சொந்த வீடு

வீட்டுக்குள்ளே குற்றாலம்!

ம.சுசித்ரா

மனச் சோர்வையும், உடற்சோர்வையும் தணிக்கத் தேவை நிம்மதியான தூக்கம். அதே போலச் சோர்வை நீக்கி, உற்சாகம் புறப்படத் தேவை சுகமான குளியல். இந்தியப் பாரம்பரியத்தில் குளியலுக்குத் தனி முக்கியத்துவமும் மகத்துவமும் உண்டு. ஆகையால்தான் விசேஷமான நாட்களில் எண்ணை தேய்த்துக் குளிக்கும் வழக்கம் கடைப்படுகிறது.

ஆனால் இன்றைய நகர்ப்புறப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் வீடுகள் குளியலைக் கொண்டாடும் விதத்தில் இல்லை. இரண்டு படுக்கை அறைகள், அறையோடு இணைக்கப்பட்ட குளியலறை இப்படிச் சவுகரியமாகக் கட்டப்படும் வீடுகளில்கூடக் குளியலறையின் சுற்றளவு மிகச் சிறியதாகவே இருக்கும். குளியல் ஒரு காலைக்கடனாக மட்டுமே கருதப்படுகிறது.

அதே குற்றால அருவி, திற்பரப்பு அருவி போன்ற நீர்வீழ்ச்சிகளைத் தேடிச் சுற்றுலாப் பயணம் சென்று ரசித்து ரசித்துக் குளிக்கத் தோன்றுகிறது. அதே மேற்கத்திய நாடுகளில் பார்த்தால் குளியல் அறையானது அழகியல் உணர்வோடு உருவாக்கப்படுகிறது. பல வீடுகளின் குளியலறை, படுக்கை அறையைக் காட்டிலும் பெரிதாக இருக்கும். குளியல் தொட்டி, ஷவர், தண்ணீர் பீச்சும் குழாய், ஒளி அமைப்பு, ஒலி அமைப்பு சுவர் வடிவமைப்பு, தரை மேல் பூசப்பட்ட டைல்ஸ் இப்படிப் பல அம்சங்களை ரசனையோடு தேர்ந்தெடுத்து குளியலறையை வடிவமைக்கிறார்கள்.

சில வீடுகளின் குளியலறையில் தொலைக்காட்சிப் பெட்டி, தொலைபேசி போன்ற வசதிகள்கூட இணைக்கப்படுகின்றன. எக்கச்சக்கமாகப் பணம் புரளுகிறது. என்ன செய்வது, ஏது செய்வது எனத் தலை கால் புரியாமல் ஏதேதோ செய்கிறார்கள் எனத் தோன்றலாம்.

நாம் இருக்கும் சூழலில் அவசர அடியாக வாளியில் பிடித்து வைத்த தண்ணீரை மளமளவென ஊற்றிக் கொண்டு ஓடத்தான் முடியும் வேறென்ன செய்ய முடியும் என்ற சலிப்பும் ஏற்படும். ஆனால் சிறு சிறு மாற்றங்களை உங்கள் வீட்டுக் குளியலறையில் செய்து பாருங்கள்.

குளியலறையின் சிறப்பு ஷவர்தான். வான் மேகம் பூ பூவாய் தூவுவதுபோல வடிவமைக்கப்பட்ட ஷவர்கள் உள்ளன. அவற்றை நம் வசதிக்கு ஏற்ப, ரசனைக்கு ஏற்ப பொருத்தலாம்.

அட! குற்றால அருவியே தரையிறங்கி உங்கள் வீட்டு வந்தால் வேண்டாம் என்றா சொல்லத் தோணும்?

SCROLL FOR NEXT