வீடுகளுக்குப் பூட்டுகள் மிக அவசியமான ஒன்று. அந்தக் காலத்தில் பூட்டுகள் என்பது மிகவும் கனமானவையாகவும் சிக்கலான பூட்டுகளைக் கொண்டதாகவும் இருக்கும். முன்பெல்லாம் சில முக்கியமான அறையின் பூட்டுகளைத் திறக்கச் சிலருக்கு மட்டுமே தெரியும். அதை அவர்கள் தங்கள் வாரிசுகளுக்குச் சொல்லித் தருவார்கள். தலைமுறை தலைமுறையாக அந்த நுட்பம் சொல்லிக் கொடுக்கப்படும்.
தொழில்நுட்பங்கள் வளர வளர பூட்டுகள் சிறியதாயின. பூட்டுகளைக் கையாளும் முறையும் எளிமையானது. ஆனால், இன்றைக்குப் பூட்டுகளுக்குச் சாவல்களும் அதிகம். ஏனெனில் பூட்டை உடைக்கும் திறனும் வளர்ந்திருக்கிறது. இந்த இடத்தில்தான் வீட்டை இருந்த இடத்திலிருந்தே கண்காணிக்கும் தொழில்நுட்பம் எல்லாம் வளர்ந்திருக்கிறது. சரி ஆனால் வீட்டை இருந்த இடத்திலிருந்து பூட்ட முடியுமா?
முடியும் என்கிறது ஒரு புதிய தொழில்நுட்டம். உங்கள் ஸ்மார்ட் போன் வழியாக இருந்த இடத்திலிருந்தே உங்கள் வீட்டைப் பூட்ட முடியும் என்கிறது நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு. ஃப்ரைடே லாக் என்பது அந்தப் புதிய பூட்டின் பெயர். பிஜார்க் இங்கெல்ஸ் என்பது கண்டுபிடித்த நிறுவனத்தின் பெயர்.
ஸ்காண்டிநேவியா தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதிய பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் ஸ்மார்ட் போனில் இதற்காகத் தனியாக செயலி இருக்கிறது. இந்தச் செயலியைத் தரவிறக்கம் செய்து தருவார்கள். இந்தச் செயலியில் நீங்கள் உங்கள் வீட்டைப் பயன்படுத்தும் மற்றவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக கணவன், மனைவி, குழந்தைகள், வீட்டிலுள்ள பெரியவர்கள் அவர்களையும் இணைத்துக்கொள்ளலாம். புதியவர்கள் பூட்டைப் பயன்படுத்த முடியாது. வீட்டுக்கு யாராவது நண்பர்கள் வந்திருக்கிறார்கள். வீட்டை அவர்களுக்குத் திறந்துகொடுக்க வேண்டும் என்றால் உங்கள் அலுவலகத்தில் இருந்துகொண்டே ஸ்மார்ட் போனைத் தட்டினால் போதுமானது. கதவு திறந்துகொள்ளும். வீட்டைப் பூட்ட மறந்துவிட்டால், தானாகப் பூட்டிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.
உங்கள் செயலியில் உள்ள உறுப்பினர்கள் யார் கதவைத் திறக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடியும். வீட்டின் பராமரிப்புப் பணிக்காக கதவைத் திறந்துகொடுக்க வேண்டுமென்றாலும் அவர் வரும்போது திறந்துகொடுக்கலாம். அவர் செல்லும்போது பூட்டிக்கொள்ளலாம். இவ்வளவு தொழில்நுட்பம் கொண்ட இந்தப் பூட்டு பெரியதாக இருக்கும் என நினைக்க வேண்டாம். வட்ட வடிவிலான இது ஏறத்தாழ 6 செண்டி மீட்டர் விட்டம் கொண்டதாகத்தான் இருக்கிறது. இந்தப் பூட்டு தொழில்நுட்பம் மேற்குலக நாடுகளில் பிரபலமாகி வருகிறது. இப்போது இதன் விலை 249 அமெரிக்க டாலர்.