ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் மட்டும் இரண்டு முறை ரெப்போ வட்டி (வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம்) விகிதத்தைக் குறைத்தும் ஏராளமான வணிக வங்கிகள் வட்டியைக் குறைக்கவில்லை. எனவே வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களை அடைக்கச் செலுத்தும் தவணைத் தொகையும் குறையவில்லை.
பொருளாதர மந்தம், பண வீக்கம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டில் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் பணவீக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்ததையடுத்து ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவுசெய்தது.
கடந்த ஜனவரி 15-ம் தேதியும், பிப்ரவரி 3-ம் தேதியும் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்தது. அதாவது ஒரு மாதத்துக்குள் இரண்டு முறை என 0.50 சதவீதம் வட்டி விகிதம் குறைந்தது. வழக்கமாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தால் அந்தப் பலன் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் வணிக வங்கிகள் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும்.
ஆனால், இந்த முறை அப்படிப் பல வங்கிகள் நடந்து கொள்ளவில்லை. இரண்டு வங்கிகள் மட்டுமே வட்டி விகிதத்தைக் குறைத்தன. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அதிருப்தி தெரிவித்தார். இதனையடுத்து மேலும் சில வங்கிகள் வட்டிக் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டன.
இன்னும் பல வங்கிகள் வட்டிக் குறைப்பு அறிவிப்பை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனாலும் அதில் ஏமாற்றமே. நாட்டில் உள்ள 91 வணிக வங்கிகளில் இதுவரை 21 மட்டுமே வட்டிக் குறைப்பு செய்திருப்பதாக மத்திய அரசு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 70 வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்யவில்லை என்றும் நிதியமைச்சகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தாவது வணிக வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை இனியாவது வட்டிக் குறைப்பு அறிவிப்பு வெளியானால் வீட்டுக் கடனுக்கான தவணைத் தொகை குறையும். ஆனால், வணிக வங்கிகள் வட்டியைக் குறைக்குமா? என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.