இந்த முறை பருவ மழை தவறிவிட்டது. கோடைக் காலம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக இருக்கிறது. அதே போல் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வருமோ என எல்லோரிடமு ஓர் அச்சம் இருக்கிறது. இந்தக் கோடைக்காலத்தில் மட்டுமல்ல. உலக முழுவதிலும் நீர்ப் பற்றாக்குறை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் பரவலாக உலகமெங்கும் முன்னெடுக்கப்படுகின்றன. மழை நீர் சேகரிப்பு தமிழ்நாட்டில் கட்டாயமாக்கப்பட்டது அதன் ஒரு பகுதிதான்.
மழைநீர் சேகரிப்பு, செயற்கை மழை, கழிவுநீர் சுத்திகரிப்பு எனத் தண்ணீர் கிடைக்கும் முறைகளை விரிவுபடுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். நம்மிடம் இருக்கும் தண்ணீரை நாம் ஒழுங்காகப் பயன்படுத்துகிறோமா?
இந்தக் கேள்வி இந்த நூற்றாண்டில் எழுப்பப்பட வேண்டிய முக்கியமான கேள்வி. ஏனெனில் செலவுசெய்வது என்பது அன்றாடச் செயலாகவே இந்த நூற்றாண்டில் ஆகியிருக்கிறது. பணம், பெட்ரோல், மின்சாரம், எரிவாயு என எல்லாவற்றையும் கணக்கில்லாமல் செலவழிக்கும் போக்கு இப்போதுதான் அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் ஒன்றுதான் தண்ணீர். மலம் கழிக்க, பல் தேய்க்க, குளிக்க, குடிக்க, சமையல்செய்ய, பாத்திரம் கழுவ இன்னும் பல காரியங்களுக்கு நீரைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஒரு காரியத்துக்கு இவ்வளவு நீர்தான் பயன்படுத்த வேண்டும் என்ற மன உணர்வு நமக்கில்லை. நீர்ப் பற்றாக்குறை குறித்த விழிப்புணர்பு இல்லை.
நீர் சேகரிப்பு வழிமுறைகள் வழியாக நீர் சேகரிப்பு அதிகரித்தாலும் நீர்ச் செலவுகளைக் கட்டுப்படுத்தாத வரை பற்றாக்குறை தொடர்வதைத் தடுக்க முடியாது. அதனால் முதலில் நீரைச் செலவழிப்பதில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும். அதன் ஒரு பகுதியாகத்தான் ‘நீரில்லாக் கழிவறை’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கழிவறைகளில் மலத்தைக் கோப்பைகளின் வழியாக வெளியேற்ற அதிகமான நீரைச் செலவழிக்கிறோம். வெஸ்டர்ன் கழிவறையில் மிகக் கூடுதலாக நீர் வீணாகிவருகிறது. இப்போது வீடுகள், அலுவலகங்கள் பல பகுதிகளிலும் வெஸ்டர்ன் கழிவறைகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த நீரில்லாக் கழிவறை கிராமப்புறங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் ஏற்றது.
நீரில்லாக் கழிவறையின் இயங்குமுறை
பொதுவாகக் கழிவறைக்கு மலத் தொட்டி அமைப்பது வழக்கம். ஆனால் இந்த நீரில்லாக் கழிவறைக்கு மலத் தொட்டி அவசியமல்ல. பூமியில் தரைத் தளத்தை மட்டும் அமைத்துக்கொள்ள வேண்டும். மலம் அப்புறப்படுத்தும் அறை கட்டப்பட வேண்டும். அதற்கு மேலே சாதாரணமாகக் கழிவறைக்கு அமைப்பதுபோல இரு கோப்பைகள் அமைக்க வேண்டும். ஒரே கழிவறைக்குள்ளே இந்த இரு கோப்பைகளும் இருக்கும். ஆனால் இந்தக் கழிவுக் கோப்பை, சாதாரணக் கோப்பையைப் போல் அல்லாமல் மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருக்கும்.
சாதாரணக் கோப்பையில் கால் வைப்பதற்கு இடம் இருக்கும். ஒரே குழி இருக்கும். ஆனால் இதில் முதலில் ஒரு சிறிய பள்ளம் இருக்கும். பிறகு மலக் குழி. பின் பகுதியில் சிறு பள்ளம். முன் பகுதிப் பள்ளம் சிறுநீர் செல்வதற்கான வழி, நடுவில் உள்ளது மலக் குழி. பின் பகுதியில் உள்ளது, மலம் கழுவும் நீர் வெளியேறுவதற்கான வழி.
சிறுநீரும் மலம் கழுவும் நீரும் பள்ளங்களில் விழுந்து இரு வேறு குழாய்களின் வழியாக வெளியேற்றப்படும். மலம் மட்டும் கிழே உள்ள மலம் அப்புறப்படுத்தும் அறையில் வந்து விழும். மலம் கழிப்பவர், மலம் கழித்ததும் மலக் குழிக்குள் சாம்பல், சுண்ணாம்பு, மணல், சோடா ஆகியவற்றின் கலவையை இட வேண்டும். இது கழிவறைக்குள் இருக்கும். இந்தக் கலவை மலத்தைச் சிதைவடையச் செய்கிறது. இந்த அறையில் மலம் நிறைந்ததும் பின் பகுதியில் உள்ள கதவைத் திறந்து அப்புறப்படுத்த வேண்டும். அந்த இடைவெளியில் இரண்டாவதாக உள்ள மலக் குழியைப் பயன்படுத்த வேண்டும்.