சொந்த வீடு

தயார்நிலை கான்கிரீட் பயன்படுத்தத் தயாரா?

செய்திப்பிரிவு

தற்போதைய கட்டிடங்கள் பெரும்பாலும் கான்கிரீட்டை நம்பியே கட்டப்படுகின்றன. மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் பற்றிப் பல பேச்சுகள் எழுந்தபோதும் பெரும்பாலானோர் கான்கிரீட்டையே கடவுள் போல் நம்புகின்றனர் என்பதே யதார்த்தம். இந்நிலையில் ஆர்.எம்.சி. என அழைக்கப்படும் ரெடிமிக்ஸ்டு கான்கிரீட் கட்டுமானத் துறைக்குள் காலடி எடுத்துவைத்தது.

தொடக்கத்தில் அது பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்கிறார்கள். எங்கோ ஓரிடத்தில் தயாராகும் கான்கிரீட் கலவையின் தரம் பற்றிய சந்தேகங்கள் இயல்பாக எழுந்தன. ஆனாலும் இந்தத் தயார்நிலை கான்கிரீட்களால் சில அனுகூலங்கள் உள்ளன என்கின்றனர் கட்டிட நிபுணர்கள்.

நெருக்கடிக்கு உதவும் ஆர்.எம்.சி

ஆர்.எம்.சி. எப்போது தேவைப்படும் என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் சில விஷயங்களைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். கட்டிட வேலைகள் நடைபெறும் போது கட்டுமானத்துக்குத் தேவைப்படும் கான்கிரீட்டை அங்கேயே தயாரித்துக்கொள்கிறோம். ஆனால் அதற்கு அவசியமான வெற்று நிலம் நமக்கு இருக்க வேண்டும்.

நெருக்கடியான ஓரிடத்தில் மனை வாங்கி வேலைக்கு ஆட்களே கிடைக்காத சூழலைச் சமாளித்தபடி வீட்டுக் கட்டுமானம் நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கே எப்படி நம்மால் கான்கிரீட் கலவையைத் தயார் செய்ய இயலும்? இத்தைகைய நெருக்கடிகளைச் சமாளிக்கக் கைகொடுக்கிறது இந்த ஆர்.எம்.சி.. ஏனெனில் இது பயன்படுத்தத்தக்க நிலையில் நமக்குத் தயாராகக் கிடைக்கும். எவ்வளவு கான்கிரீட் தேவையோ அவ்வளவு கான்கிரீட்டை வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தயாரிப்பு

ஜல்லி, மணல், சிமெண்ட், நீர், வேதிப்பொருள்கள் ஆகியவை ஆர். எம். சி தயாரிக்க உதவுபவை. மணலைப் பொறுத்தவரை இயற்கையான ஆற்று மணலோ செயற்கை மணலோ பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட்டை இளகிய நிலையில் நீடித்திருக்க செய்யும் பொருட்டு வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எவ்வளவு நேரம் கழித்து கான்கிரீட் இறுக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொருட்டும் வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிமெண்ட் டுக்குப் பதிலாக உலைக் கசடையும், எரிசாம்பலையும் பயன்படுத்தும் போக்கும் புழக்கத்தில் உள்ளன.

ஆர்.எம்.சி தயாராகும் இடத்துக்கும் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்குமான இடைவெளி மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்பதைக் கவனித்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் கான்கிரீட் தயாராகி இரண்டரை மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டால் அதன் தரம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

ஆர்.எம்.சி அனுகூலமா?

ஆர்.எம்.சி.யைப் பொறுத்தவரை பலவிதக் கலவை விகிதங்களில் இது கிடைக்கிறது. ஆகவே தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்த வேலைக்கு எந்தத் தரத்தில் கான்கிரீட் தேவையோ அதைப் பெற்றுக்கொண்டு பயன்படுத்தலாம். ஒரே மாதிரியான தரத்தைக் கொண்ட கான்கிரீட்டைத் தான் அனைத்துக் கட்டுமானத்துக்கும் பயன்படுத்த வேண்டும் என்னும் நிலையை ஆர். எம். சி. தவிர்த்துவிடுகிறது.

கான்கிரீட் இறுக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இதனால் வேலைகள் முடிய அதிக நேரம் ஆகும். ஆனால் ஆர்.எம்.சி. விரைவில் இறுகிவிடக் கூடிய தன்மையில் கிடைக்கிறது. இதனால் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாகிறது. நேரத்தை மிச்சப்படுத்தும் ஆர்.எம்.சி.யின் விலை சாதாரண கான்கிரீட்டை விட அதிகம் என்பது கலக்கம் தரத்தான் செய்யும். ஆனால் நேரத்தை மிச்சப்படுத்த விரும்பினால் அதற்குரிய விலையை நாம் தரத் தான் வேண்டியுள்ளது.

தரத்தைப் பொறுத்தவரை ஆர்.எம்.சி.யின் தரத்தை எளிதில் அறிந்துகொள்ளக் கருவிகளும் முறைகளும் உள்ளன என்கிறார்கள். எனவே நமக்குத் தேவையான தரத்தில் இதைப் பெற்றுக்கொள்ள முடியும். சாதாரணமாகக் கட்டுமானம் நடைபெறும் இடங்களில் கான்கிரீட்டைத் தயாரிக்கும் போது இடமும் அதிக வேண்டும். மேலும் இந்தப் பணியின் போது ஒலி மாசும், தூசும் உருவாகும். ஆனால் ஆர்.எம்.சியில் இந்தப் பிரச்சினை இல்லை.

ஆர்.எம்.சி. பயன்படுத்தலாமா?

ஆர்.எம்.சியைப் பயன்படுத்து வதில் நமக்கு தயக்கம் ஏற்படுத்தும் முதல் அம்சம் இதன் விலை. அதிக விலைக்கு மட்டுமே ஆர்.எம்.சி. கிடைப்பதால் செலவு வழக்கத்தைவிட அதிகமாகும். மேலும் ஆர்.எம்.சியைக் கொண்டுவரும் போக்குவரத்து செலவும் இதில் கூடிவிடும். கட்டுமான இடத்திலேயே கான்கிரீட் தயாரிக்கும்போது அது பலருக்கு வேலை வாய்ப்பாக அமையும்.

ஆனால் ஆர். எம். சி. இயந்திரத்தின் மூலம் தயாரிக்கப்படுவதால் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைக் குறைத்துவிடும். ஆர்.எம்.சி. பயன்படுத்தும்போது கட்டிடத்தில் விரைவில் விரிசல்கள் விழுந்துவிடுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், எந்தக் கட்டுமானப் பொருளிலும் நன்மைகளும் தீமைகளும் கலந்தே உள்ளன என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது.

தொகுப்பு: ராகு

SCROLL FOR NEXT