இ
ரு புறமும் கைகளை நன்கு விரித்தபடி காட்சி தரும் ஏசுநாதர் சிலை ‘மீட்பர் ஏசு’ (Christ – the redeemer) என்ற பெயரில் உலகப் புகழ்பெற்றது. பிரேசில் நாட்டில் இருக்கும் இந்தச் சிலைதான் உலகிலேயே உயரமானது என்ற பெருமையை ஒரு காலத்தில் பெற்றிருந்தது. 38 மீட்டர் உயரமும் 635 மெட்ரிக் டன் எடையும் கொண்ட இந்தச் சிலை 1931-ல் உருவாக்கப்பட்டது.
ஆனால் ‘தாயகம் அழைக்கிறது’ (Motherland calls) என்ற சிலை அதைவிட மிக அதிக உயரம் கொண்டதாக (91 மீட்டர்) உருவாக்கப்பட்டது. 1967-ல் ரஷ்யாவில் திறக்கப்பட்ட இந்தச் சிலையில் தாயகம் ஒரு பெண்மணியாக உருவகப்படுத்தப்பட்டது. அந்தச் சிலை கையில் ஒரு வாளோடு காட்சியளிக்கிறது.
இந்த வாளே 33 மீட்டர் நீளம்! இந்தச் சிலை சற்றுக் கோணலாகத் தோற்றமளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் கொஞ்சம் மாறியதுதான் காரணம் என்றார்கள். உலகிலேயே மதச் சார்பில்லாத சிலைகளில் இதுவே இன்றளவும் உயரமானது.
அமெரிக்கச் சுதந்திர தேவி சிலை இந்த வரிசையில் இல்லையா என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கலாம். நியூயார்க் நகரில் அமைந்துள்ள அந்தச் சிலைக்கு நிச்சயம் இந்தப் பட்டியலில் இடம் உண்டு. பிரெஞ்சு மக்களால் அன்புடன் அமெரிக்க மக்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தாமிரச் சிலையின் உயரம் 93 மீட்டர்.
பியூர்டோ ரிகோ அமெரிக்காவைச் சேர்ந்த பகுதி. இதில் எழுப்பப்பட்ட ‘கொலம்பஸ் சிலை’ 110
மீட்டர் உயரம் கொண்டது. பிரபலக் கடற்வழிக் கண்டுபிடிப்பாளர் கொலம்பஸின் 500-வது ஆண்டு விழாவுக்காக உருவான சிலை இது. ‘புதிய உலகின் பிறப்பு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிலையில் கப்பலின் திசைமாற்றியைக் (ஸ்டீரிங்கை) கையில் பிடித்தவாறு காட்சி தருகிறார் கொலம்பஸ். பின்னணியில் அவர் குழுவோடு பயணித்த மூன்று கப்பல்களின் உருவங்களும் காட்சியளிக்கின்றன. வெண்கலத்தால் உருவான சிலை இது.
உயரமான சிலைகள் உள்ள நாடுகளின் பட்டியலில் விரைவில் இந்தியா முதலிடம் வகிக்கப்போகிறது. குஜராத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை 182 மீட்டரில் உருவாக்கப்பட இருக்கிறது.
வடோதராவில் நர்மதா அணைக்கருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்படவுள்ளது. சிலை அமைக்கும் பணி நடந்துவருகிறது. இந்தச் சிலையைச் சுற்றி 20,000 சதுரமீட்டர் பரப்பில் செயற்கை ஏரியும் அமைக்கப்படவுள்ளது.
மகாராஷ்டிர அரசு தன் பங்குக்கு சத்ரபதி சிவாஜியின் சிலையைப் பிரம்மாண்டமாக எழுப்பத் தீர்மானித்தது. தொடக்கத்தில் 98 மீட்டர் உயரம் கொண்டதாகத்தான் இது திட்டமிடப்பட்டது. அதாவது சுதந்திர தேவி சிலையைவிட உயரம்.
ஆனால், வல்லபாய் படேலின் சிலை உருவாக்கத்தை அறிந்ததும் அதைவிட உயரத்தில் 192 மீட்டர் உயரத்தில் சிவாஜியின் சிலையை அமைக்க முடிவெடுத்தது. ஆக இதுதான் உலகிலேயே உயரமான சிலையாக இருக்கும் என்று பெருமைப்பட்டுக் கொண்டது மகாராஷ்டிர அரசு.
ஆனால், திட்டமிட்ட பிறகுதான் தெரியவந்தது சீனாவில் ‘வசந்த ஆலயத்தில்’ (Spring temple) உள்ள புத்தரின் சிலை 208 மீட்டர் கொண்டது என்று. தாமரை மலரின் மீது புத்தர் நிற்பது போன்ற இந்தச் சிலை 2002-ல் நிறுவப்பட்டது. இதை அறிய வந்ததும் வீர சிவாஜியின் சிலை 210 மீட்டர் கொண்டதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. கட்டுமானத்துக்காக ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.