பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டில் குடி புகுந்ததும் சிலர் வீட்டுப் பராமரிப்பு பற்றி கவலைப் படாமலேயே இருப்பார்கள். பெரிய அளவில் பழுது ஏற்பட்டாலொழிய அலட்டிக் கொள்ளமாட்டார்கள். சிறு விரிசல், ஓதம் தொடங்கி மழைக் காலங்களில் மாடிகளில் நீர் தேங்குவதுகூடக் கட்டிடங்களின் ஆயுளைக் குறைத்துவிடும்.
எனவே குறிப்பிட்ட இடைவேளைகளில் வீட்டைப் பராமரிப்பது மிகவும் அவசியம். சில எளிய வழி முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பழுதாவதிலிருந்து வீட்டைக் காப்பாற்றலாம்.
இனி வரும் காலங்களில் மழைக்கு முன்பே நீர் வடிகால் குழாய்களில் அடைப்பு மற்றும் மாடிகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் போடப்பட்டிருக்கும் பழைய பொருட்களை அப்புறப்படுத்துங்கள்.
கட்டிடம் கட்டி முடித்தவுடன் சுவர் பூச்சுக்கு மற்றும் மேல் தளத்திற்கு மேல் சிமெண்ட் பெயிண்ட் பூசலாம். இதனால் பூச்சில் இருக்கும் சிறுசிறு துளைகளும் அடைக்க வழி ஏற்படும்.
ஒவ்வொரு 3 முதல் 5 ஆண்டுகள் இடைவேளையில் மீண்டும் பெயிண்டிங் செய்யலாம்.
கழிவறை, குளியலறைகள் முதல் தளத்தில் அமைக்கப் பட்டால் நீர் கசிவு ஏற்படலாம். எனவே கான்கிரீட்டில் நீர்த் தடுப்புப் பூச்சு செய்யலாம். இதனால் கசிவு மற்றும் ஓதத்தில் இருந்து கட்டிடத்தைக் காத்துக் கொள்ளலாம்.
கட்டிடம் கட்டி இரு ஆண்டுகளில் சுவர்களில் ஏற்படும் சிறுசிறு விரிசல்களை அக்ரிலிக் கிரா பில்லர் மூலம் சரி செய்து பெயிண்டிங் செய்யலாம்.
குளியலறைகளில் இணைப்பு டைல்ஸ்களில் சாதாரண ஜாயிண்ட் பவுடர் மூலம் பேக் செய்யாமல் எபோக்சி ஜாயிண்ட் பில்லர் மூலம் பேக் செய்யலாம்.
பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடம் எழுப்பும் போது ஏற்படும் ஜாயிண்ட் விரிசலைத் தவிர்க்க வாட்டர் புரூஃப் நிபுணரை அணுகி அதற்குத் தேவையான ரசாயனங்களைப் பயன்படுத்தலாம்.
கட்டிடம் கட்டும்போதே குறைந்தபட்சம் 150 சதுர அடிக்கு ஒரு நீர் வடிகால் குழாய்கள் இருக்கும்படி அமைக்கவும்.
ஜன்னல் மற்றும் கதவு பிரேம்களில் ஏற்படும் விரிசல்களைச் சிலிகான் சீலன்ட் கொண்டு அடைக்கலாம்.