காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த மனித இனம் இன்றைக்கு நகரத்துக் கட்டிட நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் இயற்கை எழில் சூழ்ந்த வீட்டின் நினைவுகள் இன்னும் மனிதனைவிட்டு நீங்கிவிடவில்லை.
இயற்கையோடு இசைந்த வாழ்க்கையைப் பெரிதும் விரும்பும் ஜப்பான் நாட்டில் வீடுகளில் மலர் அலங்காரம் செய்யும் கலையானது இக்பானா என்ற பெயரில் மிகவும் பிரபலமானது. இகபானா என்ற சொல்லுக்கு மலர்களை வரிசைப்படுத்துவது என்று அர்த்தம். ஜப்பான் நாட்டில் வீட்டின் வரவேற்பறையில் அழகாகப் பூக்களைக் கொண்டு அழகுபடுத்துவது தேநீர் தயாரிப்பதைப் போல ஒரு தியானமாகவே கருதப்படுகிறது.
இக்பானா முதலில் புத்தருக்கு மலர்களைப் படைக்கும் வழிபாடாகவே தோன்றியது. கொஞ்சம் நீரும், இலைகளும், பூக்களும் இருந்தால் ஓடும் நீரோடையையும் பூத்துக் குலுங்கும் சோலையையும் உருவாக்கிவிடலாம் என்பதே இக்பானாவின் தத்துவம்.
மலர்களை அடுக்குதல்
ஆன்மாவின் கட்டளைப்படி அடுக்கப்படும் தொகுப்பே இக்பானா. அழகு என்பது மலர்களைக் கொண்டு அலங்கரிப்பது அல்ல, அதற்கு மாறாக இழந்த மலர்களின் நினைவில் ஏங்குவதுதான் என்று இக்பானாவுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் ஜப்பானைச் சேர்ந்த இயற்கை வேளாண் அறிஞரான மசானபு ஃபுகோகா.
வண்ணம், வாசனை என்று மனிதனின் கண்களுக்கும், மூக்குக்கும் ஒருசேர மகிழ்ச்சியை அளிப்பவை பூக்கள். பூக்களை எப்படி அடுக்கிவைத்தாலும் அழகுதான் என்றாலும் மலர் அலங்காரத்தில் சில அடிப்படை விதிமுறைகள் உண்டு.
பூக்களைச் சேகரித்தபிறகு அவற்றைக்கொண்டு எப்படி அலங்கரிக்கப் போகிறோம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும. வட்ட வடிவமா, கூம்பு வடிவமா என்பதை முடிவுசெய்துகொண்ட பிறகே அலங்காரத்தைத் தொடங்க வேண்டும். எப்போதுமே மலர் அலங்காரத்தின் முகப்பு பகுதியே கண்ணில் படுகிறது என்பதால் அதன் வடிவத்திற்கு முக்கியமான பங்கு உண்டு.
ஜாடியின் அளவுக்கு ஏற்றமாதிரி போதுமான பூக்கள் இருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அலங்கரிக்கப்பட்ட பூக்களை எந்த இடத்தில் வைக்கலாம், அது அந்தச் சூழலுக்குப் பொருத்தமாக இருக்குமா, பின்னணி நிறத்தோடு பொருந்திப்போகுமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உணவு மேஜையில் மலர் அலங்காரம் செய்யும்போது பூக்களைக் கொண்டிருக்கும் ஜாடி அதிக உயரத்தில் இருக்கக் கூடாது. ஆனால் வரவேற்பு அறையிலும் படுக்கை அறையிலும் பூக்களின் அமைப்பு அதிக உயரத்தில் இருக்கலாம்.
மலர் அலங்காரம் என்பது மலர்களை மட்டுமே கொண்டது அல்ல, இலைகளையும் சேர்த்துக்கொண்டால்தான் அது முழுமையடைகிறது. மேலும் ஒரேயொரு நிறத்தை மட்டுமே கொண்டிருந்தாலும் அது ஈர்ப்பைப் பெறுவதில்லை.
பல வண்ணங்களைக் கொண்டிருந்து அவற்றுக்கு இடையே ஒரு வடிவம் உருவாகிறபோதுதான் மலர்களை அலங்கரித்த மனதின் கற்பனை பார்வைக்கு வருகிறது. பகட்டுத் தன்மையைத் தவிர்த்து எளிமையாய் இருப்பதும் இக்பானாவின் சிறப்பு.
பூக்காடுகள்
மலர்களின் வாழ்நாள் ஒரு சில நாட்கள் மட்டும்தான். அதுவும் சில பூக்கள் பறித்தவுடனே வாடிவிடுகின்றன. பெரும்பாலான பூக்கள் சில மாதங்கள் மட்டுமே பூக்கின்றன. எல்லா நாட்களிலும் மலர் அலங்காரத்தைப் பராமரிக்க விரும்பினால், பூக்களைச் சேகரிக்கும்போதே அவற்றின் ஈரத்தை நீக்கி உருவ அமைப்பு சிதைந்து போகாமல் உலர்த்தி வைக்க வேண்டும். உலர்ந்த மலர்களைப் பயன்படுத்தும்போது அவற்றில் ஈரம் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வேதியியல் முறைகளைப் பின்பற்றி உலர்த்தப்பட்ட பூக்களை வாங்கியும் மலர் அலங்காரத்தைச் செய்யலாம். முன்கூட்டியே அலங்கரிக்கப்பட்ட பூக்களும், பிளாஸ்டிக் பூக்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதை வாங்கி அப்படியே வைத்துவிடலாம். ஆனால் நாமாகவே ஒரு உருவத்தை மனதில் நினைத்து அதை உருவாக்குவதில் ஏற்படுகிற மனநிறைவு இல்லாமல் போய்விடும்.
“ஒரு புல்லின் உதவி கொண்டு பூமியிலொரு பச்சைக் கம்பளம் விரித்தேன்” என்பது தேவதேவனின் பிரபலமான கவிதை வரிகளில் ஒன்று. ஒரு பூவின் உதவியோடு ஒரு காட்டையே உருவாக்க முடியும் என்பதை இக்பானா நிரூபித்துக்கொண்டிருக்கிறது.