சொந்த ஊரில் என் மனைவி பெயரில் மனை ஒன்று உள்ளது. இந்த மனையில் வீடு கட்ட கணவனுக்கு வங்கியில் வீட்டுக் கடன் கிடைக்குமா?
- டி. ஹரிபிரசாத், கோரிமேடு, மதுரை.
இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கிறார் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஓய்வுபெற்ற துணைப் பொது மேலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன்.
மனைவி பெயரில் உள்ள சொத்தில் வீடு கட்ட கணவனுக்கு வீட்டுக் கடன் கிடைக்காது. மனைவி பெயரில்தான் கடன் கொடுப்பார்கள். மனைவி வேலைக்குச் செல்லவில்லை; வேறு ஏதும் வருவாய் இல்லை என்றால் இன்னொரு வழியில் கடன் பெறலாம். அதாவது, மனைவி பெயரில் வாங்கும் கடனுக்குக் கணவன் இணை கடன்தாரராக இருக்கலாம்.
அப்போது கணவன் என்ன வேலை செய்கிறார், மாத வருவாய் என்ன? மாத வருவாய் என்றால் அதற்கான மாதச் சம்பளச் சான்றிதழை வங்கிகள் கேட்கும். சொந்தத் தொழில் செய்தால், வருமான வரி கணக்குக் காட்டுவதற்கான ஆவணத்தைக் கேட்பார்கள். ஓராண்டு முதல் மூன்றாண்டுகளுக்கான ஃபார்ம் 16-ஐ வங்கிகள் கேட்கும்.
மேலும் மனையின் மதிப்பீடு, சொத்து மீது சட்ட ரீதியான அறிக்கை, வில்லங்கச் சான்றிதழ் ஆகிவற்றையும் கட்டாயம் கொடுக்க வேண்டும். தவிர வங்கிகள் கேட்கும் இதர ஆவணங்களையும் கொடுக்க வேண்டும். கணவன் - மனைவி திருமணப் பதிவுச் சான்றிதழைச் சில வங்கிகள் கேட்கும்.
பதிவு திருமணச் சான்றிதழ் இல்லாவிட்டால் பாஸ்போர்ட் அல்லது வழக்கறிஞர் வழங்கும் திருமண அபிடவிட் ஆகியவற்றையும் சமர்ப்பிக்கலாம். வங்கிகள் கேட்கும் எல்லா ஆவணங்களையும் தாக்கல் செய்தால் கடன் கிடைக்கும். இதில் மனைவிதான் கடன்தாரராக இருப்பார். கணவன் இணை கடன் தாரராக மட்டுமே இருப்பார்.
ஒரு வேளை மனைவி வேலைக்குச் சென்று வருவாய் ஈட்டுபவராக இருந்தால், எந்தப் பிரச்சினையும் இருக்காது. மனைவி பெயரில் வீட்டுக் கடனை தாராளமாக வாங்கலாம். மனைவி பெயரிலான கடன் போதவில்லை என்றால், கணவனையும் சேர்த்துக் கொண்டு கூடுதல் கடன் பெறலாம்.
சென்னையில் ஒரு அடுக்குமாடியில் 6 பேர் வீடு வாங்கியிருக்கிறோம். எங்களிடம் வீடுகளை விற்ற பில்டர் இப்போது மொட்டை மாடியில் வீடு கட்டத் தொடங்கியிருக்கிறார். கட்டி முடிக்கப்பட்டு விற்கப்பட்ட வீட்டில் புதிதாக பில்டர் வீடு கட்ட முடியுமா?
- எஸ். ஜெகன், மேடவாக்கம், சென்னை.
இதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஷ்யாம் சுந்தர் பதிலளிக்கிறார்.
கண்டிப்பாகக் கட்ட முடியாது. சென்னையில் பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் அனுமதி இல்லாமல் புதிதாக வீடு கட்ட முடியாது. தமிழகத்தில் வீடு கட்டுவது தொடர்பாக எஃப்.எஸ்.ஐ. (ஃப்ளோர் ஸ்பேஷ் இண்டக்ஸ்) விதிமுறை இருக்கிறது.
அதாவது அதிகபட்சமாக ஒரு அடிக்கு 1.5 அடி அளவில்தான் வீடு கட்ட முடியும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் 2,400 சதுர அடி உள்ள ஒரு மனை இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதில் 3,600 சதுர அடி அளவுக்கு வீடு கட்டலாம்.
இங்கு கேட்கப்பட்டிருக்கும் கேள்விதாரர், வசிக்கும் மொத்த மனையின் அளவு எவ்வளவு?, அதில் 1.5 எப்.எஸ்.ஐ. அளவுக்கு வீடு கட்டப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு ஏற்கெனவே வீடு கட்டியிருந்தால் நிச்சயமாக வீடு கட்டவே முடியாது. 1.5 எஃப்.எஸ்.ஐ. அளவுக்குக் கட்டியிருந்தால், இப்போது புதிதாகக் கட்டப்படும் பகுதி விதிமுறையை மீறி கட்டப்படும் கட்டிடமாகவே இருக்கும்.
பொதுவாக 1.5-க்குக் குறைவாக யாரும் வீடு கட்டுவதில்லை. எனவே புதிதாக வீடு கட்ட எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து உங்கள் வீடு அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்பிடம் மனுவாக எழுதி கேள்வி எழுப்பி நடவடிக்கையைத் தொடங்கலாம்.