சொந்த வீடு

புதுமை செய்யும் செடிகள்

விஜிலா தேரிராஜன்

வீட்டைப் பசுமையாக வைத்துக்கொள்ள விருப்புகிறீர்களா? அப்படியானால் வீடு கட்டும்போதே அதற்காகத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். சிலர் வீடு கட்டிய பிறகு பூந்தொட்டிகள் வைக்கலாம் எனத் திட்டமிடு வார்கள். அழகாகக் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை இடித்துத் துளையிடுவார்கள். அதனால் வீண் செலவும் ஆகும். கட்டிடமும் பாழாகும். அதற்கு எங்கெல்லாம் தொட்டி அமைக்க வேண்டும் என்பதை முன்பே தீர்மானித்தால் இந்தச் செலவைக் குறைக்கலாம். ஒழுங்காகவும் திட்டமிட்டுத் தொட்டிகளை அமைக்கலாம்.

சுவரிலேயே செடி வளர்க்கலாம்

காம்பவுண்ட் சுவரிலேயே செடிகள் வளர்க்கலாம். இது வீட்டிற்குப் புதிய வண்ணத்தை அளிக்கும். அழகு மட்டும் அல்ல. உற்சாகம் தரும் பசுமை வீடாக நம் வீட்டை மாற்றிவிடும். இதற்குச் சுவரிலேயே கொடிகள் வளர்ப்பதற்கான தொட்டிகள் அமைத்துக் கொடிகளைப் படர விடலாம். சுவர் முழுவதும் தொட்டிகள் அமைத்து வண்ணப் பூச்செடிகள் வளர்க்கலாம். அவை காண்பதற்கு அழகாக இருக்கும்.

அதுபோல காம்பவுண்ட் உள்புறச் சுவரில் தனித்தனியாக நீள் செவ்வகம், சதுர வடிவில் மாடங்கள் வைத்துக் கட்டினால் டேபிள் ரோஜா போன்ற சிறிய பூச்செடிகள், மண் ஜாடிகள், சிலைகள் வைக்கலாம். தூரத்தில் இருந்துபார்க்கும்போது நல்ல தோற்றத்தைத் தரும்.

மெயின் கேட்டுக்கும், தலைவாசலுக்கும் இடையில் உள்ள தூரத்தைப் பொறுத்து அதற்கு ஏற்றவாறு வீடு கட்டும்போதே பந்தல் அமைத்துவிட வேண்டும். மரச் சட்டத்திலோ, இரும்புச் சட்டத்திலோ அமைக்கலாம். இதன் மேல் அழகான கொடிகளைப் படரவிடலாம்.

ஜன்னலிலும் தோட்டம்

ஜன்னலின் வெளியே அதிக உயரமில்லாமல் பூத்தொட்டி கட்டிச் செடி வளர்க்கலாம். அலங்காரச் செடிகள் மட்டுமல்ல. கொத்த மல்லி, புதினா, பொன்னாங்கண்ணி கீரை போன்ற பயன்படக் கூடிய தாவரங்கள் வளர்க்கலாம். இவை அதிக உயரம் வளராது. வேர்களும் குறைவு. அழகாகவும் இருக்கும். சமையலுக்கும் உதவும். தொட்டி கட்டாமல் தனித் தனியே தொட்டிகளை வரிசையாக அடுக்கி வைத்துக் கொள்ளலாம்.

செண்டிரிங் போடும்போதே இரும்பு வளையங்கள் பொருத்திவிட வேண்டும். வளையங்களில் தொட்டிச் செடிகள், டெரகோட்டா மணிச் சக்கரங்கள் தொங்கவிட வசதியாய் இருக்கும். பால்கனியின் சுவரில் இரும்புப் பட்டை ஆழமாக அடித்துக் கொள்ள வேண்டும். அதில் பூந்தொட்டிகளை அமைக்க வசதியாக இருக்கும். பூச்சு வேலை நடக்கும் போதே இதைச் செய்துவிட வேண்டும்.

வீட்டின் வெளிச் சுவரில் இரும்பு வளையத்தைப் பொருத்திப் பூசிவிட்டால் கூடைப் பந்து விளையாடலாம். வலையை நீக்கிவிட்டுத் தொட்டியும் வைத்துக் கொள்ளலாம். மாடித் தோட்டம் போட விரும்புபவர்கள் கைப்பிடிச் சுவரிலேயே நீர்க் கசிவு இல்லாதவாறு ஒயிட் சிமெண்ட் கலந்து நீளத் தொட்டிகள் அமைத்துவிடலாம். நீர் வெளியேற உள்புறமாய்த் துளைகள் வைக்க வேண்டும். அதுவும் பிவிசி பைப் கொண்டு சற்று நீட்சியாய் வைத்தால் நீர் வெளியேறும்போது சுவர் பாழாகாது.

SCROLL FOR NEXT