ஒரு கட்டுமானத்துக்கு எவ்வளவு ஆற்றல் தேவைப்படுகிறது தெரியுமா? உதாரணமாக, கட்டுமானக் கல்லாகச் செங்கல்லைப் பயன்படுத்துகிறோம். அதைத் தயாரிக்க மண்ணை வெட்டி எடுக்கிறோம். அதைச் சுடுவதற்காகச் சூளையில் விறகுகளை எரிக்கிறோம். இப்படி ஒரு சிறு கல்லுக்கு இவ்வளவு ஆற்றல் தேவைப்படுகிறது. ஒரு கட்டிடம் முழுமையாக அதிக அளவு ஆற்றல் தேவைப்படுகிறது. என்பது நாம் அறிந்ததே. அதேபோல் நாம் பயன்படுத்தும் கட்டுமானப் பொருள்களை உருவாக்கவும் ஏராளமான ஆற்றல் தேவைப்படுகிறது.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஆற்றலில் 20 முதல் 25 சதவீத ஆற்றல் இந்தக் கட்டுமானப் பொருள்களைத் தயாரிக்கத் தேவைப்படுகிறது. இந்தியாவில் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும் அடிப்படைக் கட்டுமானப் பொருள்களான சிமெண்ட், ஸ்டீல், கண்ணாடி, அலுமினியம், சூளைச் செங்கல், கான்கிரீட், டைல்ஸ், மார்பிள்ஸ் போன்ற ஒவ்வொரு கட்டுமானப் பொருள்களுக்கும் ஒவ்வொரு அளவான ஆற்றல் அவசியப்படுகிறது.
இவற்றில் அலுமினியக் கட்டுமானப் பொருள்களைத் தயாரிக்கவே அதிக ஆற்றல் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக இரும்புப் பொருள்களைத் தயாரிக்க ஆற்றல் அவசியமாகிறது. இரும்புப் பொருள்களுக்குத் தேவைப்படுவது போல் நான்கு மடங்குக்கும் மேலான ஆற்றல் அலுமினியப் பொருள்களைத் தயாரிக்கத் தேவைப்படுகிறது. அதேபோல் கான்கிரீட்டைவிட அதிக ஆற்றல் சூளைச் செங்கலை உருவாக்கத் தேவைப்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. செராமிக் டைல்களை உற்பத்தி செய்யவும் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.