பழைய வீடுகள் வாங்க வங்கிக் கடன் பெறுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இதனால் பழைய வீட்டுக்குக் கடன் வாங்க நிறையக் கெடுபிடிகளும் உண்டு. புதிய வீடு என்றால், அதை மதிப்பிடுவது மிகவும் சுலபம். அதற்காக வழக்கமாக ஆவணங்கள் அளிப்பதும், விதிமுறைகளைப் பின்பற்றிக் கடன் வழங்குவதும் எளிது. பழைய வீட்டுக்குக் கடன் என்று வரும்போது வீட்டை மதிப்பீடு செய்வது கொஞ்சம் கடினம். பொதுவாக வீட்டுக் கடன் வழங்க வசதியாக வங்கி சார்பில் வீட்டை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர் ஒருவர் வருவார்.
அவர் மதிப்பீடு செய்து வீடு கட்டி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன, வீடு வலுவாக உள்ளதா இல்லையா, தாங்கு திறன் எவ்வளவு, என்றெல்லாம் பல அம்சங்களில் வீட்டை மதிப்பிடுவார். அவரது மதிப்பீட்டு அறிக்கையை வங்கியிடம் தருவார். அதன் அடிப்படையில்தான் வங்கிகள் பழைய வீட்டுக்குக் கடன் வழங்குவது பற்றி முடிவு செய்யும்.
அது மட்டுமல்ல, புதிய வீட்டுக்கு 100% வங்கிக் கடன் கிடைத்தால், பழைய வீட்டுக்கு அதிகபட்சமாக 75% கிடைத்தாலே பெரிய விஷயம். பழைய வீட்டின் மதிப்பு குறைவாகவே மதிப்பிடப்படும். தனி வீடாக இருந்தால் இடத்துக்கான மதிப்பு கூடியிருக்கும். எனவே, அதை வைத்தும் கடன் வழங்குவதும் உண்டு.
ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்பில் பழைய வீடு, யு.டி.எஸ். (அன் டிவைடட் ஷேர்) 300 சதுர அடி, 200 சதுர அடி என்றே பிரித்துக் கொடுப்பார்கள். அதனால் பெரிய அளவில் கடன் வாங்கவும் முடியாது. மேலும் பழைய வீட்டுக்குக் கடனுக்கு இ.எம்.ஐ. செலுத்த வழங்கப்படும் கால அவகாசம் குறைவாகவே இருக்கும்.
புதிய வீட்டுக்குக் கடன் வாங்கும்போது 10 முதல் 20 சதவீதம் மார்ஜின் தொகையை வைத்தி ருக்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. ஆனால் பழைய வீடாக இருந்தால், 5 முதல் 10 சதவீதம் கூடுதலாக வைத்திருக்க வேண்டும்.
இப்படிப் பல பிரச்சினைகள் இருப்பதால் பெரும் பாலான வங்கிகள் பழைய வீடுகளுக்குக் கடன் அளிக்கக் கெடுபிடிகள் காட்டவும் செய்கின்றன. ஆனால், பழைய வீட்டுக்குக் கடன் பெற முடியும் என்பதை மறுப்பதற்கில்லை என்கிறார்கள் வங்கியாளர்கள்.