சொந்த வீடு

அழகு சேர்க்கும் டைல்கள்

செய்திப்பிரிவு

வீட்டுக்கு அழகு சேர்க்கும் விஷயங்களில் முக்கியமானவை தரைகள். தரைகளை எவ்வளவுக்கு எவ்வளவு அழகாக அமைக்கிறோமோ அந்த அளவுக்கு வீட்டின் அழகு இருக்கிறது. சிலர் தங்கள் பணபலத்தை வீட்டின் தரை அமைப்பதில் காட்டிக்கொள்வார். விலை உயர்ந்த மார்பிளில் தரைத்தளம் அமைத்து தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள். சிலர் பாரம்பரிய முறைப்படி ரெட் ஆக்ஸைடு தரை அமைப்பார்கள். மார்பிள், கிரானைட் தவிர்த்து இன்றைக்குப் பல விதமான பொருள்களில் டைல்கள் சந்தையில் கிடைக்கின்றன.

போர்சிலின் தண்ணீரைக் குறைவாக உறிஞ்சக்கூடியது. அதனால் குழந்தைகள், பெரியவர்கள் இம்மாதிரி டைல்களில் வழுக்கி விழ வாய்ப்பு இல்லை. குளியலறைக்கும் இந்த வகை டைல்ஸ் பொருத்தமாக இருக்கும். சமையலறைக்கும் இந்த வகை ஏற்றது. அதே போல கிளாஸ் டைல்ஸ் என்றொரு வகை டைல்ஸும் கிடைக்கிறது. இதன் சிறப்பான விஷயம் என்னவென்றால் பல வண்ணங்களில் கிடைக்கும் என்பதுதான். அதுபோல இதில் நாம் விரும்பும் ஓவியங்களை இதில் எளிதாக வரையலாம்.

செராமிக் ரக டைல்கள் இருப்பதில் விலை குறைவானது. போர்சிலின் டைல்ஸ் அளவுக்கு ஈரத்தை உறிஞ்சாத தன்மை இல்லாவிட்டாலும், சமையலறை, குளியலறையில் பயன்படுத்த முடியும். பூஜை அறையின் பக்கவாட்டுச் சுவர்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். குறைவான விலையில் கிடைக்கும் என்பதால் பட்ஜெட் வீடுகள் பலவும் அதிகம் பயன்படுத்தும் டைல்ஸ் வகையாக செராமிக் ரகம் திகழ்கிறது.

அதுபோல ரப்பர் டைல்ஸும் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. இவை பல வண்ணங்களில் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. இவை நடப்பதுக்கு மென்மையானவை. இவை பராமரிப்பது எளிது. இதன் மேற்பரப்பில் தண்ணீர் பட்டாலும் வழுக்காத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT