சொந்த வீடு

தட்பவெப்பநிலைக்கு ஏற்ற தெர்மோகோல் கட்டிடங்கள்

யுகன்

பல்வேறு விதமான புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி பல துறைகளும் இந்தியாவில் குறிப்பிடும்படியான வளர்ச்சியைக் கடந்த 30, 40 ஆண்டுகளில் அடைந்திருக்கின்றன. அதற்குக் கட்டுமானத் துறையும் விதிவிலக்கல்ல. ஆனால் மாற்றுக் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துவதில் நம்மிடையே விழிப்புணர்வு குறைவுதான். பாரம்பரியமான கட்டுமானப் பொருள்களையே கட்டிடங்களுக்குப் பயன்படுத்தி வருகிறோம்.

பரிசோதனை முயற்சியில் புதிய வகைக் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு புதிய பாணியிலான கட்டிடங்கள் இந்தியாவில் ஆங்காங்கே கட்டப்பட்டாலும், கட்டுமான நிறுவனங்களால் பரவலாக்கப்படவில்லை என்பதே உண்மை.

சிறிய வீடுகளில் தொடங்கி மிகப் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் வரை செங்கற்கள், மணல், சிமெண்ட் கலவை இவற்றைக் கொண்டேதான் பெரும்பாலும் கட்டுமானங்கள் உருவாக்கப்படுகின்றன.

மாற்றுக் கற்களும் மணலும்

கட்டிடத்தின் எல்லாப் பகுதிகளையுமே செங்கற்கள், மணல், சிமெண்ட் சேர்மானத்தில் மட்டுமே அமைக்கும் போக்கை மாற்றியது, சிமெண்ட் பிளாக்குகளின் வருகை. இதனால் கட்டுமானத்தில் மிகப் பெரிய அளவுக்குச் செலவுகள் குறைக்கப்பட்டன.

கட்டுமானத்துக்கு ஆற்று மணலை மட்டுமே நம்பியிருந்த நிலை மாறி செயற்கை மணலைக் கொண்டு கட்டுமானங்களைத் தடையின்றி நடத்தும் அளவுக்கு மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையை எட்டுவதற்கு, உயர் நீதிமன்றம் கட்டுமானங்களுக்காக ஆற்று மணல் பெருமளவுக்குச் சுரண்டப்படுவதைக் கட்டுப் படுத்தியதும் ஒரு காரணம்.

வழக்கமான செங்கல், மணல், சிமெண்ட் கட்டுமானங்களையும் சிமெண்ட் பூச்சுகளையும் மேற்கத்திய நாடுகளின் கட்டுமானங்களில் இன்றைக்குப் பார்க்கவே முடியாத அளவுக்கு, அவர்கள் புதிய முயற்சிகளைக் கட்டுமானத் துறையில் எடுத்துவருகின்றனர். வளர்ந்துவரும் நாடுகளில் எல்லாமே இதுதான் இன்றைய நிலை. இந்தியாவும் அந்த நிலையை எட்ட வேண்டியது அவசியம்.

மேற்கத்திய நுட்பங்கள்

மேற்கத்திய நாடுகளில் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் சில முயற்சிகளில் பொருத்தமான சிலவற்றை இந்தியாவிலும் பயன்படுத்திப் பார்க்கலாம். EPS (Expanded polystyrene) எனப்படும் பொருளைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம். இது என்னவோ ஏதோவென்று யோசிக்க வேண்டாம்.

தெர்மோகோல்தான். நமக்குத் தெரிந்து டிவி, கம்ப்யூட்டர் வாங்கினால் அதை வீட்டுக்கு எடுத்துவரும்வரையில் சேதமடையாத வகையில், அட்டைப் பெட்டிக்குள் அடைத்து எடுத்துவரும் பொருளாகத்தான் தெர்மோகோலை இந்தியாவில் பயன்படுத்துகிறோம். ஆனால் தெர்மோகோலைக் கட்டுமானங்களுக்கும் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்துகிறார்கள். உயர் அழுத்த நிலையில் தெர்மோகோலே பாறையின் தன்மைக்கு இறுகிவிடும்.

கட்டுமானங்களின் வெளிப்பூச்சுக்கு EIFS (External Insulation and Finish System) என்னும் சிந்தடிக் பூச்சைப் பயன்படுத்துகின்றனர். 1960-களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பூச்சு, நம்மூரில் சுவர்களில் பயன்படுத்தப்படும் சிமெண்ட் பூச்சு போல் அமெரிக்காவில் ரொம்ப சாதாரணம்.

ஈபிஎஸ் ஷீட்களை, பாலிமர் சேர்க்கப்பட்ட சிமெண்ட் கலவையுடன் சுவரில் வெளிப்புறத்தில் பொருத்திவிடுவார்கள். இத்தகைய பொருட்களுடன் அமையும் கட்டிடத்தின் வெளிப்பூச்சு, சிமெண்ட் கலவை பூச்சுக்கு இணையாக வெயிலையும், மழையையும் மற்ற எல்லா சீதோஷ்ண நிலையையும் எதிர்கொள்ளும் என்கிறது ஈபிஎஸ்-சின் பயன்பாடு குறித்த இணைய தளம்.

கட்டுமானங்களில் பயன் படுத்தப்படும் இந்தப் பூச்சுகள், இந்திய சீதோஷ்ண நிலைக்கும் பொருந்தக்கூடியதுதான் என்பதற்கு பெங்களூரில் உயர்ந்து நிற்கும் புவனா கிரீன்ஸ் என்னும் 11 அடுக்குக் கட்டிடமே சான்று.

SCROLL FOR NEXT