சொந்த வீடு

பழைய நினைவுகளில் புதிய வீடு

விபின்

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் பழமையான வீடு வெளிச்சமும் காற்றும் இல்லாமல் நிலத்திலிருந்து தாழ்ந்து போய்விட்டது. தங்கள் வாழ்க்கையில் முக்கியப் பங்குவகித்த அந்த வீட்டை இடித்துக் கட்ட அவர்களுக்கு விருப்பம் இல்லை.

அந்த வீட்டின் ஜன்னல்களிலும் கதவு நிலைகளும் அறைக்கலன்களிலும் ஒவ்வொரு ஞாபகச் சித்திரங்கள் அவர்களுக்கு உண்டு. இந்த நினைவுளைச் சிந்தாமல் சிதறாமல் குவளை நீரைப் போல் எடுத்துப் புதிய வீடாக மாற்றத்தான் அவர்களுக்கு விருப்பம். ஆனால், அது சாத்தியமாகுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. அது நனவாகியிருக்கிறது.

அதைச் சாத்தியப்படுத்தியிருப்பது பெங்களூருவைச் சேர்ந்த பயோம் என்விரான்மெண்டல் என்னும் மாற்றுக் கட்டுமான நிறுவனம். ராகவன் குடும்பத்தினர் வழக்கமான கட்டுமான நிறுவனங்களை இந்த வீட்டுக் கட்டுமானப் பணிகளுக்கு அணுகாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகளை உருவாக்கிவரும் இந்த நிறுவனத்தை அணுகினார்கள்.

பொதுவாக வீடு கட்டுபவர்களுக்குச் சொல்லப்படும் முக்கியமான ஆலோசனைகளில் ஒன்று சிறந்த பொறியாளரைத் தேர்ந்தெடுப்பது. அப்படிச் சரியான பொறியாளரைத் தேர்ந்தெடுத்துவிட்டாலே கட்டுமானப் பணியில் பாதி கிண்று தாண்டியதுபோல்தான். இந்த விஷயத்தில் ராகவன் குடும்பத்தினர் சரியான முடிவைத் தொடக்கத்திலேயே எடுத்து

விட்டனர்.

முதலில் பழைய வீட்டை ஆய்வுசெய்த பயோம் என்விரான்மெண்டல் கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர் குழு, அவற்றில் எந்தப் பொருட்கள் மறுபயன்பாட்டுக்கு உகந்தவை என்பதைக் கண்டறிந்தனர். பழைய வீட்டின் கதவுகள், நிலை, ஜன்னல்கள், சிமெண்ட் கிராதிகள், பரண்கள் போன்றவற்றைப் பயன்படுத்தத் தீர்மானித்தனர்.

பொதுவாக, இது போன்ற கட்டுமானப் பொருட்களை மறுசுழற்சிக்குப் பயன்படுத்துவது இன்றைக்குப் பரவலாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால், பயோம் பொறியாளர்கள் பழைய வீட்டுக் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டிருந்த செங்கற்களையும் பாறைக்கற்களையும் புதிய வீட்டின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தத் தீர்மானித்தனர்.

பொதுவாக, சிமெண்ட் கலவையால் பூசப்பட்ட கற்களை மறுபயன்பாட்டுக்குக் கொண்டுவருவது சிரமமான விஷயம். ஆனால், பழைய வீட்டுக் கட்டுமானத்தில் சுண்ணாம்புக்காரையைத்தான் பயன்படுத்தியிருந்தார்கள். அதனால் அதை எடுத்துத் திரும்பப் பயன்படுத்துவது எளிமையான விஷயமாக இருந்தது.

பழைய வீடு இருந்த இடத்தில் மண் அவ்வளவு வலிமையானதாக இல்லை. அதனால் அதை வலிமைப்படுத்த குழிகள் தோண்டி அதற்குள் பழைய வீட்டின் கான்கிரீட் கழிவை இட்டு நிரப்பியிருக்கிறார்கள். இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது. வீட்டுக்கான அடித்தளமும் உறுதியாகும். இந்த வீடு தமிழ், கேரளக் கட்டுமானக் கலையின் பாதிப்பை உள்வாங்கிக் கட்டப்பட்டுள்ளது.

கேரள வீட்டுக் கட்டுமானங்களில் உள்ள நடுமுற்றத்தை இந்த வீட்டிலும் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் காற்றும் வெளிச்சமும் வீட்டுக்குள் வர வழிவகை செய்துள்ளனர். மேலும், குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்து பேசுவதற்குமான வெளியாகவும் இது இருக்கும்.

ராகவன் குடும்பம் தமிழ்நாட்டைப் பின்னணியாகக் கொண்டவர்கள் என்பதால் தமிழ்நாட்டுக் கட்டுமானங்களில் காணப்படும் திண்ணையை இந்த வீட்டில் வடிவமைத்திருக்கிறார்கள். வீட்டின் உள்ளே ஜன்னல்கள் உள்ள பகுதியில் ஆள் அமர்வதற்கு வசதியான முறையில் உள்வாங்கிக் கட்டப்பட்டுள்ளது. பழைய நினைவுகளும் புதிய கட்டுமானமுமாக இந்த வீடு இன்றைய கட்டுமானக் கலைக்கு உதாரணமாகத் திகழ்கிறது.

SCROLL FOR NEXT