மிக உயரமான எண்ணற்ற படிக்கட்டுகளைப் பார்த்தால் பலருக்கும் ஒருவித ஆயாசம் தோன்றும். யாரால் இவ்வளவு படிகளை ஏறமுடியும் என்று பெருமூச்சு விட்டால், “பின்னே என்ன உன்னை தூக்கிக் கொண்டு அந்தப் படிகளே நகருமா என்ன?” என்று கூட இருப்பவர்கள் கிண்டலாகக் கேட்கக் கூடும்.
ஆனால் இப்போது நகரும் படிகள் நகர மக்களுக்கு சகஜமான ஒன்றாகிவிட்டன. எஸ்கலேட்டர் எனப்படும் இவை பெரிய மால்களிலும், ரயில் நிலையங்களிலும் பெருமளவில் காணப்படுகின்றன. அந்தக் காலத்தில் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்களைத்தான் பல்லக்கில் தூக்கிக் கொண்டு போவார்கள். இந்த நகர்படிகள் உங்களை அதேபோல் ‘தூக்கிக் கொண்டு’ செல்லக் கூடியவை.
இது எப்படி வேலை செய்கிறது என்ற வியப்பு அதில் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்குமே வருவது இயல்பு. நகர்படிகள் எனப்படும் Escalator இயங்குவதை இப்படி எளிமையாகக் குறிப்பிடலாம். நகரும் படிகளுக்குக்கீழ் ஒரு பெல்ட் இருக்கிறது. இந்த பெல்ட் என்பதை ஒரு ராட்சத சைக்கிள் செயினுடன் ஒப்பிடலாம். சக்கரங்களுக்கு நடுவே சைக்கிள் செயின் இயங்குவதைப்போல நகரும் படிகளுக்குக் கீழ் இந்த பெல்ட் இயங்குகிறது. இந்த பெல்ட்டை இயக்குவதற்கு மோட்டார்கள் உள்ளன. படிகள் சுற்றிச் சுற்றி வரும் வகையில் அந்த பெல்ட்டை இவை இயக்குகின்றன.
இந்த பெல்ட் எப்போதும் ஒரே திசையில்தான் சுற்றும். அதனால்தான் ஒரு எஸ்கலேட்டரைக் கொண்டு மேலே ஏறலாம். அல்லது கீழே இறங்கலாம். இரண்டையும் செய்ய முடியாது.
அமெரிக்காவில் 35,000 நகர்படிகள் உள்ளனவாம். வீடன் (Wheaton) ரயில் நிலையத்திலுள்ள எஸ்கலேட்டர் நீளமானது. 230 அடி உயரம் கொண்டது. இதைக் கடக்க 2 நிமிடங்கள் 40 நொடிகள் தேவைப்படும் (கண்களை மூடிக் கொண்டு இதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை மனதில் கொண்டு வாருங்கள்). இதற்கே பெருமூச்சு விடுபவர்கள் அடுத்த தகவலைப் படிக்க வேண்டாம். ஹாங்காங்கிலுள்ள விக்டோரியா சிகரத்தில் சரிவுகளில் அமைந்துள்ள எஸ்கலேட்டரில் பயணம் செய்து முடிக்க இருபது நிமிடங்களாகும். 2620 அடி உயரம் கொண்ட இந்த எஸ்கலேட்டர் 23 பகுதிகளைக் கொண்டது.
1892-ல் எஸ்கலேட்டர் என்பது முதல்முறையாக காப்புரிமை பெறப்பட்டது. அதன் வடிவம் அப்படியொன்றும் அதற்குப் பிறகு மாறிவிடவில்லை. எஸ்கலேட்டர் விபத்துகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏதோ தடுக்கிவிட்டது, விழுந்து எழுந்தார்கள் என்பதைத் தாண்டி எதிர்பாராத விதத்தில்கூட இந்த விபத்துகள் நடந்துள்ளன.
1987-ல் லண்டன் நிலத்தடி ரயில் நிலையம் ஒன்றிலுள்ள எஸ்கலேட்டர் திடீரென வெடித்தது. அந்தப் பகுதியிலிருந்து 31 பேர் இறந்தனர். எஸ்கலேட்டர் கருவிக்குக் கீழ்ப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே வந்த கிரீஸ் மற்றும் குப்பைத்தாள்தான் இதற்குக் காரணம் என்று கண்டுபிடித்தார்கள்.
அதற்குப் பிறகு அவசர நிலையில் எஸ்கலேட்டரை நிறுத்தக்கூடிய பொத்தான்கள், தானாகவே நிலத்தடிப் பகுதிகளைச் சுத்தம் செய்யக் கூடிய கருவிகள் போன்றவை இவற்றில் சேர்க்கப்பட்டுள்ளன.
உலக அளவில் ஓடிஸ், கோன், ஷின்ட்லர், தைஸென்க்ரூப் ஆகிய நான்கு நிறுவனங்கள்தான் பெருமளவில் எஸ்கலேட்டர்களை தயாரிக்கின்றன.
நான்கு வருடங்களுக்கு முன் சிடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சான் ஜாக் லிவி என்கிற பேராசிரியர் ஒரு புதிய கருவியை உருவாக்கினார். Lebytator என்று பெயரிடப்பட்ட இது மேலும், கீழுமாக இரு திசைகளிலும் செல்லக் கூடிய நகர்படிகள். இது இன்னும் பரவலாகவில்லை.
எஸ்கலேட்டர் விபத்துகளை நினைத்தால் கவலை உண்டாகிறது. என்றாலும் எஸ்கலேட்டர்களைத் தவிர்க்க வேண்டுமென்று விஞ்ஞானி கள் கூறுவதில்லை. ஏனென்றால் நமது வழக்கமான மாடிப் படிகளில் தடுக்கி விழுபவர்களின் எண்ணிக்கையே மிக அதிகமாக இருக்கிறது!
வீடுகளிலும் எஸ்கலேட்டர் பொருத்தத் தொடங்கிவிட்டார்கள் என்பதுதான் சமீப கால வியப்பு. “வீட்டுக்குள் எஸ்கலேட்டர்கள் குறைந்த நேரத்தில் கட்டித் தரப்படும் கட்டிடத்துக்குப் பாதிப்பு இருக்காது. வாழ்க்கைக்கு புது அர்த்தம் கொடுங்கள். மூத்தவர்களுக்கும், முடியாதவர்களுக்கும் வசதி செய்து கொடுங்கள்” என்றெல்லாம் கூறி இதற்கு விளம்பரம் செய்கிறார்கள். முக்கியமாக இதற்கு அப்படியொன்றும் அதிக மின்சாரம் செலவாகிவிடாது என்பது இவர்களின் முக்கிய அறைகூவலாக வருகிறது. மாடிப்படிகளையே எஸ்கலேட்டர் ஆக்க முடியும் என்கிறார்கள். முக்கியமாக அடுக்கு மாடிக் கட்டிடக் குடியிருப்புகளை இவர்கள் குறிவைக்கின்றனர். வெறும் ஆறு, ஏழு படிகள் கொண்ட எஸ்கலேட்டர் எல்லாம் வீடுகளில் இடம் பெறத் தொடங்கிவிட்டன.
Claustrophobia என்பது மூடிய அறைக்குள் சிறிது நேரம்கூட இருக்க முடியாத அதீத பயத்தைக் குறிக்கிறது. இந்தத் தன்மை கொண்டவர்களால் மின்தூக்கியில் (lift) சிறிது நேரம் கூட இருக்க முடியாது. இவர்களுக்கும் தங்கள் வீடுகளில் உள்ள நகர்படிகள் ஆசுவாசமளிக்கின்றன.