சொந்த வீடு

நாங்கள் வீடுகட்டியபோது...

செய்திப்பிரிவு

சுமார் 25 வருடத்துக்கு முன் நாங்கள் வீடு கட்டினோம். நாங்களே சாமான் வாங்கிக் கொடுத்து கூலி கான்ட்ராக்ட் பேசிக் கொண்டோம். அப்போது ஒரு நாளைக்கு 8 பேர், மறுநாள் 4 பேர், அதற்கு அடுத்த நாள் 5 பேர் என்று வேலைக்கு வருவார்கள்.

அவர்கள், முதல் நாள் காலை பத்தரை மணிக்கு டீ குடிக்க வேண்டும் என்று ஒப்பந்தக்காரரிடம் பணம் கேட்டார்கள். நான் வீட்டிலேயே டீ போட்டுத் தருவதாகச் சொன்னேன். அதற்குக் காண்ட்ராக்டர், “உங்களுக்கு ஏன் சிரமம்? ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரத்திற்கு வேலைக்கு வருவார்கள். அவ்வப்போது டீ தயாரிக்க வேண்டி வரும்.

என்னுடைய செலவிலேயே வாங்கிக் கொடுத்து விடுகிறேன். அப்படித்தான் நாம் பேசியுள்ளோம். எங்களுக்காக நீங்கள் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டாம். எங்கள் வீட்டிலேயே இதைச் செய்ய மாட்டார்கள். மேலும் டீக்கடையில் எப்படிக் கொடுத்தாலும் வாங்கிக் குடித்து விடுவார்கள். ஆனால் வீட்டில் போட்டுக் கொடுத்து, உங்களிடம் வந்து ஏதாவது குறை சொல்லிவிட்டால் நம் இருவருக்குமே மனக்கசப்பு வந்துவிடும் என்று பயமாக இருக்கிறது” என்று சொன்னார்.

“நீங்கள் பயப்படும்படியாக டீ தயாரிக்க மாட்டேன். இருந்தாலும் ஏன் கவலை? தினம் தினம் டீக்கான காசு கொடுத்து விடுகிறேன்” என்று பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

மாலை வீடு திரும்பிய கணவரிடம் சொன்னேன். “அவர் உனக்கு ஏன் இந்த வீண் வேலை? இல்லாத பொறுப்பை ஏன் ஏற்றுக்கொள்கிறாய்? இது அவர் பொறுப்பு தானே? கலவையை நன்றாகக் கலக்குகிறார்களா? சரியான விதத்தில் கலக்குகிறார்களா? சிமெண்ட் மிகுதியாகாமல் கலக்கி வைக்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டியதுதானே உன் வேலை. கீழே சிந்தும் கலவையை மறுபடியும் எடுத்து உபயோகிக்கச் சொல். அத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டியதுதானே” என்று கண்டித்தார்.

அதற்கு நான், “நாளைக்கு கிரகப் பிரவேசம் நடத்தும்போது எவ்வளவு பால் வீணாகப் போகிறதோ, எவ்வளவு உணவு வீணாகப் போகிறதோ, அதை எளிமையாக வைத்துக் கொள்ளலாம். வெளிச்சம் போட்டு ஆடம்பரம் செய்ய வேண்டாம். நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்துக் கொள்வோம். நான் வாங்கித் தருகிற டீயை நமக்காக உழைக்கும் உழைப்பாளிகள் சுவைத்துக் குடிக்கிறார்கள். இந்தச் சந்தோஷம் எதற்கு ஈடாகும், இதில் என்ன பெரிய செலவு இருக்கிறது?” என்றேன். என் கணவரும் இதனை ஒப்புக்கொண்டார்.

- கே. ராஜேஸ்வரி​

SCROLL FOR NEXT