இனிய இல்லம் என்பது நம்மைப் பொறுத்தவரை வெறும் வசிப்பிடம் மட்டுமல்ல. அது நமது பெருமையை எடுத்துச் சொல்ல வேண்டும், நமது அந்தஸ்தின் அடையாளம் என்னும் எண்ணமே நம்மிடம் தலைதூக்கி உள்ளது. நமது இல்லம் மற்ற இல்லங்களைவிட ஏதாவது ஒரு விஷயத்தில் தனித்துத் தெரிய வேண்டும் என்னும் எண்ணமில்லாமல் வீடு கட்டுவோர் யாருமில்லை என்பதே உண்மை.
அதனாலேயே வீடு கட்டும் வேலையில் மிகுந்த ஆர்வத்துடனும் அக்கறையுடனும் நம்மை ஈடுபடுத்திக்கொள்கிறோம். வீடு கட்டுவதில் உள்ள அவ்வளவு சிரமங்களையும் பொறுத்துக்கொண்டு அதில் குடியேறும் நாளுக்கான கனவுகளை மனதில் சுமந்து வீடு கட்டும் பணிகளைக் கடக்கிறோம்.
வீடு எனும்போது அதில் நாம் வீட்டின் உள்ளமைப்பையும், அறைகளின் உருவாக்கத்தையும் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் வீடு என்பது அதன் காம்பவுண்ட் சுவரால் மட்டுமே தனி அழகு பெறும் என்பதை மறந்துவிடலாகாது. பொதுவாக காம்பவுண்ட் சுவர் என்பதை வெறும் சுற்றுச்சுவர் என்று கருதிவிடல் சரியல்ல. வீட்டை எவ்வளவு கவனம் எடுத்து அமைக்கிறோமே அதே அளவு கவனம் எடுத்து வீட்டின் காம்பவுண்ட் சுவரை அமைக்கும்போது அது வீட்டின் அழகுக்கு அழகு சேர்க்கும்.
வீட்டின் காம்பவுண்ட் சுவர் என்பது வீட்டின் பெருமையையும் தன்மையையும் மவுனமாக எடுத்துரைக்கும். ஒரு வீட்டின் மதில் வீட்டின் கம்பீரத்தை, கவுரவத்தை பார்ப்பவர்களின் மனதில் உருவாக்கும். வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பே மதில்களால் வீட்டின் உள் அமைப்பு பற்றிய பிம்பம் பார்ப்பவர்களின் மனதில் உருவாகும். வீட்டுக்குள் நுழையாமல் வீட்டைக் கடந்துசெல்பவர்களையும் மதில்கள் ஈர்த்துவிடும். வசித்தால் இப்படி ஒரு வீட்டில் வசிக்க வேண்டும் என்னும் ஆவலையும் ஆர்வத்தையும் வழங்குவதில் வீட்டின் புற அமைப்புக்கும் மதில்களுக்கும் மட்டுமே உண்டு.
வீட்டின் மதில்களை விதவிதமாக அமைக்கலாம். அவற்றைப் பொறுத்தவரை, அவை வீட்டின் பாதுகாப்புக்கும் உத்திரவாதம் அளிக்க வேண்டும். கண்கவர் காட்சியையும் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டு தன்மையும் ஒன்றிணையும்போது நாம் அமைக்கும் வீடு உயர்தரமான அழகுணர்ச்சியை மனதில் உருவாக்க வல்லதாக அமையும். வீட்டின் காம்பவுண்ட் சுவரை வலுவான கட்டுமானப் பொருள்களால் அமைப்பதில் எடுத்துக்கொள்ளும் கவனத்தை அவற்றின் கவர்ச்சியிலும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஏனோதானோ என வீட்டின் மதிலை அமைத்துவிட்டால் அது மொத்த வீட்டின் அழகையும் குறைத்து மதிப்பிடச் செய்துவிடும். வீட்டு காம்பவுண்ட் சுவரை கருங்கற்கள் கொண்டோ கான்கிரீட்டாலோ அழகான மரத்தின் உதவியோடோ கூட அமைக்கலாம். நீங்கள் எங்கு வீடு அமைக்கிறீர்களோ அதன் தன்மைக்கேற்ப வீட்டின் அழகு, பாதுகாப்பு போன்ற விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தேவைப்படும் கட்டுமானப் பொருளைத் தேர்வுசெய்து கொள்ளலாம்.
காம்பவுண்ட் சுவர் தானே என நினைத்து வெறும் சுண்ணாம்பையோ ஏதோ ஒரு அடர் வண்ணத்தையோ பூசி வேலையை முடித்துவிட்டோம் என நிம்மதி அடைந்துவிடக் கூடாது. வெள்ளைச் சுவர்களைப் பொறுத்தவரை அவை வெப்பத்தை வாங்கி வைத்துக்கொள்ளாமல் உடனே உமிழ்ந்துவிடும். ஆகவே அதிக வெப்பமயமான பகுதிகளில் வெள்ளை வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. ஆனால் அவற்றிலும் ஏதாவது அலங்காரம் செய்து அவற்றை கவர்ச்சிகரமாக மாற்றிவிட முடியும்.
கைதேர்ந்த வீடு வடிவமைப்பாளரின் துணையுடன் உங்கள் ரசனையையும் ஒன்றுசேர்த்து முடிவெடுத்தல் நலம். வீட்டின் காம்பவுண்ட் சுவருக்கு வண்ணம் பூசுவதில் வீட்டைச் சுற்றிக் காணப்படும் வீடுகளின் வண்ணங்களையும் அருகிலுள்ள மரங்கள் போன்ற பிற விஷயங்களின் வண்ணத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடர் வண்ணங்களைக் கொண்ட சுவர்களில் இடையிடையே சிறிது வெண்டிலேஷன் இடைவெளிவிட்டுக் கட்டும் போது காற்று உள்ளே வர வசதியாக இருக்கும். இதற்கான சிறு கிராதிகளை காம்பவுண்ட் சுவரில் பொருத்தும்போது அவை அழகாகவும் இருக்கும். வீட்டின் வெப்பத்தைப் பராமரிக்கவும் உதவும் என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள்.
காம்பவுண்ட் சுவர்களின் உருவாக்கத்தில் செங்கற்களைப் பயன்படுத்தும்போது அவற்றை அடுக்குவதில் கலைநுட்பத்தைக் கையாண்டு எளிதில் மனங்கவரும் மதிலை உருவாக்கிவிட முடியும். வீடு என்பதை வெறும் கட்டிட நுட்பத்துடன் அணுகாமல் அதில் அழகுணர்ச்சியையும் ரசனையும் கலக்கும்போது வாழும் இல்லம் மனதுக்கு நிறைவானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. வீடு என்பதன் உருவாக்கம் காம்பவுண்ட் சுவரோடு தான் நிறைவுபெறும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்