சொந்த வீடு வாங்குபவர்களில் பெரும்பாலானோர், வீட்டுக் கடன் மூலமாகவே அதை வாங்குகிறார்கள். வீட்டுக் கடன் கேட்டுச் செல்லும் போது பல விஷயங்களில் எச்சரிக்கையும் கவனமும் தேவை. வீட்டுக் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன?
முன்பணம்
தனி வீடாக இருந்தாலும் சரி, அடுக்குமாடி வீடாக இருந்தாலும் சரி, எதை வாங்கினாலும் நாம் மொத்தமாக எதிர்பார்க்கும் கடனை முழுமையாக வங்கிகள் தந்துவிடாது. வீட்டின் மொத்த மதிப்பில் 20 சதவீதத் தொகையை வீடு வாங்குபவர் தன் கையில் இருந்துதான் கொடுக்க வேண்டும். இதைத்தான் மார்ஜின் தொகை என்று சொல்லுவார்கள். எஞ்சிய 80 சதவீதத் தொகையைத்தான் வங்கிகள் கொடுக்கும்.
வீடு வாங்க உத்தேசிக்கும் பலரிடமும் முன் பணம் பெரிதாக இருக்காது. சிலர் வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தோ அல்லது விற்றோ 20 சதவீதத் தொகையைத் திரட்டுவார்கள். இன்னும் சிலர் மார்ஜின் தொகையைக் கொடுப்பதற்காகத் தனி நபர் கடனைக்கூட வாங்குவதுண்டு. இதனால், வீட்டுக் கடனுக்கான தவணை (இ.எம்.ஐ.), தனி நபர் கடனுக்கான தவணை என வாங்கும் சம்பளத்தில் இருந்து பெரும் தொகை வங்கிக்குச் சென்றுவிடும். எனவே குடும்பச் செலவுக்குப் பணமில்லாமல் திண்டாடும் நிலைகூட வந்துவிடலாம்.
பெரும்பாலும் வாங்கும் சம்பளத்தில் 45 சதவீதத் தொகையை வீட்டுச் செலவுக்கு எடுத்துச் செல்லும் வகையிலேயே வங்கிகள் வீட்டுக் கடனுக்கான தவணையைப் பெறும் என்று சொல்லப்படுவதுண்டு. எனவே 45 சதவீதத் தொகையாவது நம் கையில் நிற்கும் அளவுக்கு இ.எம்.ஐ. வசூலிக்கப்படுமா என்பதை வீட்டுக் கடன் பெறும் முன்பே விசாரித்துக்கொள்வது மிகவும் நல்லது. இப்படிப் பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்க்க, மார்ஜின் தொகையை முழுமையாக ஏற்பாடு செய்துகொண்டு புதிய வீடு வாங்குவது பற்றி யோசிப்பது நல்லது.
வங்கித் தேர்வு
பொதுத்துறை வங்கிகள், தனியார் வீட்டு வசதி நிறுவனங்கள், பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்கள், பழைய தலைமுறை தனியார் வங்கிகள், புதிய தலைமுறை தனியார் வங்கிகள் எனப் பல வங்கிகள் இன்று போட்டி போட்டுக்கொண்டு வீட்டுக் கடன்களை வழங்குகின்றன.
பொதுவாக, தனியார் வங்கிகளைவிடப் பொதுத்துறை வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்குவதே நல்லது என்று கருத்து உள்ளது. தனியார் வங்கிகளைவிடப் பொதுத்துறை வங்கிகளில் கடனுக்கான வட்டி குறைவாக இருக்கலாம். பொதுத்துறை வங்கியில் கணக்கு இருந்தால், அங்கேயே வீட்டுக் கடன் கேட்கலாம்.
கடன் அனுமதி
வீட்டுக் கடனுக்கு ஒப்புதல் அளிப்பது வங்கியா அல்லது வீட்டு வசதி நிறுவனத்தின் கிளையா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள். சில வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங் களின் மத்தியப் பரிசீலனை மையம் (சென்ட்ரலைஸ்டு பிராசஸிங் சென்டர்) வங்கிக்கான அனுமதியை வழங்கும். கிளை அலுவலகங்களில் வீட்டுக் கடன் வழங்கினால் கடன் விரைவாகக் கிடைத்துவிடும். மத்தியப் பரிசீலனை மையம் என்றால், அங்கு வீட்டுக் கடன் கேட்டு அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்திருக்கும்.
எனவே வீட்டுக் கடன் கிடைக்கத் தாமதம் ஏற்படலாம். எனவே இதையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள். வசதி மற்றும் வட்டி விகிதத்தைக் கவனித்து வங்கியையோ அல்லது வீட்டு வசதி நிறுவனங்களையோ தேர்வு செய்யலாம்.
வட்டி விகிதம்
ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கையைப் பொறுத்து வட்டி விகிதங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் மாறக்கூடும். ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் பல வங்கிகள் கடனுக்கான வட்டியைக் குறைக்கக்கூடும். இதில் சில வங்கிகள் வெவ்வேறு நடைமுறைகளைப் பின்பற்றுவது உண்டு. வட்டி விகிதம் உயர்ந்தால், உடனே அதை வைத்து மாதத் தவணை அல்லது மாதத்தைச் சில வங்கிகள் உயர்த்திவிடுவதுண்டு. அதே சமயம் வீட்டு வட்டிக் குறைந்தால் மாதத் தவணை அல்லது மாதங்களின் எண்ணிக்கையைக் குறைக்காமல் விட்டுவிடுவார்கள்.
வட்டியைக் குறைப்பதற்காக வங்கிக்கு நேரடியாகச் சென்று கன்வென்ஷனல் ஃபார்மைப் பூர்த்தி செய்து, அதற்குரிய கட்டணத்தைச் செலுத்திய பிறகே சில வங்கிகள் குறைக்கும்.
எனவே நீங்கள் வீட்டுக் கடன் வாங்க உத்தேசித்துள்ள வங்கி, வட்டி குறையும் சமயத்தில் எப்படி நடந்துகொள்ளும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது.