வீடு என்பது மனிதர்களுக்கு அடிப்படைத் தேவை. அதனால்தான் வீடுகள் கட்டுவதற்கு வங்கிகள் தாராளமாகக் கடன் அளிக்கின்றன; அரசும் வீட்டுக்காக வாங்கிய கடனுக்கு வரிச் சலுகைகள் அளிக்கிறது. ஆனால், இன்று வீடுகள் கட்டவும், வாங்கவும் ஆகும் செலவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. வங்கிகள் அளிக்கும் கடன்கூடப் பலரின் வீட்டுக்கான முழு கட்டுமானத் தேவையையும் பூர்த்திசெய்வதாக இல்லை.
மனை வாங்கவும், வீடு கட்டுவதற்கும் ஆகும் செலவைத் தவிர்த்து பத்திரவுப் பதிவு கட்டணம், சேவை வரி, ஒப்பந்தக் கட்டணம் எனப் பல்வேறு வழிகளில் அரசுக்கு வரிகளும், கட்டணமும் கட்ட வேண்டியிருக்கிறது. இந்தச் செலவும் கூடுவதால் வீடு கட்டுபவர்களின் நிலை மிகப் பரிதாபமாகிறது.
இப்படிச் செலுத்தப்படும் பல கட்டணங்களுக்கு ரிசர்வ் வங்கி மூலம் இப்போது ஒரு விடிவு பிறந்திருக்கிறது. குறைந்த விலையில் வீடு கட்டுபவர்கள், வாங்குபவர்களுக்குப் பயன் அளிக்கும் புதிய அறிவிப்பை அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இன்று மிகவும் குறைந்த விலையில் வீடு கட்ட வேண்டும் என்றாலும்கூட 10 லட்சம் ரூபாய் இருந்தால்தான் முடியும். மிகவும் எளிமையான ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கையறை, சமைலறையைக் கட்டுவதற்குக்கூடச் சாதாரணமாக இந்தச் செலவு ஆகிவிடும். இந்தச் செலவோடு வரிகள், பத்திரச் செலவு கட்டணமும் சேரும்போது, அந்தப் பணத்தைத் திரட்ட நடுத்தரப் பிரிவு குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.
பணத்தைத் திரட்ட வேறுவழிகளில் கடன் வாங்குவது, நகைகளை அடகு வைப்பது எனப் பல்வேறு நடவடிக்கைளில் இறங்க வேண்டியிருக்கிறது. எனவே வீட்டுக் கடனோடு, இந்தக் கடனும் சேரும் போது, வீடு வாங்கிய பிறகு பலரும் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்காள்.
இந்நிலையில் ரூ.10 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களில் சிலச் சலுகைகளை அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. பொதுவாகப் பத்திர செலவு, பதிவுக்கட்டணம் என வீட்டின் விலையில் 15 சதவீதம் அளவுக்குச் செலவு நீண்டுவிடுவது வழக்கம்.
கூடுதலாக ஆகும் செலவு வகைகளைக் குறைக்கும் வகையிலும், நியாயமான விலையில் வீடுகள் கிடைக்கவும் ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. அதாவது, ரூ.10 லட்சத்திற்குட்ட வீடுகளை வாங்கும்போது அதற்கு ஆகும் பத்திரச் செலவு, பதிவுக்கட்டணம் மற்றும் மற்ற ஆவணக் கட்டணத்தை (Documentation) வீட்டின் விலையுடன் சேர்த்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
இந்தக் கூடுதல் கட்டணங்களை வாங்கிய வீட்டுக்கடன் விகிதத்திலேயே செலுத்தினால் போதுமானது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போதைய நடைமுறையில், இந்த மூன்று கட்டணங்களையும் வீட்டின் மதிப்பில் வங்கிகள் சேர்ப்பதில்லை. இனி கூடுதலாக ஆகும் கட்டணங்களைத் தனியாகத் திரட்டத் தேவையில்லை. வீட்டுக் கடனிலேயே சேர்த்து வாங்கிக் கொள்ளலாம். இதன்மூலம் குறைந்த விலையில் வீடு வாங்குபவர்கள் மிகவும் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் குறைந்த விலையில் வீடுகள் கிடைக்கின்றன. எனவே அப்பகுதி மக்களுக்கு ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு ஒரு வரப்பிரசாதமாகும். ஆனால், அதேசமயம் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டை வாங்கவே இடத்துக்கு தகுந்தாற்போல ரூ.20 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையில் செலவாகிவிடுகிறது. எனவே ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்களுக்கு பயன் தராது என்பதே நிதர்சனம்.