வானளாவியக் கட்டிடங்கள் வளர்ச்சிக்கான அடையாளங்களாகச் சித்திரிக்கப்படுகின்றன. மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் இந்தியா போன்ற நாட்டில் கட்டிடங்களின் பெருக்கத்தைப் புறக்கணிக்க முடியாது. அனைவருக்கும் வீடு 2022 போன்ற மத்திய அரசின் திட்டங்கள் மூலம் புதிய கட்டிடங்கள் பெருகுவது இன்னும் அதிகமாகும்.
புதிய கட்டுமானம் என்றாலே அங்கு பெரும்பாலான இடங்களில் பழைய கட்டிடங்களை உடைக்க வேண்டியிருக்கும். பழைய கட்டிடங்களை உடைப்பதெற்கென்றே புதிய தொழில் இங்கே வளர்ந்திருக்கிறது. அந்த அளவுக்குக் கட்டிடக்கழிவுகள் பெருகியிருக்கின்றன. இந்தக் கட்டிடக்கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடியவை. பல கட்டிடக் கழிவுகள் ஆறு, கண்மாய் போன்ற நீர் ஆதாரங்கள் மீது கொட்டப்படுகின்றன.
இது வருங்காலச் சமூகத்துக்கான மிகப் பெரிய இழப்பு. 2013-ம் ஆண்டு மட்டும் இந்தியாவின் கட்டிடக்கழிவு 530 மில்லியன் டன் எனஅறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கணக்கிட்டுள்ளது. இது 2013-ம் ஆண்டில் உள்ள கணக்கு. இப்போது இந்திய அளவில் எவ்வளவு கட்டிடக்கழிவு உருவாக்கப்படுகிறது என்பதற்கு எந்தக் கணக்கும் இல்லை.
கட்டிடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணலாம். தலைநகர் டெல்லியில் உள்ளதுபோல கட்டிடக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் திறக்கப்பட வேண்டும். இதற்கான திட்டம் மத்திய அரசால் ஏற்கெனவே தீட்டப்பட்டுள்ளது.
கட்டிடக்கழிவுகளை இரண்டுவிதமாகப் பிரிக்கிறார்கள், ரெடிமிக்ஸ் கான்கிரீட், சிமெண்ட் பிரிக்ஸ், பிளாட்பார தளக்கற்கள், ஹாலோ பிரிக்ஸ் ஆகியவற்றைத் தனியாகவும். பிளாஸ்டிக், எலக்ட்ரிக்கல் வயரிங் போன்ற கழிவுகளை ஒரு வகையாகவும் பிரிக்கிறார்கள். ஆனால் அது மட்டும் போதாது. மாற்றுக் கட்டுமானப் பொருள் பலவும் மறு சுழற்சி முறையில் செய்யப்படுபவைதான்.
ஆனால் மாற்றுக் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை. இந்த விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட வேண்டும். உதாரணமாக தமிழகத்தில் மாற்று மணலைப் பயன்படுத்த ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது மக்கள் தயாரிக்கப்பட்ட எம்-சாண்ட் எனப்படும் மணலை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். கட்டிடக்கழிவு என்பது இந்தியாவின் திடக் கழிவுகளில் 25 சதவீதம் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவை நம் ஆறுகளை, சுற்றுச்சூழலைச் சிதைக்கும் முன் அதைத் தடுக்க வேண்டியது இன்றைய காலத்தின் அவசியம்.