சொந்த வீடு

சூரிய மின்சக்தி மைதானம்

செய்திப்பிரிவு

கட்டிடத் துறை சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக மாறிவருவதை நாம் பார்க்க முடிகிறது. அதற்கு ஏற்றாற்போல் மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன. முக்கியமாகப் பொதுப் பயன்பாட்டுக் கட்டிடங்களில் இம்முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் சூரிய மின் சக்தி சார்ந்த விளையாட்டு மைதானங்கள் கட்டப்பட்டுவருகின்றன. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள விளையாட்டு மைதானங்களும் சூரிய மின்சக்தி சார்ந்ததாக மாற்றப்பட்டுவருகின்றன. உதாரணமாக பெங்களூரு சின்னசாமி விளையாட்டு மைதானம் சூரிய மின்சக்தி சார்ந்ததாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் முழுவதும் சூரிய மின்சக்தி சார்ந்த மைதானங்கள் என்பது உலக அளவில் மிகக் குறைவுதான். அவற்றில் ஒன்றுதான் தைவானில் உள்ள கய்ஷியோங் தேசிய விளையாட்டு மைதானம்.

இந்த மைதானம்தான் உலகின் முதல் முழுமையான சூரிய மின்சக்தி மைதனாம். இது 2009- ல் பயன்பாட்டுக்கு வந்தது. அந்த நாட்டில் ஆண்டு தோறும் ஜூலையில் நடைபெறும் கால்பந்துப் போட்டுகளுக்காக உருவாக்கப்பட்டது. 55 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இந்த மைதானம் தைவானின் மிகப் பெரிய மைதானமாகவும் உள்ளது. சீனாவின் பாரம்பரியமான கற்பனை விலங்கான டிராகனின் வால் அமைப்பை ஞாபகப்படுத்தும் வகையில் இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. 8 ஆயிரத்து 844 சூரியத் தகடுகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானம் தனது மின்சக்தியை மட்டுமல்லாது சுற்றியுள்ள பகுதிகளின் 80 சதவீத மின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இதன் மூலம் மின் சக்தி தயாரிப்புக்காக 660 டன் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றப்படுவது தடுக்கப்படுகிறது.

இந்த மைதானத்தை டொயோ இடோ என்னும் ஜப்பானியப் பொறியாளர் வடிவமைத்துள்ளார். இவர் உலகின் நவீன கட்டிட வடிவமைப்பாளர்களுள் ஒருவர். கட்டிடத் துறையின் மிக உயரிய விருதான பிரிட்ஸர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

- தொகுப்பு: ஜெ.கே.

SCROLL FOR NEXT