சொந்த வீடு

ரியல் எஸ்டேட் மசோதா: பாதுகாப்புகள் என்னென்ன?

ஜே.கே

பரபரப்பாக ரியல் எஸ்டேட் துறையில் பேசப்பட்டு வந்த ‘ரியல் எஸ்டேட் மசோதா’ வரும் 20-ம் தேதி தொடங்கவுள்ள இரண்டாம் கட்ட நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த ஏழாம் தேதி இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த மசோதா பல விதங்களில் வீடு வாங்குபவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இந்த மசோதாவை இந்தக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. சரி, இந்த மசோதாவில் வீடு வாங்குபவர்களுக்கு என்னென்ன மாதிரியான சாதகமான அம்சங்கள் உள்ளன, என்ற கேள்வி எழும். அந்த அம்சங்கள்:

1. அனைத்து மாநிலங்களிலும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் நிலம் தொடர்பான சச்சரவுகள், இழப்பீடுகள் தீர்த்துவைக்கப்படும்.

2. அனைத்துவிதமான வீட்டுக் கட்டுமானத் திட்டங்களும் வர்த்தகக் கட்டுமானத் திட்டங்களும் கட்டாயமாகப் பதிவுசெய்யப்பட வேண்டும். இதனால் வாங்குபவர்களுக்கு நியாயமான நிலம், வீடுகள் கிடைக்கும். மோசடிகள் குறையும்.

3. வீடு கட்டும் நிறுவனங்கள் பதிவுசெய்யும் முன்பு அது தொடர்பாக விளம்பரம் கொடுக்க முடியாது. பதிவுசெய்யாமல் திட்டத்தைத் தொடங்கவும் முடியாது.

4. கார்பெட் பகுதியை மட்டும்தான் வீடு கட்டி விற்கும் நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும்.

5. வீடு கட்டும் நிறுவனம் அந்தத் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அளிக்க வேண்டியது கட்டாயம். மேலும் ஒப்பந்தகாரர், கட்டுமானப் பொறியாளர், வடிவமைப்பாளர் எனக் கட்டிடம் கட்டும் தொடர்பான அனைத்துத் தரப்பினர்கள் குறித்தும் தகவல் அளிக்க வேண்டும். அந்த வீட்டுத் திட்டம் தொடர்பான வெளிப்படைத்தன்மை வாங்குபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

6. குறித்த சமயத்தில் வீடு கட்டிக்கொடுப்பதை உறுதிப்படுத்த வீடு வாங்குபவர்களிடம் வாங்கிய பணத்தில் 50 சதவீதப் பணத்தை 15 நாட்களுக்குள் தனியான வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

7. தரகர்களும் தங்களைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

8. வீடு கட்டும் நிறுவனம் குறித்த நேரத்துக்குள் வீட்டைக் கட்டிக் கொடுக்க முடியாமல் போனால் வீடு வாங்குபவர்களுக்கு அவர்கள் கொடுத்த பணத்தை வட்டியுடன் கொடுக்க வேண்டும்.

9. விதிகள் கடைப்பிடிக்காவிடில் வீடு கட்டும் நிறுவனத்தின் மேல் அபராதம் விதிக்கப்படும். விதிகளுக்கு சரியான முறையில் பின்பற்றப்படாதபோது வீட்டுத் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். தவறான தகவல்களுக்காக வீட்டுத் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

10. கட்டுமானத் திட்டத்தில் ஏதாவது மாற்றம் கொண்டு வரும் பட்சத்தில் அந்த வீட்டுத் திட்டத்தை வாங்கியவர்களின் மூன்றில் இரண்டு பங்கு நபர்களின் ஒப்புதல் பெற வேண்டும். அதுபோல கட்டுமானத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதற்கு வீடு கட்டும் நிறுவனம் பொறுப் பேற்க வேண்டும். அதைச் சரிசெய்து தர வேண்டும். முடியாதபட்சத்தில் பணத்தைத் திருப்பித் தர வேண்டும்.

11. வீடு வாங்குவதில் நேரடியாகப் பணமாகக் கொடுப்பதையும் இந்த மசோதா கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் கருப்புப் பணம் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

SCROLL FOR NEXT