சொந்த வீடு

நங்கூரம் பாய்ச்சிய வீடு

ம.சுவாமிநாதன்

நிலையான முகவரி

மனுக்களை நிரப்பும்போதெல்லாம்

கண்ணீரே மையாகியது

தெருக்களில் மிதந்தபடி

விலாசங்கள் மாறியது

நங்கூரம் பாய்ச்சிய

நிலையான வீடு

எனது கண்ணிற்குள் கனவு

நனவாகி நிற்கிறது

இப்பொழுது

எங்கள் வீட்டுக் கிரகப்பிரவேச அழைப்பிதழுக்காக நான் எழுதிய கவிதை இது. சொந்த வீடு என்பது ஒவ்வொருவருக்கும் கனவு. பிறந்தது முதல் வாடகை வீட்டிலேயே வாழ்பவர்களுக்குச் சொந்த வீடு வேண்டும் என்பது ஒரு ஆவல் மட்டுமே. சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டுக்கு அலையாய் அலைந்து, விற்ற வீட்டைத் தினந்தோறும் பார்த்துக்கொண்டே செல்வது வலி. அதுபோல அனுபவம் உள்ளவருக்கு மீண்டும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற வைராக்கியம் தோன்றும்.

வாடகை வீட்டின் பிரச்சினைகள்

அகதி என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தத்தைச் சொந்த ஊருக்குள்ளேயே ஒருகைப்பிடி பூமிகூட இல்லாமல் படும் அவஸ்தையில்தான் உணர முடியும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் துயரம் சொல்லில் அடங்காது. வீட்டு உரிமையாளர்கள் சிலரின் சர்வாதிகார எல்லைக்குள் நாம் எல்லாச் சுதந்திரத்தையும் இழந்து வாழ வேண்டும்.

ஒரு மாடியில் வாடகைக்குக் குடியிருந்தபோது கிடைத்த அனுபவம் எனது துயரத்தின் உச்சம், சிறு சத்தம்கூட வரக் கூடாது என என் வீட்டின் உரிமையாளர் ஆணையிட்டிருந்தார். சிறு சத்தம் என்றால் படுக்கையில் தலையணை போடும் சத்தம்கூட கேட்கக் கூடாதாம். கவனமாக இருந்தும் ஒருநாள் தலையணை படுக்கையில் போடும்போது கீழே சத்தம் கேட்டுவிட்டது. அவ்வளவுதான். ஆணையை மீறியதற்காக இரவு என்றுகூடப் பார்க்காமல் சண்டையிட்டுத்தான் தூங்கினார்கள். அதனால் நான் தூக்கம் தொலைந்த இரவுகள் அதிகம்.

ஒரு விஜயதசமி அன்று மதியம் சாமிக்குப் படையல் வைத்து எனது மகள் மனம் உருகிப் பக்திப் பாடல் பாட அனைவரும் உணாச்சியின் விளிம்பில் இருந்த ஒரு கணத்தில், மேலே வந்த வீட்டின் உரிமையாளர் “நான் பணம் போட்டு கட்டிய பளிங்குத் தரையில் தேங்காயை உடைக்கிறீர்களா?” எனக் கோபமாக நான் அருவாளால் தேங்காயை உடைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கடுஞ்சினத்துடன் கடிந்துகொண்டார். அன்று நாங்கள் பெரும் அவமானத்திற்கு உள்ளானோம். அன்று ஒரு தீர்மானத்திற்கு வந்தோம். “எப்படியும் ஒரு வீட்டு மனை வாங்கிவிடுவது” என்று. என் துணைவியாரின் நகை அனைத்தையும் வங்கியில் வைத்து 1.75 லட்சத்தில் ஒரு மனை வாங்கினோம்.

காக்கைக்கு மரக்கிளையினில் கூடு உண்டு

நத்தைக்கு அதன் முதுகினில் கூடு உண்டு

மனிதன் வசிக்க ஒரு வீடு இல்லையே

என்ற கவிஞனின் ஏக்க வரி என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். வீட்டுக் கடன் பெறுவதற்கு அலுவலகத்திலேயே கடன் வாங்கினால் சம்பளத்தில் பிடித்துக்கொள்வார்கள். பெரிய சுமையாக இருக்காது என நண்பர்கள் சொன்ன அறிவுரைக்கேற்ப அலுவலகத்தை அணுகியபோது அவர்கள் சொன்ன சான்றிதழ்களை வாங்குவதற்காக நான் அடைந்த இன்னல்கள், சொன்ன பொய்கள் ஏராளம்.

“எப்படி பிளாட் வாங்கினீர்கள்?” என்ற கேள்விக்கு எனது மனைவியின் மஞ்சள் கயிறு மட்டும்தான் மிச்சம் என்ற உண்மையைச் சொல்வதற்கு அரசாங்க நடைமுறையில் இடமில்லை. எனது தந்தை பணம் கொடுத்தார் என்று பொய் சொன்னேன். அலுவலகத்தில் கையெழுத்து வாங்குவதில் ஆரம்பித்து பட்டா வாங்குவதுவரை ஏற்பட்ட சிரமங்கள் அதிகம்.

வீடு கட்ட வரைபடம்

நல்ல ஒரு பொறியாளரைக் கொண்டு கட்ட வேண்டும் என்று முடிவு செய்தபோது அப்போதுதான் படித்து வெளியே வந்த ஒருவர் அறிமுகமானார். அவர் கட்டிய ஒன்றிரண்டு வீடுகளைப் பார்த்துத் தைரியமாக அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். அவர் என்னிடம் சொன்ன முதல் வார்த்தை, “சார், எனக்கு வாஸ்து தெரியாது. எனது விருப்பத்திற்கு நீங்கள் ஒத்துழைத்தால் செய்து தருகிறேன்” என்றார். அவர் காகித்தில் வரைந்ததை ஓவியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதைக் கண் எதிரே கொண்டு வந்து நிறுத்தினார் ஒரு திறமையான மேஸ்திரி. வீடு கட்டுவதற்கு ஜல்லிக்கும், மணலுக்கும்தான் சிரமப்பட்டேனே தவிர பொறியாளர் மேஸ்திரி இருவரின் உழைப்பு மிகப் பெரிய நம்பிக்கையையும் ஆதரவையும் தந்தது. அவர்கள் இருவரின் உழைப்பால் வீடு அழகாகப் பூமிக்குள்ளிருந்து முளைத்து வந்தது.

வீடு கட்ட ஆரம்பித்ததிலிருந்து இயற்கை நல் ஒத்துழைப்பை நல்கிக் கொண்டிருந்தது. செண்டிரிங் போடுவதற்கு நல்ல நாள் பார்த்து முடிவான பிறகு அன்று கலவை இயந்திரம் ஓட ஆரம்பித்தவுடன் 50 தொழிலாளார்களின் உற்சாகக் குரலையும் மீறி மழை பெரும் சத்தத்துடன் வந்தது. வாழ்வில் முதன்முறையாக அனைத்து தெய்வங்களிடமும் வேண்டினேன்.

ஆனால் இயற்கை அதனுடைய செயலை நன்றாக செய்து முடித்து ஒரு நேரத்திற்கு பிறகு மழை ஓய்ந்தது. தொழிலாளார்கள் அனைவரும் அடுத்த மழை வருவதற்குள் வேலை முடித்துவிட வேண்டும் என்று பசியைக்கூடப் பாராமல் சீக்கிரமாக முடித்தார்கள். அனைவருக்கும் எனது மனைவி சாப்பாடு பரிமாறி அவர்களது உள்ளத்தை எங்களால் முடிந்த அளவுக்கு நன்றியைப் பிரதி உபகாரமாக்கினோம்.

எனது வாழ்வில் என்னுடைய படிப்பிற்கு உதவிய எனது உறவினரை வைத்து இல்லத் திறப்பு விழா நண்பர்கள் உறவினார்கள் என அனைவரும் புடை சூழச் சிறப்பாக செய்து முடித்தேன். சொந்த ஊரை விட்டு வெளியேறிய சோகம் வீடின்றி அலைந்த துயரம், அவமானம் எல்லாம் கண்ணீராய்க் கரைய எனது புதுமனைக்குள் காலடி வைத்தோம்.

SCROLL FOR NEXT