செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், அவற்றைக் குடும்ப உறுப்பினர்களாகவும், உற்ற நண்பர்களாகவுமே கருதுகிறார்கள். அவற்றுக்குப் போதுமான அன்பு, நேரம், கவனம் மட்டுமல்லாமல் பாதுகாப்பான, வசதியான சூழலும் தேவைப்படுகிறது. உங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கிறீர்கள் அல்லது வாங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்கள் என்றால், அதற்கேற்றப்படி உங்கள் வீட்டை வடிவமைப்பது அவசியமானது.
வீட்டை நேர்த்தியாக, அதே நேரத்தில் செல்லப்பிராணிகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும்படி, வடிவமைப்பது எளிமையான விஷயமல்ல. ஆனால், சரியான திட்டமிடல், வடிவமைப்பில் அடிப்படையான மாற்றங்களுடன் செல்லப்பிராணிகளுக்குப் பாதுகாப்பான வீட்டை உருவாக்க முடியும். அதற்கான சில ஆலோசனைகள்…
# அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறீர்கள் என்றால், ஜன்னலுக்குத் திரைச்சிலை அமைப்பது, அவற்றை உங்கள் செல்லப்பிராணிகள் வெளியில் இருக்கும்வரை, பாதுகாப்பாக மூடி வைத்திருப்பது அவசியம்.
# உங்கள் செல்லப்பிராணியின் இடத்திலிருந்து யோசித்து, ஒவ்வொரு பொருளையும் வீட்டில் அடுக்கிவைப்பது சிறந்தது. உங்கள் செல்லப்பிராணிக்கு எந்தப் பொருளால் ஆபத்தோ, அதையெல்லாம் அதற்கு எட்டாத உயரத்தில் அடுக்கி வையுங்கள்.
# நீங்கள் பயன்படுத்தும் உணவு, மருந்து போன்றவற்றை உங்கள் செல்லப்பிராணி பயன்படுத்தும் இடங்களில் வைக்காதீர்கள். மனிதர்களின் மருந்துகள் பெரும்பாலும் விலங்குகளுக்குப் பேராபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
மருந்துகளுடன் சாக்லேட், திராட்சை, பாதாம் போன்ற பருப்புகளும் உங்கள் வளர்ப்பு நாய்க்கு நச்சுத்தன்மையை உருவாக்கலாம். அதனால், இவற்றையெல்லாம் உங்கள் செல்லப்பிராணிகளுக்கு எட்டாத வகையில் அலமாரியில் மேல் அடுக்கில் வைப்பது சிறந்தது. அத்துடன், வீட்டில் அறுந்த மின்சாரக்கம்பிகள், பழுதான ‘சாக்கேட்’ இருந்தால், அவற்றை உடனடியாகச் சீர்படுத்திவிடுங்கள்.
# நீங்கள் வீட்டுக்குள் வளர்க்கும் செடிகள் உங்கள் செல்லப்பிராணிக்குப் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்திகொண்டு அவற்றை வாங்குவது நல்லது. நச்சுத்தன்மை உள்ள செடிகள், நச்சுத்தன்மையற்ற செடிகள் ஆகிய பிரிவுகளில், நச்சுத்தன்மையற்ற செடிகளை வாங்கி வளர்ப்பது உங்கள் செல்லப்பிராணிக்குப் பாதுகாப்பானது. பிரபலமான வீட்டுச்செடிகளில், கற்றாழை, பொய்ன்செட்டியா (poin settia), செவ்வந்தி போன்றவை உங்கள் செல்லப்பிராணிகளுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம்.
# செல்லப்பிராணிகளில் பூனைகள், நாய்களுக்குக் குப்பையைக் கிளறுவது வழக்கம் உண்டு. இது குப்பையில் இருக்கும் ஏதாவது ஆபத்தான பொருளை உங்கள் செல்லப்பிராணி சாப்பிடுவதற்கு வழிவகுக்கும். அதனால், கூடுமானவரை மூடியுடன் இருக்கக்கூடிய சிறிய குப்பைக்கூடைகளை வாங்கிப் பயன்படுத்துங்கள்.
# தரைவிரிப்புகள், செல்லப்பிராணிகளுக்கு ஏற்றவையல்ல. தரைவிரிப்புகளில் செல்லப்பிராணிகளின் பாதங்கள் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன், அடர்த்தியான தரைவிரிப்புகளில் செல்லப்பிராணிகளின் உடற்பகுதிகள் சிக்கிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கின்றன. அதனால், செல்லப்பிராணிகள் வசிக்கும் வீடுகளில் தரைவிரிப்புகளைத் தவிர்த்து எளிதில் சுத்தப்படுத்தக்கூடிய செராமிக் அல்லது டைல் தரைத்தளத்தைப் பயன்படுத்தலாம்.
# உங்கள் செல்லப் பிராணிக்கு ஆபத்தான பொருள் ஏதாவது ஒன்றைப் பார்த்தால், அவற்றை உடனடியாக அகற்றும் பழக்கத்தை வளர்த்துகொள்வது உங்கள் செல்லப்பிராணியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.