சொந்த வீடு

சென்னையின் மையமாகும் பரங்கிமலை

ரிஷி

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு ரியல் எஸ்டேட் மிகப் பெரிய சரிவைச் சந்தித்தது. ஆனால் அவ்வளவு பெரிய சரிவிலும் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட பெருமை சென்னைக்கு உண்டு. தென்னிந்தியாவின் தலைநகரான சென்னையின் ரியல் எஸ்டேட் சென்ற நிதியாண்டிலும் பெரிய தோல்வியை அடையவில்லை.

சென்னையின் வளம் மிக்க ஓ எம் ஆர் சாலை தவிர்த்து புதியதாகப் பல்லாவரம் இன்னர் ரிங் ரோடு, அம்பத்தூர், பெங்களூர் ஹைவே போன்ற இடங்கள் புதிய வளர்ச்சிக்கான களங்களாக ஆயின. இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து இப்போது பரங்கிமலை, ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பகுதிகள் இப்போது ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்குள் வந்துள்ளன. இதற்குக் காரணம் மெட்ரோ ரயில்.

ஆலந்தூர்-கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப் போவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சோதனை ஓட்டம் எல்லாம் முடிந்து போக்குவரத்துக்கு ஆயத்தமாகி நிற்கிறது இந்த மெட்ரோ ரயில் வழித்தடம். மீண்டும் ஜெ.ஜெயலலிதா முதல்வராகப் பொறுபேற்றதைத் தொடர்ந்து இந்த மெட்ரோ ரயில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலந்தூரிலிருந்து தொடங்கும் இந்த மெட்ரோ ரயில் வழித்தடத்தால் ஆலந்தூரை ஒட்டிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் செழிக்க வாய்ப்புள்ளதாக ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்த்துவருகின்றனர். ஏனெனில் சென்னைப் புறநகர்ப் பகுதியான ஆலந்தூரை ஒட்டிய பரங்கிமலையில் அனைத்து விதமான ரயில் போக்குவரத்துகளும் ஒன்றிணைகின்றன.

அதாவது தாம்பரம் சென்னை பீச் இடையிலான புறநகர் ரயில் போக்குவரத்து, பறக்கும் ரயில் என அழைக்கப்படும் எம்ஆர்டிஎஸ் வழித்தடமும் சென்னை பீச்சில் தொடங்கி வேளச்சேரி வழியே பரங்கிமலையில் முடிவடைகிறது (வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான வேலைகள் இன்னும் முடிவடையவில்லை), இறுதியாக இந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து. ஆக, ஒன்றிணைந்த ரயில் நிலையம் பரங்கிமலையில் அமைய வாய்ப்புள்ளது என்ற பேச்சு நீண்ட நாட்களாக ரியல் எஸ்டேட் துறையினரிடம் நிலவிவருகிறது.

எந்தப் பக்கம் இருந்து வந்தாலும் நகருக்குள் செல்ல பரங்கிமலையில் இறங்கி மாற வேண்டும். ஆக இந்தப் பயன்பாட்டுக்காக இங்கே வீட்டுத் தேவை உயர வாய்ப்புள்ளது. பரங்கிமலைக்கு அருகில் உள்ள நங்கநல்லூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி அடையும் எனச் சொல்லப்படுகிறது. இப்போதைக்கும் இந்தப் பகுதிகளில் கட்டி முடித்தும் விற்காமல் இருக்கும் வீடுகளை விற்பதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கை ரியல் எஸ்டேட் துறையினரிடம் எழுந்துள்ளது.

ஏற்கெனவே பரங்கிமலையை ஒட்டிய பகுதிகளில் ஒன்றான வேளச்சேரியில் தகவல் தொழில்நுட்பத் துறையினரின் குடியேற்றத்துக்குப் பின்னர் அங்கு நில மதிப்பு பிற இடங்களைவிடச் சற்று அதிகமாகவே உள்ளது. என்றபோதும் தேவைக்கும் அதிகமான வீடுகளை உருவாக்கிவிட்டதைப் போன்ற சூழலே இங்கு காணப்படுகிறது. அநேக வீடுகள் காலியாக உள்ளன. விற்பனைக்கெனக் கட்டப்பட்ட வீடுகளை வாடகைக்கு விடும் போக்குக்கூட சில இடங்களில் உள்ளது.

வீட்டின் விலை ஓரளவு அதன் உச்சபட்ச தொகையை எட்டிவிட்டது. இதன் பின்னரும் தேவைக்கதிகமான வீடுகளை உருவாக்கிவிட்டதால் வீடுகளின் விலையைக் குறைக்காமல் அவற்றை விற்பது கடினம் என்கிறார்கள். ஆனால் ஏற்கெனவே விற்கப்பட்ட விலையைவிடக் குறைந்த விலைக்கு வீடுகளை விற்கக் கட்டுமான நிறுவனங்கள் தயாராக இல்லை என்ற பேச்சும் எழுந்துள்ளது. ஆகவே இந்தப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் விவகாரங்களில் சிறிது மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இப்போது இந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடக்கம் பற்றிய அறிவிப்பு அந்த மந்த நிலையைப் போக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் ரியல் எஸ்டேட் துறையினர் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே பூர்த்தியான குடியிருப்புத் திட்டங்களை விற்கவும், புதுக் குடியிருப்புத் திட்டங்களை மேற்கொள்ளவும் இந்த அறிவிப்பு வழிகோலும் என்ற அவர்களது நம்பிக்கை மெய்ப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.

SCROLL FOR NEXT