சொந்த வீடு

நிறைவேறுமா வீட்டுத் தேவை?

செய்திப்பிரிவு

பெரு நகரங்களை நோக்கி இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை இன்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களிலிருந்து கல்வி, வேலை வாய்ப்புக்காகவே இப்படி இடம்பெயர்கிறார்கள்.

இதனால் பெரு நகரங்களில் வீடுகளின் தேவை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதை அண்மையில் வெளியான குஷ்மன் வேக்பீல்டு நிறுவனத்தின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது.

சொத்து ஆலோசனை நிறுவனமான இது, ‘வரும் 2018-ம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் கூடுதலாக ஒரு கோடியே 30 லட்சம் வீடுகள் தேவைப்படும்’ என்று கூறியிருக்கிறது. இதில், நான்கில் ஒரு பகுதி முக்கியமான 8 நகரங்களில் தேவைப்படும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் எவ்வளவு வீடுகள் தேவை என்று கடந்த 2012-ம் ஆண்டில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் ஒரு மதிப்பீடு தயாரித்தது. இதன்படி நாடு முழுவதும் வீடுகளுக்கான பற்றாக்குறை ஒரு கோடியே 88 லட்சமாக இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போதைய மதிப்பீடு நகர்ப் புறங்களில் மட்டுமே 130 கோடி தேவை என்று கூறுகிறது.

அதுவும் இந்தத் தேவை, இன்னும் 4 ஆண்டுகளில், அதாவது 2018-ம் ஆண்டுக்குள் தேவைப்படும் என்பதிலிருந்து நகரமயமாக்கல் மிகவும் வேகம் பிடித்திருக்கிறது என்பது உறுதியாகிறது. குறிப்பாக மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மட்டும் 29 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் தேவைப்படும் என்று குஷ்மன் வேக்பீல்டு கூறுகிறது. மொத்தத் தேவையில் இது 23 சதவீதம்.

SCROLL FOR NEXT