சொந்த வீடு

வருமா வீட்டு வாடகைத் திட்டம்?

ஷங்கர்

உலகளாவிய அளவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் பிரதானமானது இந்தியா. நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே போவதால் இந்தியர்களின் அடிப்படைப் பிரச்சினைகளும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

வீடு பற்றாக்குறையால் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை அதன் இப்போதைய தேவை ஒரு கோடியே 90 லட்சம் வீடுகள். இதை 2022-க்குள் அடைந்துவிட மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால், இந்தியா முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஒரு கோடியே இரண்டு லட்சம் வீடுகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்பது முரணான ஒரு விஷயம்.

இந்த வீடுகளை எளிய மக்களுக்கு அரசு வாடகை வீட்டுத் திட்டத்தின் கீழ் அளிக்கலாம் என்ற யோசனையை ரியல் எஸ்டேட் ஆலோசக நிறுவனமான சிபிஆர்இ பரிந்துரைத்துள்ளது.

இந்திய அளவில் குடியிருக்க வீடுகள் தேவைப்படும் மக்களில் 56 சதவீதம் பேர் ஏழைகள் கீழ் நடுத்தர வர்க்கத்தினர். ஆண்டுக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரையே வருவாய் உள்ளவர்களின் வசதி மற்றும் தேவையைக் கருத்தில் கொண்டு வீட்டுக் கட்டுமான நிறுவனங்கள் வீடுகளைக் கட்டுவதில்லை. அதனால் கட்டப்பட்ட வீடுகள் விற்கப்படாமல் உள்ளன. வீடுகளின் விலை என்பதே இந்த இடைவெளிக்கு முக்கியக் காரணமாகும்.

“அதிகபட்ச மாத தவணை மற்றும் வீட்டு விலையால் ஏழை மக்களால் வீடுகளை வாங்க முடிவதில்லை. அதனால் அவர்கள் நெருக்கடியான குடியிருப்புகள், நகர்புறச் சேரிகள், அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் அடைக்கலம் தேடவேண்டியிருக்கிறது” என்கிறார் சிபிஆர்இ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அன்சுமன்.

வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் கணக்குப்படி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், ஆந்திரா, தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் நகர்புற வீட்டுத் தேவைகள் 76 சதவீதம்.

“குடியிருக்கும் வீடுகளுக்கான தேவை இத்தனை இருந்தும், ஒரு கோடியே இரண்டு லட்சம் வீடுகள் நகர்ப்புறங்களில் குடியேறாமல் காலியாக இருக்கின்றன. இதற்குக் காரணம் வீடுகளை விற்பதிலேயே அதிக கவனம் கொடுக்கப்பட்டதுதான். வாடகைத் திட்டத்தில் யாரும் அதிக கவனம் செலுத்துவதில்லை என்பதே” என்கிறார் அன்சுமன்.

பிற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் நீண்டகால அடிப்படையில் பண முதலீடு செய்வதை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்குக் கட்டுப்படியாகும் வாடகையில் வீடுகள் கிடைப்பதற்கான திட்டமே அவசரத் தேவையாகும். இத்திட்டம் அரசு மற்றும் தனியார் வீட்டுக் கட்டுமான நிறுவனங்களின் பங்களிப்புடன் மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்பட்டுவருகிறது.

மத்திய அரசு தேசிய நகர்ப்புற வாடகைக் கொள்கை மசோதா ஒன்றை உருவாக்கி வருவதாகவும் அன்சுமன் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கட்டுப்படியாகும் வாடகையில் வறிய மக்கள் கவுரவமாக வாழும் வகையில் வீட்டுத் திட்டங்கள் உருவானால் அது ஏழைகளுக்கு வரப்பிரசாதமாகவே இருக்கும்.

SCROLL FOR NEXT