என்னுடைய தாத்தா 1982-ம் ஆண்டு 169/1 என்னும் சர்வே எண்ணில் நிலம் வாங்கினார். அந்த நிலத்துக்கு இதுவரை பட்டா வாங்கவில்லை. அந்த நிலத்தின் சர்வே எண் UDR-க்கு பிறகு நான்கு டிவிசன் ஆக (169/1a, 169/1b, 169/2a, 169/2b) பிரிந்துள்ளது. அதை வைத்துக்கொண்டு நிலத்தை விற்றவர், இன்னொருவரிடமும் விற்றுள்ளார். இப்போது நாங்கள் விற்றவரிடம் கேட்டால், ‘முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று மிரட்டுகிறார். இப்போது எவ்வாறு எங்கள் நிலத்துக்குப் பட்டா வாங்குவது? -விக்னேஷ் நாராயணன்
1982-ல் நிலத்தை வாங்கிய உங்கள் தாத்தா உடனடியாகப் பட்டா பெற்றிருக்க வேண்டும். காலி நிலத்தைப் பொறுத்தவரையில் அதன் சுவாதீனம் யாரிடம் உள்ளது என்பதற்குச் சான்று, பட்டா போன்ற வருவாய்த்துறை ஆவணங்களே. எது எப்படி இருப்பினும் உங்கள் தாத்தாவுக்குச் சொத்தை விற்றவர், அதே சொத்தை மீண்டும் வேறு ஒருவருக்கு விற்றது சட்டப்படி குற்றம். இதற்காக நீங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரலாம். அதே போல உங்கள் தாத்தாவுக்குச் சொத்தை விற்றவர் இரண்டாவதாக வேறு நபருக்கு எழுதிப் பதிவுசெய்து கொடுத்துள்ள விற்பனை ஆவணத்தை ரத்துசெய்ய நீங்கள் மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களிடம் புகார் அளிக்க வேண்டும். மேற்படி விற்பனை ஆவணம் ரத்து செய்யப்பட்ட பின்னர் நீங்கள் வட்டாட்சியரிடம் மனு செய்து உங்கள் தாத்தா பெயரில் பட்டா பெற்றுக்கொள்ள முடியும்.
என் அப்பா 10 வருடத்துக்கு முன்பு ஒருவரிடமிருந்து (நில உரிமையாளர்) இடம் வாங்கினார். அந்த இடத்துக்கு என் அப்பா அவருடைய (என் தாத்தா) பெயரில் பவர் மட்டும் முடித்திருக்கிறார். அந்த நில உரிமையாளர் பெயரில் அவ்விடத்தின் பட்டா உள்ளது. பட்டா வாங்கிய நாளிலிருந்து நில உரிமையாளர் அந்த இடத்தை வெற்றிடமாகத்தான் வைத்துள்ளார். அந்த இடத்தின் பக்கத்து இடத்துக்காரர், நாங்கள் பூர்விகமாக இந்த இடத்தை (என் அப்பா வாங்கிய இடத்தை) பயன்படுத்தி வருகிறோம்.
இதை யாருக்கும் கொடுக்க முடியாது என்று உரிமைகோரி வருகிறார். நில உரிமையாளர் ஒரு பெண் என்பதாலும், அவருக்குச் சொந்தங்கள் யாரும் இல்லாததாலும் பக்கத்து நிலத்துக்காரர் பிரச்சினை செய்துவருகிறார். என் அப்பா பவர் எழுதி வாங்கியதால், அதன் பெயரில் வழக்கு தொடர்ந்தார். தவிர்க்க முடியாத காரணங்களால் எங்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்லவில்லை. எதிர் தரப்புக்குச் சார்பாக வழக்கு முடிந்தது. தீர்ப்பின் நகலும் கையில் வந்துவிட்டது. இந்நிலையில் மேல் முறையீடு செய்யமுடியுமா அல்லது புதிதாகத்தான் வழக்கை தொடரவேண்டுமா? -பவித்ரா பிரியதர்ஷினி
உங்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்லவில்லை என்று கூறியுள்ளீர்கள். ஆனால் வழக்கு எந்த நிலையில் இருந்தபோது வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்லவில்லை என்றும், வழக்கு ஒருதலை பட்சமாக தீர்ப்பளிக்கப்பட்டதா அல்லது வழக்கு அதன் தகுதியின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டதா என்றும் நீங்கள் கூறவில்லை. வழக்கு ஒருதலைப்பட்சமாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதே நீதிமன்றத்தில் தகுந்த மனு தாக்கல் செய்து மீண்டும் வழக்கை நடத்தலாம். வழக்கு அதன் தகுதியின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால் தகுந்த நீதிமன்றத்தில் நீங்கள் மேல் முறையீடு செய்யலாம்.
நானும் எனது மகளும் சேர்ந்து எங்களுக்கு வாரிசுரிமையில் கிடைத்த சொத்தை எனது மகனுக்குத் தான செட்டில்மென்ட் செய்து கொடுத்தோம். ஆனால் என் மகன் மேற்கண்ட சொத்தில் யாதொரு உரிமைமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாத நிலையில் அவர் எங்களை கவனிக்காமலும், ஆதரிக்காமலும் இருந்ததால் பதிவுசெய்யப்பட்ட தான செட்டில்மென்டை ரத்துசெய்துவிட்டோம். எங்கள் ரத்து பத்திரம் சட்டப்படி செல்லத்தகுந்ததா? -பெயர் குறிப்பிடப்படவில்லை (enochemi@gmail.com)
நீங்களும் உங்கள் மகளும் சேர்ந்து உங்கள் மகனுக்கு எழுதி பதிவு செய்து கொடுத்த தான செட்டில்மெண்ட் பத்திரம் செயல்படுத்தப்பட்டு விட்டதா இல்லையா என்று நீங்கள் குறிப்பிடவில்லை. அந்த செட்டில்மெண்ட் பத்திரம் செயல்படுத்தப்பட்டு இருந்தால் நீங்கள் செய்துள்ள இரத்து பத்திரம் செல்லத்தக்கதல்ல. செயல்படுத்தப்படாமல் இருந்தால் நீங்கள் செய்துள்ள இரத்து பத்திரம் சட்டப்படி செல்லும். மேலும் தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி பதிவு செய்து கொடுத்து செயல்படுத்தப்பட்டு இருந்தால், உங்கள் மகன் உரிமை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருப்பது மேற்படி தான செட்டில்மெண்டை பாதிக்காது.
உங்களை பராமரிப்பதையும் மற்றும் கவனிப்பதையும் ஒரு நிபந்தனையாக தான செட்டில்மெண்ட் பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்தால், மேற்படி தான செட்டில்மெண்ட் பத்திரத்தினை இரத்து செய்ய உங்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு. அவ்வாறு நிபந்தனை ஏதும் இல்லையெனில் நீங்கள் ஏற்படுத்தியுள்ள இரத்து பத்திரம் சட்டப்படி செல்லாது.
எங்கள் பூர்வீக சொத்தில் எங்களுக்குரிய சொத்துக்களுக்கு தாய் பத்திரம் மட்டுமே உள்ளது. இப்போது வரை நாங்கள் அதற்கான வரி வகைகளை அரசுக்கு செலுத்தி விட்டோம். பெயர் ஒற்றுமை காரணமாக உறவினர் ஒருவர் பட்டா பெற்று அந்த இடத்தை வேறொருவருக்கு பவர் கொடுத்து விற்பனை செய்து கொண்டு இருக்கிறார். அதற்கு ஒரு வக்கீல் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பத்து மாதங்களாக எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் அந்த சொத்துக்களை நாங்கள் பெற நல்ல வழி சொல்ல வேண்டும். -கணேசன் மாணிக்கம்
நீங்கள் ஏற்கனவே ஒரு வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள். மேற்படி வழக்கு நியாயமான காரணங்களால் தாமதமானால் அதாவது முன்னேற்றம் ஏதும் ஏற்படாமல் இருந்தால் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. ஆனால் உங்கள் வழக்கறிஞரின் சேவைக் குறைபாடு காரணமாக தாமதம் ஆனாலோ அல்லது முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தாலோ, நீங்கள் உங்கள் வழக்கறிஞரின் சம்மதம் பெற்று வேறு ஒரு வழக்கறிஞரை நியமித்து வழக்கு நடத்தலாம். மேலும், உங்களைப் போல் பெயர் ஒற்றுமை உள்ள உங்கள் உறவினர் எழுதி பதிவு செய்துள்ள அதிகார பத்திரம் மற்றும் விற்பனை ஆவணம் இரண்டையுமே இரத்து செய்யக்கோரி நீங்கள் மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களிடம் மனுதாக்கல் செய்தும் நிவாரணம் பெறலாம்.
என்னுடைய அப்பா 1973ஆம் ஆண்டு SBI COLONY யில் 2400 சதுர அடி பரப்பளவுள்ள மனையும் அதன் மீது கட்டப்பட்டிருந்த 750 சதுர அடி பரப்பளவுள்ள வீட்டையும் வாங்கினார். 1998ஆம் ஆண்டு முதல் தளத்தில் நான் வீடு கட்டுவதற்கு ஏதுவாக பிரிவு படாத ½ பாக மனையினை என் பெயரில் SETTLEMENT DEED எழுதிப்பதிவு செய்துள்ளார். நானும் உரிய PLAN APPROVAL வாங்கி முதல் தளத்தில் வீடு கட்டி உள்ளேன். 2017ஆம் ஆண்டு என் தந்தை காலமாகி விட்டார். என் சகோதரர் எங்கள் அப்பா 2008ல் எனக்கு எழுதிக்கொடுத்த SETTLEMENT DEED-ஐ ரத்து செய்து விட்டார், அதனால் எனக்கு பாதி பாகம் கிடையாது, வாரிசுகள் 5 பேருக்கும் சம உரிமை உள்ளது என்று வாதிடுகிறார்.
எனக்கு தெரியாமல் SETTLEMENT DEED-ஐ இரத்து செய்ய முடியுமா? நான் எனது வீட்டிற்கு வரி கட்டி வருகிறேன். மேற்படி முதல் மாடி வீட்டை கடந்த 18 வருடமாக வாடகைக்கு விட்டு வாடகை பெற்றும் வருகிறேன். வில்லங்க சான்றிதழ் பெற்றுப் பார்த்தால் SETTLEMENT DEED CANCELLED என்று வருகிறது. தயவு செய்து விளக்கம் அளிக்கவும்.
- ஹரினி ஸ்ரீனிவாசன்
நீங்கள் கூறியவற்றை பார்க்கும்போது உங்கள் அப்பா உங்களுக்கு எழுதிப் பதிவு செய்து கொடுத்துள்ள செட்டில்மெண்ட் பத்திரம் செயல்படுத்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது. மேற்படி செட்டில்மெண்ட் பத்திரம் செயல்படுத்தப்பட்டு 18 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் உங்கள் அப்பா எழுதிப் பதிவு செய்துள்ள இரத்து பத்திரம் சட்டப்படி செல்லாது. உங்கள் அப்பா தனது சுய சம்பாத்திய பணத்தில் மேற்படி சொத்தினை கிரையம் பெற்றிருந்தால், அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்துள்ள தான செட்டில்மெண்ட் பத்திரப்படி மேற்படி சொத்தில் ½ பாகம் உங்களுக்கு உரிமையானது.
உங்கள் அப்பா கிரையம் வாங்கியுள்ள சொத்தின் விற்பனை விலையினை மூதாதையர் சொத்தினை விற்று வந்த பணத்தினைக் கொண்டோ அல்லது இந்து கூட்டுக் குடும்ப வருமானத்தினை கொண்டோ உங்கள் அப்பா கொடுத்திருந்தால் அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்துள்ள செட்டில்மெண்ட் பத்திரமே செல்லாது. அந்த சூழ் நிலையில் உங்கள் அப்பாவின் வாரிசுகள் அனைவருக்கும் மேற்படி சொத்தில் சம உரிமையும் பங்கும் உண்டு.
வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு/கேள்விகளுக்கு |