ஒ
ரு வீடு எப்படி இருக்கும், வீட்டில் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை வீட்டின் வரவேற்பறை ஓரளவு காட்டிக் கொடுத்துவிடும். அப்படிப்பட்ட வரவேற்பறையை ஒழுங்காக வைத்துக்கொள்வது அவசியம் அல்லவா, அதை எப்படி எனப் பார்ப்போமா?
தெருவைப் பார்த்தபடியோ காம்பவுண்ட் வாசலுக்கு நேராகவோ வரவேற்பறையை அமைக்க வேண்டாம். குறைந்தபட்சம் நான்கடி உயர ஜன்னல்கள் அறையில் இருக்க வேண்டும். வீட்டுக்குள் இயற்கை வெளிச்சம் வருவது மின் சிக்கனத்துக்கும் நல்லது. சூரிய வெளிச்சம் நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்க் கிருமிகளைக் கொன்றுவிடும். அதனால் உடலுக்கும் ஆரோக்கியம். ஜன்னல்கள் எதிர் எதிர் திசையில் இருப்பது அமைப்பாக இருக்கும்.
பெரிய பங்களா வீடுகளில் வரவேற்பறையின் தளத்தை மேடு பள்ளமாக அமைப்பது ஒரு வழக்கம். தமிழ் சினிமாக்களில் அம்மாதிரியான பங்களாக்களைப் பார்த்திருப்போம். ஆனால், நடுத்தர வீடுகளில் தரைத் தளம் சமமாக அமைவதே பொருத்தமாக இருக்கும். ஐதீகப்படி இது நன்மையைத் தரும் எனவும் சொல்கிறார்கள்.
ஆனால், தளம் மேடு பள்ளமாக இருந்தால் நமக்குப் புழக்கத்துக்கு வசதியாக இராது என்பதுதான் முக்கியக் காரணம். இடப் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் வரவேற்பறையின் மூலையிலேயே கழிப்பறைகளை அமைக்கலாம். அப்படி இல்லாதபட்சத்தில் வீட்டின் பின்புறம் கழிப்பறைகளை அமைப்பதே சிறந்தது.
அதுபோல வரவேற்பறையை வடிவமைக்கும் முன் அறையில் அறைக்கலன்களை (Furnitures) எங்கு, எப்படி வைக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். வரவேற்பறையில் புத்தக அலமாரி ஒன்றை நிறுவுவதாக இருந்தால் அறை கட்டப்படுவதற்கு முன்பே முடிவெடுத்துவிடுங்கள். அதற்கேற்ப வரவேற்பறையை அழகாகக் கட்டலாம்.
வரவேற்பறையின் உள்ளே மாடிப்படிகளை அமைப்பது முன்பைவிட இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. படிக்கட்டுகளை அமைப்பதில் இரு வகை உண்டு. அதாவது வெளிப்புறமாக அமைக்கும் படிக்கட்டுகள். மற்றொன்று உட்புறமாக அமைக்கும் படிக்கட்டுகள். இவற்றுள் உட்புறப் படிக்கட்டுகள் பெரும்பாலும் வரவேற்பறையிலேயே அமையும். அதனால் படிக்கட்டுகள் அமைக்கும் விஷயத்தில் அழகுணர்ச்சி தேவை.
அதே சமயத்தில் அழகாக அமைக்கிறோம் என வீட்டில் உள்ள பெரியவர்கள் பயன்படுத்த சிரமமான படிகளை அமைத்துவிடக் கூடாது. வீட்டில் உள்ளவர்களின் உடல் நிலையையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.
வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் ஆகியோர் சிரமம் இன்றிப் பயன்படுத்தும் வகையில் மாடிப்படிகள் அமைக்க வேண்டியது அவசியம். அதுபோல் கட்டிடத்துக்கான வரைபடத்தைத் தீர்மானிக்கும்போதே படிக்கட்டுகள் குறித்துத் தீர்மானிக்க வேண்டும். சிலர் வரைபடம் அமைத்துக் கட்டிடப் பணிகள் தொடங்கிய பிறகு படிக்கட்டுகள் வரவேற்பறையில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என நினைப்பர். அவசரகதியில் கட்டும்போது நாம் நினைத்தபடி படிக்கட்டுகள் அமையாது. அதனால் படிக்கட்டுகள், வீட்டின் உட்புறத்திலா வெளிப்புறத்திலா என்பதை முடிவுசெய்ய வேண்டியது அவசியம்.
படிக்கட்டுகளின் சாய்வு 25 முதல் 40 டிகிரி கோணத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். படிக்கட்டுகளின் அகலமும் நீளமும் பெரிதாக அமைந்தால் பெரியவர்கள் பயன்படுத்த நன்றாக இருக்கும். படிக்கட்டுகளைத் திருப்பங்களுடன் அமைக்க வேண்டும். திருப்பங்கள் அற்ற படிக்கட்டுகள் ஏறுவதற்கு நல்லதல்ல. வட்ட வடிவத் திருப்பம் போன்று திருப்பங்களை அமைப்பதிலும் பல வகை உள்ளன. உங்களுக்குப் பிடித்தமானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.