சொந்த வீடு

ஸ்மார்ட் தண்ணீர் அளவைகள்

செய்திப்பிரிவு

சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் அதிகரித்துள்ளது. பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நிலத்தடி நீர் இல்லை. வெளியிலிருந்து தண்ணீர் வாங்கி தொட்டிகளில் நிரப்பித்தான் பயன்படுத்துகிறார்கள். இம்மாதிரியான சூழலில் தண்ணீர்க் கட்டணம் வசூலிப்பதில் சிக்கல் வரும்.

இருவர் உள்ள வீட்டுக்கும் நான்கைந்துபேர் உள்ள வீட்டுக்கும் ஒரே கட்டணம் வசூலிக்க முடியாது. இதனால் இப்போது ஒவ்வோரு வீட்டுக்கும் தண்ணீர் பயன்பாட்டை அளவிடக் கருவிகள் பொருத்தப்படும் வழக்கம் வந்தது. அதிலும் பல பயன்களுடன் அறிமுகமாகியுள்ளதுதான் ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்.

இந்த ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்களைப் பொருத்துவது மிகவும் எளிது. மின்சாரம் இல்லையென்றால்கூட இது சூரிய ஒளி மூலம் இயங்கும் ஆற்றல் பெற்றது. அதனால் மீட்டர் தங்குதடையின்றிச் செயல்படும். எவ்வளவு தண்ணீர் செலவாகியுள்ளது என்பதை இந்த மீட்டர் துல்லியமாகத் தெரியப்படுத்தும். அளவீடுகளைத் தெரிந்து கொள்வதும் மிக சுலபம்.

இந்த மீட்டர் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதை நம் செல்பேசியில் உள்ள ஸ்மார்ச் வாட்டர் மீட்டர் செயலிக்கு அனுப்பிவிடும். நுகர்வோர் அவர்களது அன்றாட உபயோகத்தை உடனுக்குடன் பார்க்கக்கூடிய வசதியும் உள்ளது.

இதன் மூலம் தண்ணீர்ப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும். தண்ணீரை அநாவசியமாகச் செலவழிக்காமல் இருக்க இந்த அளவீடு எச்சரிக்கையாக இருக்கும்.

அது மட்டுமில்லாமல் தண்ணீர் எங்காவது ஒழுகினாலோ பழுது எற்பட்டாலோ உடனடியாக அந்தத் தகவலையும் செல்பேசியில் உள்ள செயலிக்கு அனுப்பும். நாமும் உடனடியாக அந்தப் பழுதைச் சரிசெய்ய இயலும். இதனால் தண்ணீர் வீணாவது தவிர்கப்படும்.

சென்சார் கருவி இருப்பதால், குழாயை அறுக்காமல் இந்த அளவையைப் பொருத்தமுடியும். இதன்மூலம் நேரமும் பணமும் பணிக்கான வேலையாட்களை தேடி அலைவதும் மிச்சம். அப்போதைக்கு இதன் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் தேவையற்ற ஒரு முறை முதலீடாக செய்வது அனைவருக்கும் நன்மைபயக்கும்.

- எம். ராமசாமி

SCROLL FOR NEXT