சொந்த வீடு

சந்தோஷம் தரும் தோட்ட அனுபவம்

ஜே.லூர்து

செடிகள் நமக்கு ஓர் அற்புதமான, நம்பிக்கையான உலகைத் தருகின்றன. ஆனால் நம்மில் எத்தனை பேர் இதை உணர்ந்திருக்கிறோம்?

காலையில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் போதே நம் வாழ்க்கை ரம்மியமாக ஆரம்பித்து விடுகிறது. தண்ணீர் ஊற்ற ஊற்ற எத்தனை கொந்தளிப்பாக மனம் இருந்தாலும் சரி அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்து செல்வதை நன்றாகவே அனுபவிக்க முடியும். அதுவும் மாடிப்படிகளிலோ, மாடியிலோ உள்ள செடிகளுக்கு நீர் ஊற்றும்போது அவை காற்றில் லேசாகத் தலை அசைத்து மௌனமாகப் பேச, தனிமை அங்கே தலை தெறிக்க ஓடி விடும.

அங்கு உயிர் கொண்ட ஓவியங்களான மலர்கள் நடனமாடும்போது நம் உள்ளத்தில் உறைந்து, கெட்டியாய்ப் போன உணர்வுகளும் நெகிழ ஆரம்பித்து நம்மை மனிதர்களாக உணர வைக்கும் உன்னதமான தருணம் அது! மிளகாயின் சின்னஞ்சிறிய வெண்ணிறப் பூக்கள், தக்காளியின் சிறிய மஞ்சள் பூக்கள், பாகற்காயின் கொஞ்சூண்டு சிவப்பு வர்ணம் கலந்த சற்றே பெரிதான அடர் மஞ்சள் பூக்கள் இவை .

காற்றிலேயே கவி பாடும் சின்னக் குயில்கள். அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் நம் கவலைகள் சிதறிப் போய் நாம் சிலிர்த்துப் போவது நிஜம்.

நோயாளிகள் அடிக்கடி செடிகளைப் பார்த்தால் புத்துணர்வு பெறுவார்கள் என்பதும், மாணவர்கள் கண்ணைக் குளிர வைக்கும் பச்சை பசேலென்ற செடிகளின் நடுவே அமர்ந்து படித்தால் ஞாபக சக்தி வளரும் என்பதும் அனுபவித்தவர்கள் கூறும் சாட்சியங்கள்.

மலர்களுடன் மலராகப் பழகும்போது நாமும் மலர்போல் குளிந்து, இலகுவாவோம். நம் வாழ்நாள் முழுதும் மலர்களின் நறுமணம் நம் வாழ்க்கையில் கமழ்ந்துகொண்டிருக்கிறோம்.

SCROLL FOR NEXT