சொந்த வீடு

மாடித் தோட்ட அனுபவங்கள்

எஸ்.ராஜகுமாரி

நாங்கள் வீடு கட்டிச் சில ஆண்டுகளிலேயே மாடியும் கட்டினோம், மாடி கட்டும்போதே மொட்டை மாடியின் சுவரின் ஓரங்களிலே தொட்டிகளையும் சேர்த்துக் கட்டினோம். தொட்டிகளில் இருந்து நீர் வெளியேறச் சிறு சிறு ஓட்டைகளையும் அமைத்தோம்.

தொட்டிகளை அமைத்ததால் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பூக்கள் ஆகியவற்றைத் தொட்டிகளில் பராமரித்தோம். அருகிலுள்ள சிறிய உணவகங்களில் சொல்லி வைத்து காபி, டீ சக்கைகளைத் தினமும் வாங்கிவந்து காயவைத்து அவற்றையே உரங்களாக இட்டோம். அதுமட்டுமல்லாமல் வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் தோல்களையும் வீட்டின் இயற்கைக் கழிவுகளையும் உரமாகப் பயன்படுத்தினோம்.

புதினா, புளிச்சகீரை போன்றவற்றின் இலைகளைப் பயன்படுத்திவிட்டு அந்தத் தண்டுகளை நட்டுவைத்தாலே நன்றாகத் துளிர்த்து வளரும். படரும் கொடிகளான பீர்க்கங்காய், அவரைக் காய், பாகற்காய், வெற்றிலை ஆகிவற்றைக் குளியலறைக்கு அருகில் உள்ள தொட்டியில் பயிரிட்டு, கொடிகளைக் குளியலறையின் மேகே படரவிட்டோம்.

இயற்கை மூலிகைகளான பிரண்டை, கற்பூரவள்ளி, சோற்றுக் கற்றாழை போன்றவற்றையும் பயிரிட்டோம். பகவான் பூஜைக்குப் பயன்படும் செம்பருத்தி, நந்தியாவட்டை போன்றவற்றில் பல வர்ணங்களை வேருடன் செடியாக வாங்கி வைத்தோம்.

சங்கு புஷ்பங்களை விதையிட்டு வளர்த்தோம். நாளானதும் அந்தச் செடி படர்ந்து அதிலேயே காய் கனிந்து நெத்தாகி வெட்டித்துப் பல செடிகள் உருவாகக் காரணமாகியது. அரளி, இட்லிப் பூ போன்றவற்றையும் வாங்கிப் பயிரிட்டோம்.

வெங்காயங்களை விதைத்தோம். அவை சட்டென தளிர்களுடன் மேலெழந்து வந்தன. வெங்காயச் செடிகள் இருந்தால் மற்ற செடிகளுக்குப் பூச்சிகள் வருவது குறையும். மேலும் புகையிலையை வாங்கி முதல் நாள் இரவு

ஊறவைத்தால் மறுநாள்

அதைச் செடிகளில் பூச்சிவந்த இலைகள் மற்றும் தண்டுகளில் தெளித்தால் பூச்சிகள் அழிந்துவிடும். செடிகளிலிருந்து விழும் இலைகளைக் கூட்டி எடுத்து அதைத் தொட்டிகளில் இடுவோம், அதுவும் உரம்தான். இந்த மாடித் தோட்டங்கள் எங்களுக்கு ஆண்டு முழுவதும் பயன் தருகின்றன.

SCROLL FOR NEXT