கதவுகளிலும், ஜன்னல்களிலும் ஆடும் திரைச்சீலைகள்தான் ஒரு வீட்டின் அலங்கார ரசனையை விருந்தாளிகளுக்கு முதலில் பறைசாற்றுகின்றன. உங்கள் வீட்டைப் பற்றிய முதல் அபிப்பிராயத்தைத் திரைச்சீலைகள்தான் உருவாக்குகின்றன. அதனால் திரைச்சீலைதானே என்ற அலட்சியமில்லாமல் அவற்றைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. திரைச்சீலைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது, எப்படி மாட்டுவது என்பதற்கான சில வழிமுறைகள்.
1. திரைச்சிலைகள் வீட்டின் தோற்றத்தைப் பெரிதாகவும், உயரமாகவும், பிரம்மாண்டமாகவும் காட்டக்கூடிய வலிமையுடையவை. அவற்றை எப்படிப் பொருத்துகிறோம் என்பதில் இந்த அம்சங்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன.
2. திரைச்சீலை மாட்டுவதற்கான கம்பியை எவ்வளவு உயரமாகப் பொருத்துகிறீர்களோ, அவ்வளவு உயரமாக உங்கள் ஜன்னல் தெரியும். உங்கள் வீட்டின் மேற்கூரை சிறியதாக இருந்தால் இந்த முறையைப் பயன்படுத்தலாம். வீட்டின் உயரத்தையும் இது உயரமாக்கிக் காட்டும்.
3. திரைச்சீலைகள் வழியாக வீட்டுக்கு உள்ளே வெளிச்சம் வர வேண்டும் என்றால், கம்பியை இருபுறமும் மூன்று இன்ச் நீட்டியிருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
4. திரைச்சீலைகள் சுருங்கிப் போயிருந்தால் அவற்றை அயர்ன் செய்து மாட்டலாம்.
5. கோடைக்காலம், குளிர் காலம் இரண்டுக்கும் ஏற்ற மாதிரி திரைச்சீலைகள் கிடைக்கின்றன. குளிர்காலத்தில் லைனிங் திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.
6. வளையங்கள் இருக்கும் திரைச்சீலைகளை வாங்குவது நல்லது. அடிக்கடி மூடித் திறக்கும்போது கம்பியில் வளையங்கள் இருந்தால் எளிதாக இருக்கும்.
7. திரைச்சீலைகள் இப்போது பலவிதமான வகைகளில் கிடைக்கின்றன. பிரின்ட்ஸ், ஃபோளரல், ப்ளேய்ன், கோடுகள் போன்ற எந்த வகை உங்கள் வீட்டின் சுவருக்கு ஏற்றதாக இருக்குமோ அதைத் தேர்ந்தெடுக்கலாம்.
8. டிரான்ஸ்ப்ரென்ட், லேஸ் திரைச்சீலைகள் வீட்டிற்குள் வெளிச்சம் கொண்டுவருவதற்கு உதவுகின்றன.
9. சில்க் திரைச்சீலைகள் சூரிய வெளிச்சத்தால் எளிதில் பாதிப்படைந்துவிடும். அதற்கு மாற்றாக காட்டன் கான்வாஸ் திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.
10. திரைச்சீலைகள் பிரைவசியை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல் வீட்டின் தோற்றத்தையும் அழகாக்குகின்றன. வீட்டுச்சுவரின் நிறம், கலைநயம், அறைக்கலன்கள் போன்ற விஷயங்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தைத் திரைச்சீலைகளுக்குக் கொடுக்கும்போதுதான் வீட்டின் உள் அலங்காரம் முழுமையாகிறது.