மிங் பெய், நவீன காலக் கட்டிடக் கலை முன்னோடிகளில் ஒருவர். 1917-ல் கிழக்கு சீனாவில் பிறந்து அமெரிக்காவில் வெற்றிக்கொடி நாட்டிய கட்டிடக் கலைஞர். பெய் சீனாவின் புகழ்பெற்ற மிங் அரச வம்சாவளியைச் சேர்ந்தவர். மூலிகை மருந்து வியாபாரம் அவர்கள் குடும்பத்தின் முக்கியத் தொழில். பெற்றோர்களுக்கு பெய் ஐந்தாவது குழந்தை. இளமையிலேயே கலைகளின் மீது ஆர்வத்துடன் இருந்தார்.
அவருடைய தாய் பெய் ஒரு புல்லாங்குழல் கலைஞராக ஆவார் என எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு எல்லாக் கலைகள் மீதும் ஆர்வம் இருந்தது. முதலில் அவரது குடும்பம் ஹாங்கிற்கும் பிறகு ஷாங்காய்க்கும் இடம்பெயர்ந்தது. இதில் ஷாங்காய் நகர் அவர் ஆளுமையில் மிகவும் பாதிப்பை விளைவித்தது.
ஷாங்காய் பல விதமான உலகக் கலாச்சாரத்தின் மையமாக இருந்தது. அதைக் கிழக்கின் பாரீஸ் என்பார்கள். அங்குள்ள கட்டிடங்களின் கலை ரசனைகள் ஒரு கலைஞராக அவரை வியப்பில் ஆழ்த்தின. பெய்யின் 13-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருடைய தாய் மரணமடைந்தார். அதன் பிறகு அவரது தந்தை மறுமணம் செய்துகொண்டார்.
பெய் தன்னுடைய கல்லூரி படிப்பை வெளிநாட்டில் படிக்க முடிவுசெய்தார். அமெரிக்காதான் அவர் தேர்வாக இருந்தது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன; ஒன்று கட்டிடப் பொறியியல், மற்றொன்று ஹாலிவுட். பெனின்சல்வானியா பல்கலைக்கழகத்தில் கட்டிட வடிவமைப்பு பாடத்தில் சேர்ந்தார். அங்கே கிரேக்க, ரோமானியக் கட்டிடக் கலைகள் அவரை மிகவும் பாதித்தன. பிற்காலத்தில் அவர் உருவாக்கிய கட்டிடங்களுக்கு இந்தப் பாரம்பரிய கட்டிடக் கலைகள்தான் ஆதாரம். பழமையில் புதுமையைப் புகுத்துவதுதான் இவர் பாணி.
மிங் பெய்