தனிக் கழிப்பறை வசதி என்பதே ஆதிக்கச் சாதியினருக்கும் மேட்டுக்குடியினருக்கும் மட்டுமே உரியது என்கிற நிலையிலிருந்து விடுபட இன்னும் நகரத்துக்கு அப்பால் உள்ள இந்தியா போராடிக்கொண்டிருக்கிறது. அப்படியே கழிப்பறை கட்டினாலும் குடியிருப்புக் கட்டுமானத்தில் மற்ற அறைகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை இன்றும் பெரும்பாலான இந்தியர்கள் கழிப்பறைக்குத் தருவதில்லை.
மெழுகைப் பார்த்து உந்துதல்
இதற்கிடையில் கழிப்பறையின் 4,500 ஆண்டுகால உலக வரலாற்றைத் தாங்கி நிற்கிறது டெல்லியில் உள்ள சுலப் சர்வதேச அருங்காட்சியகம் (Sulabh International Museum of Toilets). மரம், இரும்பு, பீங்கான் உள்ளிட்ட வெவ்வேறு பொருட்களால் ஆன கலை நயத்தோடு அலங்கரிக்கப்பட்ட கழிப்பிடங்கள் இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள. ஒவ்வொன்றையும் தேடிக் கண்டுபிடித்து அழகுடன் அவற்றை மேற்கு டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் காட்சிப்படுத்தியவர் பகேஷ்வர் ஜா.
லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தை 1952-ல் பார்வையிட்டார் பகேஷ்வர் ஜா. உடனடியாக இந்தியாவில் உலகின் முதல் கழிப்பிட அருங்காட்சியகத்தை நிறுவ நினைத்தார். டெல்லியில் உள்ள அனைத்துத் தூதரகங்களுக்கும் இது குறித்துக் கடிதம் எழுதினார். அதன் மூலம் உலக நாடுகளின் கழிப்பிட வரலாற்றைச் சேகரித்தார். சமூக ஆர்வலர் முனைவர் பிந்தேஷ்வர் பதக் தலைமையில் 1992-ல் சுலப் சர்வதேச அருங்காட்சியகம் நிறுவினார்.
கழிப்பறை எல்லோருக்குமானது!
உலகின் பழம்பெரும் நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரிகத்தின்போது கட்டமைக்கப்பட்ட வடிகால் மற்றும் சுகாதார அமைப்பு இங்கு விளக்கப்பட்டுள்ளது. கி.மு. 2500-ல் ஹரப்பா, மோஹென்ஜோ தாரோவில் எவ்வாறு நிலத்தடி வடிகால் திட்டம் வடிவமைக்கப்பட்டது, கிணறு, குளியல் தொட்டி உள்ளிட்டவைகள் எப்படிக் கட்டப்பட்டன என்பன தொடரான அரிய ஒளிப்படங்கள் இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பழங்கால இந்தியா சுகாதாரத்தில் எவ்வளவு முன்னேறி இருந்தது என்பதையும் அவை நமக்கு உணர்த்துகின்றன.
இங்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பல விதமான கழிப்பிடங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது, பிரெஞ்சு மன்னர் லூயிஸ் 16 பயன்படுத்திய வித்தியாசமான கழிப்பிடத்தின் மாதிரி. சில மணித்துளிகளைக்கூட வீணடிக்க விரும்பாத காரணத்தால் தன்னுடைய அரியணையிலேயே கழிப்பிடத்தையும் பொறுத்தினார் லூயிஸ் 16. அதேபோல நீர்முழ்கிக் கப்பலில் பயன்படுத்த ஏதுவாக அமெரிக்கக் கடற்படை வடிவமைத்த ‘இன்கினோலெட்’ என்னும் மின்சாரக் கழிப்பிடம் அதிசயிக்க வைக்கிறது. ஒரு பட்டனை அழுத்தினால் கழிவுகள் பொசுங்கிச் சாம்பல் ஆகிவிடுகின்றன.
உலகின் வினோதமான அருங்காட்சியகங்களின் தரவரிசைப் பட்டியலில் இதற்கு மூன்றாவது இடம் அளித்துள்ளது டைம்ஸ் பத்திரிகை. ஆண்டுதோறும் இங்கு 10 ஆயிரம் பேர் பார்வையிடுகிறார்கள். இவர்களுடைய இணையதளத்துக்கு 30 லட்சம் லைக்ஸ் கிடைத்திருக்கிறது. இதற்கு நுழைவு கட்டணமோ, வழிகாட்டி கட்டணமோ கிடையாது. காரணம், இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டதன் அடிப்படை நோக்கம் ‘கழிப்பறை எல்லோருக்குமானது’ என்பதே!