப்படுவதற்கான பணிகள் விரைவில் நடைபெற உள்ளன. எனவே, அப்பகுதி திருச்சிக்கு நுழைவாயிலாக அமையும் எனக் கருதப்படுகிறது. இதுதவிர, திருச்சியை மையமாகக் கொண்டு பல முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களும், தங்களது அலுவலகக் கிளைகளைத் திறந்துள்ளது, ரியல் எஸ்டேட் துறையில் திருச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.

சேலம்-ஏற்காடு இடையிலான பகுதிகளில் முதலீடு செய்வதிலும், முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. சேலம் மாநகருக்கு அருகே அமைந்துள்ள மலை வாசஸ்தலமான ஏற்காட்டில், பல இடங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவதே இதற்குச் சிறந்த ஆதாரம் என்று அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். கோடை காலத்தில் கூட குளுகுளு சூழல் நிலவும் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில், சொகுசு பங்களா வாங்க தமிழகத்தைச் சேர்ந்த வி.ஐ.பி.க்கள் பலரும் தற்போது ஆர்வம் காட்டி வருவதாகக் கூறுகிறார் சேலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முதலீட்டாளர் சுந்தரம். அடுத்த சில ஆண்டுகளில், இந்தப் பகுதிகள் பொருளாதார ரீதியாகக் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டும் என்றும் நம்பப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளை விட அதிவிரைவாக முன்னேற்றம் கண்டு வருகிறது சென்னை புறநகர் இடங்களை ஒன்றிணைக்கும் வெளிவட்டச் சாலை (Outer Ring Road) மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். சென்னைப் புறநகர் பேருந்து நிலையம் அமைய உள்ள வண்டலூரை, வடசென்னையின் மீஞ்சூர் பகுதியுடன் இணைக்கும் இந்தச் சாலை அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், விரைவில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகருக்கு வெளியே, வளர்ச்சிப் பாதையாக இருக்கப்போகும் இந்த 62 கிலோ மீட்டர் நீள சாலை, ஏழு முக்கிய ரேடியல் சாலைகளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருக் கிறது. பெங்களூரு, மதுரை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் இந்த வெளிவட்டச் சாலை வழியாகச் செல்ல முடியும் என்பதால், இந்தச் சாலை செல்லும் வழித்தடத்தில் உள்ள காலியிடங்கள் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. வெளிவட்டச் சாலையை ஒட்டி அமைந்துள்ள சொத்துகளின் மதிப்புகள் கடந்த ஒரு ஆண்டிற்கு உள்ளாகவே இரட்டிப்பு உயர்வைச் சந்தித்துள்ளன என்கின்றனர் சென்னை ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள். சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளின் தேவை அதிகரித்து வருவதால், அடுத்த சில ஆண்டுகளில் வெளி வட்டச் சாலைக்கு அருகே மேற்கொள்ளப்படும் முதலீடுகள், பொருளாதார ரீதியாக சிறந்த பலனை அளிக்கும் எனக் கட்டுமானத் துறையினர் கருதுகின்றனர்.

SCROLL FOR NEXT