தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பெரும்பாலும் தனி வீடுகள்தான் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தன. அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்னும் கலாச்சாரத்தை நமக்குக் கற்றுக் கொடுத்து, நமக்கு முன்மாதிரியாக இருந்தது மும்பைதான்.
மேற்கத்திய நவநாகரிகங்களின் நுழைவாயிலாக இருந்தது இந்த நகரம்தான். இந்தியா முழுமைக்குமான திரைப்படத் துறை, விளம்பரத் துறை போன்றவற்றுக்கான களம் மும்பையில் வேரூன்றியதும் இந்தியாவில் இருக்கும் எண்ணற்றவர்களை அந்த நகரம் ஈர்ப்பதற்குக் காரணமாக அமைந்தது. இடப்பற்றாக்குறையே தனி வீடுகள் மறைந்து அடுக்குமாடிக் குடியிருப்புகள் உருவாகத் தொடக்கக் காரணமானது.
வடக்கில் மும்பையைப் போன்றே தென்னிந்தியாவில் திரைப்படத் துறை, ஐடி துறை உள்ளிட்ட பலவகையான தொழில்துறைகளும் வேரூன்றிய இடம் சென்னை. நாளுக்குநாள் பல்வேறு காரணங்களுக்காகச் சென்னைக்கு இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே சென்றது. இதனால் சென்னையின் தனிவீடு கலாச்சார முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.
நெருக்கடியைச் சமாளித்த ஒண்டுக் குடித்தன வீடுகள்
தனிவீடு கலாச்சாரத்துக்கு அடுத்து மக்கள் தொகை நெருக்கத்தைச் சமாளிக்க ஒண்டுக் குடித்தனக் கலாச்சாரம் சென்னையில் சிறிது காலம் இருந்தது. சென்னை நகரத்தில் குறிப்பாக வடசென்னை பகுதியில் 25, 30 ஒண்டுக்குடித்தனங்கள் ஒரேவீட்டில் இருந்த காலம் உண்டு. சகிப்புத் தன்மை, பகிர்ந்து கொள்ளல், என வேற்றுமையில் ஒற்றுமை காணும் இடங்களாக இந்த ஒண்டிக் குடித்தனங்கள் இருந்தன.
தலையெடுத்த அடுக்குமாடி குடியிருப்புகள்
வெளிமாநிலங்களிலிருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றதால் இந்த நிலைமையும் கடந்த 25 ஆண்டுகளில் மாறியது. சென்னையிலேயே தங்கிவிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நாளடைவில் சொந்தமாக வீடு வாங்கினர். காலம்காலமாகச் சென்னையிலேயே வாழ்ந்தவர்கள்கூட நல்ல விலைக்கு வீட்டை விற்றுவிட்டுப் புறநகர்களில் வாடகைக்குக் குடியேறினர்.
இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளே அதிகமான மக்களின் இருப்பிட தேவையைப் பூர்த்திசெய்யும் அமைப்பாக நாளடைவில் மாறின. தொடக்கத்தில் நகரங்களில் சில இடங்களில் மட்டுமே தோன்றிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் மிக வேகமாகச் சென்னையின் புறநகரங்களிலும் பரவின.
இப்படிப் பரவலால் மாநகராட்சியின் எல்லையும் பத்து ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. சென்னையைப் போன்றே இத்தகைய வளர்ச்சி, பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்த நகரங்களிலும் கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கின்றன.
வாங்குங்கள்… விற்காதீர்கள்!
தனிவீட்டை விற்றுவிட்டுக் கிடைக்கும் கணிசமான தொகையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்குவது நல்ல யோசனை. ஆனால் வங்கிக் கடன் உதவியுடனோ, தனது பணிக்கால சேமிப்பிலிருந்தோ வீட்டை நகரத்திலேயே அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாங்கியிருப்பார் ஒரு நபர்.
ஐந்து ஆண்டுகள் சென்றபின், அவர் வாங்கிய தொகையைவிடக் கூடுதலாக ஒன்று, இரண்டு லட்சம் கிடைக்கிறது என்பதற்காக அவர் வாங்கிய வீட்டை விற்றுவிடலாமா? என்று யோசிப்பார். இதையே தொழிலாகச் செய்பவர்களுக்கு வேண்டுமானால் இது நல்ல யோசனையாக இருக்கும். ஆனால் தனிநபருக்கு அது நல்ல யோசனை அல்ல.
நகரப்பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வீட்டை விற்றுவிட்டு, அதேபகுதியில் அவர் இருக்கும் அதே அளவுக்கு வீட்டை வாங்க முடியாது. காரணம், அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டை விற்கும்போது நமக்குக் கிடைக்கும் லாபம் கூட்டுத்தொகையில் இருக்கும்.
அந்தத் தொகையைக்கொண்டு அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள இன்னொரு வீட்டைப் புதிதாக நாம் வாங்க நினைத்தால், நமக்கு ஆகும் செலவு பெருக்குத்தொகையில் பல மடங்கு அதிகமாக இருக்கும். அதனால் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டை வாங்குங்கள். அவசரப்பட்டு விற்காதீர்கள்.