சென்னை போன்ற பெரு நகரத்தில் வாடகைக்கு வீடு தேடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. மேலும் வீடு வாடகைக்கு உள்ளது என்று தெரியும்படியான 'TO LET' போர்டுகளைப் பார்க்கவே முடியாது. அந்தளவுக்கு வீடு வாடகைக்குப் பிடிப்பதில் பல இடையீடுகள் இருக்கின்றன.
சென்னையில் வீட்டு வாடகை இத்தனை மடங்கு கிடுகிடுவென உயர்ந்ததற்கு இந்த இடையீடுகள் ஒரு முக்கியக் காரணம் எனலாம். வேளச்சேரியில் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு படுக்கையறை வசதி கொண்ட வீடு எளிதாகக் கிடைக்கும்.
இன்றைக்கு அது ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்த வாடகை கமிசன் மட்டும் இந்தியாவின் 20 நகரங்களில் 400 கோடியாக இருக்கிறது. இது இன்னும் ஐந்தாண்டுகளில் 1200 கோடியாக உயர வாய்ப்புள்ளது.
இந்த இடைத் தரகைத் தொகையைக் குறைக்கும் பொருட்டு ‘நோ-புரோக்கர்’ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை, பெங்களூருவுக்கு அடுத்தபடியாக இந்தத் திட்டம் சென்னைக்கு வந்திருக்கிறது.
வாடகைக்கு வீடு தேடுபவர்கள், வீட்டு உரிமையாளர்கள் என இரு தரப்புக்குப் பயன்படும்படி செயல்பட்டுவருகிறது ‘நோ-புரோக்கர்’ (>NoBroker.in) இணையதளம்.
இந்த இணையதளம் தரகர் இல்லாமல் வீடு தேட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், வீட்டு உரிமையாளர்களுக்கும் இந்தச் சேவையை இலவசமாகச் செய்துவருகிறது.
வாடகைக்கு வீடு தேடுபவர்கள் தரகர்கள் மூலம் வீடு தேடினால், வீடு கிடைத்தவுடன் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் வாடகைத் தொகையை அவர்களுக்குத் தரவேண்டியிருக்கும்.
வீட்டு உரிமையாளர்களுக்கும் இதே நிலைதான். தரகர்களுக்குச் செலவழிக்கும் பணத்தை வீடு தேடுபவர்கள், வீட்டு உரிமையாளர்கள் என இருதரப்பும் மிச்சப்படுத்த வழிவகை செய்கிறது இந்த இணையதளம்.
வீட்டு உரிமையாளர்கள் மட்டுமே இந்தத் தளத்தில் தங்கள் வீடுகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். தரகர்கள் காலியாக இருக்கும் வீடுகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது.
பலவிதமான விசாரணைகளுக்குப் பிறகு, வீட்டு உரிமையாளர்கள் என்று உறுதிசெய்த பிறகே, உங்கள் வீட்டைப் பற்றிய விவரங்களைப் பகிரும்படி இந்தத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தத் தளத்தின் சிறப்பம். இதனால், தரகர்கள் இந்தத் தளத்தில் செயல்பட வாய்ப்புகள் இல்லை.
வாடகைக்கு வீடு தேடுபவர்களின் தேவையையும் இந்தத் தளம் எளிமையாக நிறைவேற்றுகிறது. உங்களுடைய தேவைகளைப் பதிவுசெய்த பிறகு அதற்குப் பொருந்தும் வீடுகளை மட்டும் இந்தத் தளம் பட்டியலிடுகிறது.
அதுவும் பெரும்பாலான வீடுகளுக்கு ஒளிப்படங்களும் பதிவிடப்பட்டிருப்பதால் நேரில் சென்று ஒவ்வொரு வீட்டையும் பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை. வீட்டு உரிமையாளர்களைப் போலவே, வீடு தேடுபவர்களும் உங்களுடைய தேவைகளை இந்தத் தளத்தில் பதிவுசெய்து வைக்கமுடியும்.
இப்படிப் பதிவுசெய்தால், வீடுகளைப் பற்றிய தகவல்களையும், வீட்டு உரிமையாளரின் தொடர்பையும் உங்கள் மின்னஞ்சலுக்கும், தொலைபேசி எண்ணுக்கும் அனுப்பிவிடுகிறார்கள்.
வீட்டு உரிமையாளரும், வாடகைக் குடியிருப்பாளரும் செய்துகொள்ளும் வாடகை ஒப்பந்தத்தையும் ஆன்லைனில் இந்த இணையதளம் மூலம் உருவாக்கிக் கொள்ளலாம்.
வீட்டு உரிமையாளர்கள் வீடுகளைப் பற்றிய தகவல்களைப் பதிவேற்றம் செய்ய இந்த மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் - hello@nobroker.com.
வாட்ஸ் ஆப் சேவையையும் இந்தத் தளம் வழங்குகிறது. இந்த எண்ணில் 0-8107-555-666 தொடர்புகொண்டால் வாட்ஸ் ஆப்பில் இந்தத் தளத்தைப் பின்பற்றலாம்.
சென்னை, மும்பை, பெங்களூரு, புனே போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் இந்தத் தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு: >http://www.nobroker.in>/