பல படங்களில் கேரளத்து கலையம்சத்துடன் கூடிய வீட்டில் நடிகர் நடிகைகள் ஆடுவதும் பாடுவதும் பார்த்திருப்போம். அந்த வீடு ரீனா’ஸ் வென்யூ. பழைய மகாபலிபுரம் சாலையில் இஸ்கான் கோயில் அருகில் இருக்கிறது இந்த வீடு. நகருக்கு வெளியில் இஸ்கான் கோயிலின் ரிங்காரம் கேட்டபடி மரங்களுக்கு மத்தியில் கண்களைப் பரிக்கும் கட்டுமானத்துடன் அமைந்திருக்கிறது இந்த வீடு.
‘சென்னை 28 (2ம் பாகம்)’ படக் காட்சி
ஓட்டுச் சாய்ப்பில் வீட்டின் பூமுகம் (முகப்பு) நம்மை வரவேற்கிறது. உள்ளே நுழைந்தால் வாசல் கதவு பாரம்பரியக் கதைகள் பேசுகின்றன. வாசலில் நின்று பார்த்தாலே உள்ளே இருக்கும் புஜையறை தெரியும். வீட்டிற்குள் சென்றாலே கோயிலுக்குள் சென்றதுபோல் இருக்கும். நடுமுற்றத்துடன் கூடிய இந்த வீடு கேரளக் கட்டுமான முறையில் கட்டப்பட்டது. நடுமுற்றம் நான்கு பக்கமும் வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் வீட்டுக்கு அழகைக் கூட்டுகின்றன. தேக்கில் செய்யப்பட்ட இந்தத் தூண்கள் காரைக்குடியில் இருந்து கொண்டுவரப்பட்டவை.
தொங்கு விளக்குகள், மணிகள் போன்ற சின்ன சின்ன பொருட்களும் கேரளத்திலிருந்து தருவிக்கப்பட்டுள்ளான. அவையும் இந்த வீட்டுக்கு சவுந்தர்யம் அளிக்கின்றன. உள் அறைகளில் ஆத்தங்குடி டைல்கள் போடப்பட்டிருக்கின்றன. காரைக்குடி செட்டிநாடு வீடுகளில் மட்டுமே காணக்கூடியவை இந்த ரக டைல்களைப் பிரத்யேகமாகத் தருவித்து அமைத்திருக்கிறார்கள். வளவுகளில் கேரளப் பாரம்பரிய சிவப்பு டைல்களைப் பதித்திருக்கிறார்கள். உத்திரத்திலும் இதேமாதிரியான சிவப்பு டைலக்ளைப் பதித்திருக்கிறார்கள். இது லாரி பேக்கரின் ஃபில்லர் ஸ்லாப் பணியை (Filler slab) ஒத்தவை.
திருவிதாங்கூர் ஊஞ்சல்
இந்த வீடு 2005 –ல் கட்டிமுடிக்கப்பட்டது. இதன் உரிமையாளார் ரீனா வேணுகோபலின் மகன் திருமணம் இந்தப் புதிய வீட்டில் நடந்தது . திருமணத்திற்கு வந்தவர்கள் இந்த வீட்டை சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்குக் கேட்டதால் ,மேலும் ரீனா வேணுகோபல் வெளி நாடுகளிலேயே அதிக நாட்கள் தங்குவதால் இதற்கு ஒப்புக்கொண்டார். பின் பல இயக்குனர்கள் கலைஞர்கள் இங்கு வந்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அது மட்டுமல்லாமல் திருமணங்களும் நடைபெற்றிருக்கின்றன. இதுவரை 120-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களும் 100-க்கும் மேற்பட்ட படங்களும் இங்கே படமாக்கப்பட்டுள்ளன. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊஞ்சல் ஒன்று உள்ளே இருக்கிறது. அதன் சிறப்பு என்னவென்றால் அது திருவாங்கூர் ராஜ வம்சத்தைச் சேர்ந்தது. ரீனா வேனுகோபால் அந்த வம்சத்தை சேர்ந்தவர். இந்த ஊஞ்சலில்தான் சினிமா நாயகிகள் இப்போது ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.