வீட்டில் இருக்கும் பொருட்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பெட்டிகள், கூடைகள், தொட்டிகள், தட்டுகள் போன்றவற்றைப் பலவகைகளில் பயன்படுத்துகிறோம். வீட்டின் முக்கிய அறைகளில் பயன்படுத்தும் இந்தக் கூடைகள், பெட்டிகள் போன்ற கொள்கலன்களைச் சரியான வகையில் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். வீட்டின் தோற்றத்தை எந்த வகையிலும் அவை பாதிக்காமல் இருக்க வேண்டியதும் அவசியம். அத்துடன், வீட்டில் இருக்கும் பொருட்களையெல்லாம் இப்படிப் பிரித்து தனித்தனியாக அடுக்கிவைத்துவிட்டாலே பொருட்களைத் தேடுவதற்குச் செலவிடும் நேரம் பெரிய அளவில் மிச்சமாகும். எந்த மாதிரியான பொருட்களை எந்த மாதிரியான கொள்கலன்களில் அடுக்கிவைக்கலாம் என்பதற்கான ஆலோசனைகள்...
நார்க் கூடைகள்
வரவேற்பறையில் பொருட்களைச் சேகரித்துவைப்பதற்கும், குழந்தைகள் அறையில் பொம்மைகளைச் சேகரித்துவைப்பதற்கும், அலுவலக அறையில் முக்கிய ஆவணங்களைச் சேகரித்துவைப்பதற்கும் இந்த நார்க் கூடைகளைப் (Wicker Baskets) பயன்படுத்தலாம். இந்தக் கூடைகளை ஒரே நிறத்தில் வாங்கிப் பயன்படுத்துவது அறையின் தோற்றத்தைப் பாதிக்காமல் இருக்கும்.
கம்பிக் கூடைகள்
குழந்தைகள் அறையில் பயன்படுத்துவதற்கு இந்த வகையான கம்பிகள் வைத்த அடுக்குக் கூடைகள் ஏற்றவை. குழந்தைகள் பயன்படுத்தும் காகிதம் முதலிய எழுது பொருட்களை இந்தக் கூடைகளில் அடுக்கிவைக்கலாம். குழந்தைகளின் துணிகள், துண்டுகள் போன்றவற்றையும் இதில் அடுக்கிவைக்கலாம்.
வண்ண வண்ணக் கூடைகள்
உங்களுடைய வீட்டில் நிறையப் பேர் இருந்தால், பொருட்களை எளிமையாக அடுக்கிவைப்பதற்கு ஏற்ற வழி இந்த வண்ணக் கூடைகள்தான் (Color bins). ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த நிறக் கூடையில் அவர்களுடைய பொருட்களை அடுக்கிவைக்கலாம். இது பொருட்களை அடையாளம் காண்பதற்கு எளிமையான வழியாகும்.
ஒளிப்படக் கோப்புப் பெட்டிகள்
அடிக்கடிப் பயன்படுத்தும் கோப்புப் பெட்டிகளில் குடும்ப உறுப்பினர்களின் ஒளிப்படங்களை ஒட்டிவிட்டால், கோப்புகளைத் தேடுவதில் சிரமம் இருக்காது. இப்படிப் பிரித்து அடுக்குவதால், முக்கியமான கோப்புகளை எங்கு வைத்திருக்கிறோம் என்பது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.
சுவரிலும் பொருத்தலாம்
‘வால் ஆர்கனைசர்ஸ்’, ‘வால் பாக்கெட்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்தச் சுவர் மாட்டிகளை வீட்டில் இருக்கும் சின்ன சின்னப் பொருட்களை அடுக்கிவைப்பதற்குப் பயன்படுத்தலாம். படிக்கும் மேசை, குழந்தைகளின் அறை போன்றவற்றில் இந்தச் சுவர் மாட்டிகளைப் பயன்படுத்தலாம். அத்துடன், தினசரி பயன்படுத்தும் செய்தித்தாள்கள், பத்திரிகைகள் போன்றவற்றை வைப்பதற்கு ‘வால் பாக்கெட்ஸ்’ பொருத்தமாக இருக்கும்.
கண்ணாடி பாட்டில்கள்
உங்களுடைய குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது கைவினைப் வேலைப்பாடுகளில் ஆர்வமிருந்தால், அவர்களுடைய பொருட்களை அடுக்கிவைப்பதற்கு ஏற்றவை கண்ணாடி பாட்டில்கள். வண்ண வண்ண நூல்கள், மணிகள் போன்றவற்றைக் கண்ணாடி பாட்டில்களில் அடுக்கிவைத்தால் அறையில் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.
பயணப் பெட்டிகளும் பைகளும்
பயணங்களுக்குப் பயன்படுத்தும் பெட்டிகளையும் பைகளையும்கூட வீட்டின் பொருட்களை அடுக்கிவைப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அடிக்கடி பயன்படுத்தப்போவதில்லை என்பதால் இவற்றில் குளிர்காலத்துக்குப் பயன்படுத்தும் துணிகள், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை அடுக்கிவைத்துக்கொள்ளலாம். அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கைக்குட்டைகள், துண்டுகள் போன்றவற்றை எளிதில் எடுத்துப் பயன்படுத்தும்படி பைகளில் போட்டுச் சுவரில் மாட்டிவைக்கலாம்.
பெரிய கூடைகள், சின்ன கூடைகள்
கூடைகளை வாங்குவதற்குத் தேர்ந்தெடுக்கும்போது எந்தப் பொருட்களைச் சேகரிக்க வாங்குகிறீர்கள் என்பதை முடிவுசெய்தபிறகு, தேர்ந்தெடுங்கள். பெரிய கூடைகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அவற்றை எல்லா வகையிலும் பயன்படுத்த முடியாது. கணிசமான பொருட்களைப் போட்டுவைக்க மட்டுமே பெரிய கூடைகளைப் பயன்படுத்த முடியும். அதுவே சின்ன கூடைகளாக இருந்தால், நிறையப் பொருட்களைப் பிரித்து அடுக்கிவைத்துக்கொள்வதற்குப் பயன்படுத்த முடியும். நீளமான, தட்டையான கூடைகளைப் பயன்படுத்தும்போது, அவற்றை மேசைகள், கட்டில்களுக்கு அடியில் அடுக்கிவைத்துக்கொள்ள வசதியாக இருக்கும். அதனால், உங்களுடைய வீட்டின் தேவைகளுக்கு ஏற்ப கூடைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
கூடைகளில் பொருட்கள் நிரம்பி வழியத் தொடங்கிவிட்டால், தேவையில்லாத பொருட்களை அகற்றுவதற்கு நேரம்வந்துவிட்டது என்று அர்த்தம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, தேவையில்லாத பொருட்களைக் கூடைகளிலிருந்து அகற்றிவிடுவது நல்லது. கூடைகளில் எப்போதும் அளவான பொருட்களை வைப்பது, அன்றாடம் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும்.