சொந்த வீடு

வேகமெடுக்கிறது ஸ்மார்ட் சிட்டி

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 2014 ஜூலையில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது நாடெங்கும் 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்தத் திட்டம் செயல் வடிவம் பெறும்போது ரியல் எஸ்டேட் துறை அதனால் வளம் பெறும் என்பதால் அத்துறையினர் மிகப் பெரிய கனவுகளுடன் இந்தத் திட்டத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதனன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் 2022-ம் ஆண்டுக்குள் 100 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும். பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் அனைத்து விதமான வசதிகளும் கொண்ட நகரங்களாக இந்த ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந் தெடுக்கப்படும் ஒவ்வொரு நகரத்துக்கும் ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசின் நிதி கிடைக்கும்.

சுமார் 500 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளன இந்த நகரங்கள். ஆற்றங்கரையை ஒட்டி, மலைப்பகுதி, சுற்றுலாத் தலம் எனப் பல பகுதிகளில் இந்த ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன.

அமைச்சரவையின் ஒப்புதலை அடுத்து ஸ்மார்ட் நகரங்கள் அடுத்தடுத்து நகரும் நிலையில் ரியல் எஸ்டேட் துறைக்கு அது பல புதிய வாய்ப்புகளை அளிக்கும் என்பதால் அவர்கள் இந்த நடவடிக்கையால் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த வருடம் ரியல் எஸ்டேட் துறை சிறிது தளர்ச்சி கண்ட நிலையில் அது மீண்டும் உத்வேகம் பெறுவதற்கு இந்த ஸ்மார்ட் நகரங்கள் திட்டம் உதவும் என அத்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT